மொழி

ஜெயப்பிரகாஷ் நாராயண்

  • இந்தியாவின் வரலாற்றுப்பக்கங்களில் அவ்வளவாக போற்றப்படாத, ஆனால், போற்றப்பட வேண்டிய மகத்தான தலைவன், ஜெயப்பிரகாஷ் நாராயண்! ’ஒரு காந்தியவாதி நினைத்தால் எவ்வளவு பெரிய அரசாங்கத்தையும் கால்புழுதியென தட்டிவிட்டு முன்செல்ல முடியும்’ என்று நிரூபித்துக் காட்டியவர்!
  • 1970களின் ஆரம்பகாலத்தில், சங்கிலி அறுந்த மதயானையென ஆடிக்கொண்டிருந்தார், இந்திரா. அவசரநிலை அந்த ஆட்டத்தின் உச்சம்! அப்போது ஜனநாயக அங்குசமேந்தி களத்திற்கு வந்தார், ஜெபி. தன்னலமற்ற போராட்டங்களின் மூலம் மக்களைத் திரட்டி, இரண்டே ஆண்டுகளில் அவசரநிலையை முடிவுக்குக் கொண்டுவந்தார், அவர். 
  • இந்திராவுக்கு இன்னொரு நேருவாக இருந்தவர், ஜெபி. இளம்வயதில் ஜெபியின் மடியில் இந்திரா தவழ்ந்திருக்கிறார். அப்படிப்பட்டவரை, சண்டிகர் சிறையில் அடைத்து கொடுமைப்படுத்தினார், இந்திரா. அங்கே ஜெபிக்கு சிறுநீரகம் செயலிழந்தது. ஆனாலும் மனமுடையாமல், ‘அராஜக இந்திராவை வீழ்த்தி, இந்திய ஜனநாயகத்தை மீட்டெடுப்பேன்’ என்று சூளுரைத்தார். அதைச்செய்து விட்டே, இறுதியில் கண்மூடினார்.
  • ஜெபி, இருபதாம் நுற்றாண்டின் மிகச்சிறந்த தியாகி. மனைவி பிரபாவதியை துறந்த பிறகு, அவருக்கென்று யாருமே இல்லை. தனிமையில், எந்த சொத்து சுகமும் இல்லாமல் தான் அவர் வாழ்ந்தார். ஒருவேளை இந்திரா அவசரநிலையை அறிவிக்காமல் இருந்திருந்தால், காந்திய நிர்மாணப்பணிகளிலேயே வாழ்நாள் முழுவதையும் செலவழித்து மறைந்திருப்பார், நம் அன்பு ஜெபி.
  • 1970கள் இந்தியாவின் மிகமோசமான காலகட்டம். அப்போதைய இளைஞர்கள், பெரும்பாலும் எல்லாவற்றின் மீதும் நம்பிக்கையிழந்தவர்களாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள். கடும் வேலை வாய்ப்பின்மை அவர்களை அழிவுப்பாதைக்கு செலுத்திக் கொண்டிருந்தது. அப்போது தூரத்துச் சூரியனென தோன்றினார், ஜெபி. அவரது ‘முழுப்புரட்சி (Total Revolution)’ இந்திய இளைஞர்களை நம்பிக்கை கொள்ளவைத்தது. ‘இந்த நாடு இன்னும் நம்மை முழுவதுமாக கைவிடவில்லை’ என்ற எண்ணத்தை அவர்களுக்கு அளித்தது. அவ்வகையில் பார்த்தால், ஜெபி இந்தியாவின் இரண்டாம் காந்தியென மனதில் நிறுத்தி புகழப்பட வேண்டியவர்.
  • காங்கிரஸ் நல்ல கட்சி தான். ஆனால், அளவற்ற, எதிரிகளே அற்ற அதிகாரம் அவர்களை ஆணவம் மிக்கவர்களாக மாற்றியது. நம்பூதிரி பாட்டும் அண்ணாவும் அந்த ஆணவத்தின் மீது விழுந்த முதல் அடி என்றால், ஜெபி இரண்டாம் அடி! ஜெபி அமைத்த ஜனதா அரசு தான் இந்தியாவின் முதல் காங்கிரஸ் அல்லாத மைய அரசு. அவர் பிரதமராக்கிய மொரார்ஜி தேசாய் தான்,  இந்தியாவின் காங்கிரஸ் அல்லாத முதல் பிரதமர்!
  • ஜெபி எப்போதுமே பதவிகளை விரும்பியதில்லை. நேருவுக்கு அடுத்து பிரதமராகும் வாய்ப்பு அவருக்கு இருந்தது. ஆனால், ‘நான் கடைசிவரை ஒரு காந்தியவாதியாக சமூக நிர்மாணப்பணிகளில் மட்டுமே கவனம் செலுத்த விரும்புகிறேன்’ என்று சொல்லிவிட்டு, மக்களை நோக்கி வந்தார், ஜெபி. அடுத்து, 1977ல் ஜனதா அரசு அமைந்தபோதும் அவருக்கு பிரதமராகும் வாய்ப்பு இருந்தது. அந்த அரசே அவர் உருவாக்கியது தான். ஆனாலும், மொரார்ஜி தேசாயை பிரதமராக்கிவிட்டு, மறுபடியும் மக்களில் ஒருவராகவே இருக்க தீர்மானித்தார், ஜெபி!
  • ஜெபி, தலைவன்களின் தலைவன்! இன்று வடக்கே ஆதிக்கம் செலுத்தும் லல்லு, நிதிஷ், சரத் யாதவ், முலாயம் என அத்தனைத் தலைவர்களையும் அவரே உருவாக்கினார்!