Dr. முத்துலட்சுமி ரெட்டி

  • இந்தியாவின் முதல் பெண் மருத்துவர், முதல் மக்கள் பிரதிநிதி என ஏகப்பட்ட ‘முதல்’களுக்கு சொந்தக்காரர், நம் முத்துலட்சுமி ரெட்டி! இந்தியாவில் இந்த நிமிடம் பிறந்துவிழும் பெண் குழந்தைக்காக, நூறாண்டுகளுக்கு முன்னரே திட்டங்களை வகுத்து செயல்பட்ட மாபெரும் பெண் சீர்திருத்தவாதி!
  • புதுக்கோட்டையில் எளிய குடும்பத்தில் பிறந்தவர், முத்துலட்சுமி ரெட்டி. அப்பா சுப்பிரமணிய ஐயரும் அம்மா சாந்தம்மாளும் கலப்பு திருமணம் செய்தவர்கள். ஆதலால், அவரது குடும்பம் கடுமையான சமூக ஒதுக்குதலை சந்தித்தது. கல்விச்சாலையில் முத்துலட்சுமி எள்ளி நகையாடப்பட்டதற்கு, நிறைய சான்றுகள் உள்ளன. ஆனால், ‘புரட்சியாளர்களை அவமானங்கள் வீழ்த்தாது, உயர்த்தும்’ என்ற மொழிக்கேற்ப, முத்துலட்சுமி இரும்பென வலிமை கொண்டவரானார். ’இந்த சமூகத்தில் எதன் காரணமாகவும் எவரையும் ஒடுக்குவதை என்னால் ஏற்கமுடியாது. அப்படி ஒடுக்குவீர்களானால், உங்களை எதிர்க்கும் படையணியில் முதல் வீராங்கனையாக நான் நிற்பேன்…’ என்று உறுதியேற்றபோது, அவருக்கு வயது இருபதுக்குள் மட்டுமே!
  • முத்துலட்சுமியின் முதல் சீர்திருத்தம் முக்கியமான ஒன்று. அப்போதெல்லாம் மருத்துவமனைகளில் உயர்சாதிப் பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பாலூட்டுவதற்காக தாழ்த்தப்பட்ட பெண்கள் பணியமர்த்தப்பட்டிருந்தார்கள். ’தாய்ப்பாலிலுமா சாதி…’ என்று வெகுண்டெழுந்தார், முத்துலட்சுமி. ‘Wet nursing தாய்ப்பால் அளிக்க இயலாத பெண்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு மருத்துவ நடைமுறை. அதில் கொண்டுவந்து உங்களின் பாழாய்ப்போன சாதியை நுழைக்காதீர்கள்…’ என்று தீவிரமாக போராடினார், அவர். மிகக்குறுகிய காலத்திலேயே அந்த நடைமுறை மருத்துவமனை வட்டாரங்களில் வழக்கொழிந்து போனது.
  • முத்துலட்சுமியின் மீது அதிகம் தாக்கம் செலுத்திய ஆளுமையாக அன்னிபெசண்ட் அம்மையார் இருந்தார். முத்துலட்சுமியின் அத்தனை சமூக சீர்திருத்த நடவடிக்கைகளும் அன்னிபெசண்ட் அம்மையாரின் ‘இந்திய பெண்கள் சங்கத்தில் (Women’s Indian Association)’ இணைந்தபிறகே, உச்சம் கொண்டன.
