மொழி

கனவு கடிதம் – 1

வணக்கம் விஜயலட்சுமி,

முதலில், நீங்கள் எனக்கு மின்னஞ்சல் அனுப்ப எண்ணியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

 1. லட்சியம் என்பது தொழில்முனைவிலிருந்து முற்றிலும் வேறுபட்டது.
 1. ஒரு விஷயத்தில் நீங்கள் லட்சியம் கொண்டு தீவிரமாக முயற்சித்தால், அது உங்களை அந்த விஷயத்தில் சிறந்தவராக மாற்றும்.
 1. என்னைப் பொறுத்தவரை, என்னுடைய லட்சியமே என்னை சிறந்த புரோகிராமராக மாற்றியது.
 1. கவனிக்கவும். ‘சிறந்த’ புரோகிராமர் தான். மிகச்சிறந்த புரோகிராமர் இல்லை. அப்படி நிறைய பேர் இங்கே இருக்கிறார்கள்.
 1. ஆனால், அவர்களால் வெற்றிகரமான தொழில்முனைவர்களாக உருவாக முடியவில்லை.
 1. தெரியுமா? ஒரு சிறந்த புரோகிராமராக உருவாவதற்கு எனக்கு கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் எடுத்தது.
 1. ஒரு வெற்றிகரமான தொழில்முனைவராக உருவாக, அதைவிடவும் அதிக காலம். அதாவது, 15 ஆண்டுகள்!
 1. மனதில் கொள்ளுங்கள். லட்சியம் உங்களை ஒரு நிபுணராக மட்டுமே மாற்றும்.
 1. ஆனால், தொழில்முனைவு அந்த நிபுணத்துவத்தை பயன்படுத்தி பெரிய வணிகத்தை உருவாக்கும்.
 1. ஆகவே, லட்சியம் மற்றும் தொழில்முனைவு இரண்டுமே வேறுபட்டது.
 1. 25 ஆண்டுகள் உழைப்புக்குப் பிறகே, நான் இப்போது இருக்கும் இடத்தை அடைந்திருக்கிறேன்.
 1. 25 ஆண்டுகள் என்பது பெரிதாக தெரிகிறதா? அஞ்சவேண்டாம்! என்னைவிட குறைந்த காலத்தில் எத்தனையோ தொழில்முனைர்கள் சாதித்துக் காட்டியிருக்கிறார்கள்.
 1. எல்லாவற்றுக்கும் மேலே, ஒரு கம்பெனியை உருவாக்கி நிலைநிறுத்துவது என்பது நிறைய உழைப்பையும் அர்ப்பணிப்பையும் கோருவது.
 1. தொழில்முனைவு என்பது சீக்கிரமே பணக்காரன் ஆவதற்கான செயல்திட்டம் அல்ல. அவ்வளவு எளிதாக அதை அர்த்தப்படுத்திக்கொள்ளவும் கூடாது.
 1. என்னளவில், தொழில்முனைவு என்பது எனக்கு பணத்தையும் கடந்து, மகிழ்ச்சியை அளிக்கக்கூடியதாகவே இருக்கிறது.

எனவே, coding உங்களது லட்சியம் என்றால், இன்னும் சில வருடங்கள் நீங்கள் அதில் செலவிட வேண்டும். அப்போது தான் அதில் நிபுணத்துவம் பெறமுடியும். அதற்கு நீங்கள் ஒரு புத்தகத்தை மட்டும் படித்தால் போதாது. 1990களில் எந்த இணையமும் இல்லை. புத்தகம் தான் ஒரே வாய்ப்பு. ஆகவே, நான் புத்தகத்தை தேடிப்பிடித்து coding கற்றுக்கொண்டேன். ஆனால், இப்போது நிலைமை அப்படியல்ல. எல்லா அறிவுமே இணையத்தில் எளிதாக கிடைக்கிறது. அதை நன்றாக பயன்படுத்துங்கள்! முக்கியமாக, கற்றுக்கொள்வதை விட பயிற்சி செய்வதில் அதிக ஆர்வம் காட்டுங்கள். நீங்கள் நிபுணரான பிறகு ஒரு நிமிடம் ஒதுக்குங்கள். அப்போது, உங்கள் coding அறிவை வைத்து மென்பொருள் துறையில் எந்தப் பிரச்சனையை தீர்க்கமுடியுமென்று யோசியுங்கள். அடுத்த நிமிடம், நீங்கள் தொழில்முனைவாளராக மாறுவதற்கான பாதையில் நின்றிருப்பீர்கள்! ஆனால், ஒன்றை மறக்காதீர்கள். தொழில்முனைவர்கள் என்பவர்கள் வெறுமனே பணம் பண்ணுபவர்கள் அல்ல, பிரச்சனைகளை தீர்ப்பவர்கள்! பணமும் முக்கியம் தான். ஆனால், அது நீங்கள் அந்தப் பிரச்சனையை தீர்ப்பதால் கிடைக்கும் ஒரு துணைப்பொருளாக மட்டுமே எப்போதும் இருக்கவேண்டும்!

கனவு தமிழ்நாடு இயக்கத்தின் சார்பாக உங்கள் வெற்றிக்கு என் வாழ்த்துகள்!

நன்றி.

சுரேஷ் சம்பந்தம்,

தன்னார்வலர், கனவு தமிழ்நாடு.

*****

வணக்கம் சார்…

நான் விஜயலட்சுமி. விருதுநகர் மாவட்டம், ஶ்ரீவில்லிபுத்தூர் என் சொந்த ஊர்.

உங்கள் நேர்காணல்களை கண்டேன். பெரும் உந்துதலாக இருந்தது. நான் இப்போது சிவகாசியில் இருக்கும் லயன்ஸ் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறேன். என்னுடைய பெற்றோர்கள் மெத்தப் படித்தவர்கள் அல்ல. ஆனாலும், என் கனவைப் பின் தொடர எந்த தடையும் சொல்வதில்லை. எனக்கு உங்களைப் போல coder ஆகி, பெரிய தொழில்முனைவோராக மாற வேண்டும் என்று ஆசை. நீங்கள் 1500 ரூபாய்க்கு வாங்கி படித்து தொழில்முனைவராக மாறியதாக கூறினீர்கள். நானும் சிறுக சேமித்து, 1000 ரூபாய் சேர்த்து வைத்திருக்கிறேன். எனக்கு ஒரு coding புத்தகத்தை நீங்கள் பரிந்துரைத்தால், அதைப் படித்து நல்ல coderஆக மாறி, உங்களைப் போல சாதிப்பேன் என்று உறுதிகூறுகிறேன். இது உங்கள் மின்னஞ்சல் முகவரி தானா என சரியாகத் தெரியவில்லை. ஆனால், உங்களுடையதாக இருக்கவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன். தயவுசெய்து, என் கனவை அடைவதற்கு உதவுங்கள்.

நன்றி.

– விஜயலட்சுமி