  • 1927ம் ஆண்டு, இந்திய பெண்கள் சங்கத்தால் பரிந்துரைக்கப்பட்டு மெட்ராஸ் மாகாண சட்டசபையில் நுழைந்தார், முத்துலட்சுமி ரெட்டி. அதிலிருந்து, 1930ல் மாகாண சட்டசபை உறுப்பினர் பதவியில் இருந்து விலகும் வரை, அவர் பெண்களுக்காக தொடர்ந்து குரல்கொடுத்தபடியே இருந்தார். பெண்களின் திருமண வயதை உயர்த்தும் மசோதா, தேவதாசி முறை ஒழிப்பு மசோதா என, முத்துலட்சுமி கொண்டுவந்த மசோதாக்கள் எல்லாமே, பழமைவாதிகளின் நெஞ்சியில் இடியென இறங்கின. தேவதாசி முறை ஒழிப்பு மசோதாவுக்காக அவர் களத்தில் இறங்கி நூற்றுக்கும் மேற்பட்ட தேவதாசி பெண்களின் வாக்குமூலங்களை பதிவு செய்தார். ஆனால், தேவதாசி முறை ஒழிப்பு 1947ம் ஆண்டே சட்டமாக முடிந்தது!
  • 1914ம் ஆண்டு, மருத்துவர் சுந்தர ரெட்டியை திருமணம் செய்தார், முத்துலட்சுமி ரெட்டி. அந்தத் திருமணத்துக்கு முத்துலட்சுமி போட்ட ஒரே நிபந்தனை, ‘என்னை சமமாக மதிக்கவேண்டும். என் கனவுகளுக்கு குறுக்கே நிற்கக்கூடாது’ என்பது.
  • முத்துலட்சுமி விதியால் துரத்தப்பட்டவர். பிறக்கும்போதே, கடும் வயிற்றுப்போக்கு மற்றும் சளியால் அவர் பாதிக்கப்பட்டார். அடுத்து, பள்ளி படிக்கும்போது ரத்தசோகை வந்தது. கல்லூரி போகும்போது ஆஸ்துமா நோயும் சேர்ந்துகொண்டது. பிள்ளைகள் பெற்றபிறகு இன்னும் பலவீனமானவராக அவர் மாறினார். ஆனால், அனைத்து இடர்களையும் விடாமுயற்சியாலும் மன உறுதியாலும் வென்று வாழ்வில் உச்சம் தொட்டார், முத்துலட்சுமி ரெட்டி.
  • அவ்வை இல்லமும், அடையாறு கேன்ஸர் இன்ஸ்டிடியூட்டும் முத்துலட்சுமியின் வாழ்க்கையை இன்னும் அர்த்தமுடையதாக மாற்றியவை. அவ்வை இல்லம் ஒடுக்கப்பட்ட, சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட பெண்களுக்காக முத்துலட்சுமி உருவாக்கியது. அடையாறு கேன்ஸர் இன்ஸ்டிடியூட்டைப் பற்றி அதிகம் சொல்லவேண்டியதில்லை. 1954ம் ஆண்டு அவர் அதை உருவாக்கினார். ஆரம்பத்தில் முத்துலட்சுமிக்கு கடும் எதிர்ப்பு இருந்தது. ‘கேன்ஸர் வந்தால் எல்லோரும் செத்துப்போய் விடுவார்கள் அல்லவா… அதற்கு எதற்கு ஒரு மருத்துவமனை’ என்று ஏசினார்கள். ஆனால், முத்துலட்சுமி எப்போதும் போல மனமுடையாமல் நின்றார். இந்திய பெண்கள் சங்கத்தின் வாயிலாக நிதிதிரட்டி, சிறிய அளவில் அடையாறு கேன்ஸர் இன்ஸ்டிடியூட்டை தொடங்கினார். இன்று, கிட்டத்தட்ட 80,000 கேன்ஸர் பாதிப்பாளர்களுக்கு ஆண்டுதோறும் சிகிச்சை அளிக்கும் மாபெரும் மருத்துவ நிறுவனமாக, அடையாறு கேன்ஸர் இன்ஸ்டிடியூட் விளங்குகிறது!
  • ‘சட்டங்களில் இல்லை மாற்றம். அந்த சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் தான் இருக்கிறது உண்மையான மாற்றம்…’ என்பது முத்துலட்சுமியின் மேற்கோள்களில் முக்கியமானது!