மொழி

நம்மாழ்வார்

 • இயற்கை விவசாயத்தின் உலகளாவிய தூதுவர், நம்மாழ்வார்! ‘இயற்கையும் உயிர் தான். நீ அதை நேசித்தால், அது உன்னை நேசிக்கும்’ என்று உணர்த்தியவர்!
 • தஞ்சை இளவங்காட்டில் பிறந்தவர் நம்மாழ்வார். மிகச்செழிப்பான பகுதி அது. அங்கே, பசுமையைப் பார்த்தபடியே வளர்ந்தார், அவர்.
 • அண்ணாமலைப் பல்கலையில் பட்டப் படிப்பை முடித்ததும் கோவில்பட்டியில் இருக்கும் வேளாண் பல்கலைக்கு பணிக்குச் சென்றார், நம்மாழ்வார். அந்த வறண்ட வானம் பார்த்த பூமி தான் நம்மாழ்வாரின் வாழ்க்கையை மாற்றியது. ‘ஏன் இந்த நிலம் இப்படிக் கிடக்கிறது…’ என்று யோசிக்க ஆரம்பித்தவர், செயற்கை உரங்களின் மோசமான விளைவுகளை அறிந்து கொண்டார். அதில் இருந்து தமிழ் விவசாயிகளை எப்படியாவது காக்க வேண்டும் என்று உறுதி பூண்டார். உடனே, அரசு வேலையை உதறிவிட்டு, அரைத்துணி கட்டிக்கொண்டு விவசாயிகளை நோக்கி புறப்பட்டு விட்டார்.
 • இந்தியா வில் நிறைய இயற்கை வேளாண் ஆர்வலர்கள், விஞ்ஞானிகள் இருக்கிறார்கள். ஆனால், அவர்களிடமிருந்து நம்மாழ்வார் வேறுபடும் இடம், ‘அர்ப்பணிப்பு’. தான் நம்பும் ஒன்றுக்காக தன்னுடைய வாழ்க்கையையே அர்ப்பணிக்கும் துணிச்சல் மிகச்சிலருக்கே இருக்கும். நம்மாழ்வார் அப்படிப்பட்டவர். ஏறக்குறைய தமிழ்நாட்டின் எல்லா மாவட்டங்களுக்கும் அவர் பயணித்திருக்கிறார். 50 ஆண்டு பொதுவாழ்க்கை அவருக்கு இருக்கிறது. இது சாதாரணமானதல்ல.
 • இயற்கை விவசாயத்துக்கு நம்மாழ்வார் சொல்லிய வரையறை மிகவும் எளிமையானது. ‘மண்ணிலேயே அனைத்து ஆற்றலும் இருக்கிறது. ஒரு செடியோ, மரமோ வளர அதுவே போதுமானது’ என்பதே அது!
 • நம்மாழ்வார் ஒரு விஞ்ஞானி தான். ஆனால், ‘நான் சொல்வதெல்லாமே புதுமையானவை’ என்று அவர் சொன்னதில்லை. ‘தமிழர்களுக்கு என்று ஒரு மரபு இருக்கிறது. அவன் வேளாண்மையை தொழிலாக பார்த்தவனில்லை, வாழ்வியலாக வாழ்ந்து காட்டியவன். அதை அப்படியே நாம் தொடர்ந்தால் போதும்’ என்றே, அவர் எல்லா இடங்களிலும் பேசினார்.
 • நம்மாழ்வார் தமிழகத்துக்கு அளித்த இயற்கைக்கொடை, கரூர் மாவட்டம் கடவூரில் இருக்கும் ‘வானகம்’! நம்மாழ்வார் முதன்முதலில் அங்கே சென்றபோது அதுவொரு பெரிய பொட்டல் காடு. ஆனால், மிகச்சில வருடங்களிலேயே அதை ஒரு பூஞ்சோலை போல மாற்றிக் காட்டினார். நம்மாழ்வார். அவரது இன்னுடல் வானகத்திலேயே உறங்குகிறது!
 • வானகம் வெறும் நிலம் மட்டுமல்ல, அது ஓர் இயக்கம்! இயற்கை வேளாண்மையின் மகத்துவம் குறித்து அடுத்த தலைமுறைகளுக்கு அழகாக எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள், அங்கே இருக்கும் பெரியவர்கள். வானகத்திற்கு சென்று திரும்பும் எந்த இளைஞனும், அவனுக்குள் இயற்கையின் பேரொளி பரவுவதை உணர்வான்.
 • ‘செயற்கை கலந்த எதுவுமே மண்ணுக்கு எதிரி. அது தற்காலிகமாக வேண்டுமானால் பலன் தரலாம். ஆனால், நாளடைவில் மண்ணை அது பாழாக்கும். அதை உணர்ந்து நாம் செயல்பட வேண்டும்’ என்று கடைசிவரை செயற்கை உரங்களுக்கு எதிராக கடுமையாக போராடினார், நம்மாழ்வார். அவரது உயிர்கூட மீத்தேன் திட்டத்துக்கு எதிரான போராட்டக் களத்திலேயே பிரிந்தது.
 • நம்மாழ்வாரின் ‘ஏன் வேண்டும் இயற்கை வேளாண்மை?’, ‘தாய் மண்ணே வணக்கம்’ போன்ற புத்தகங்கள் மிகமுக்கியமானவை. மண் சார்ந்த இயற்கை விவசாயத்தை மிகவும் எளிய முறையில் எடுத்துச்சொல்பவை, அவை.
 • நம்மாழ்வாருக்கு முன்னால் தற்சார்பு வாழ்க்கை ஒரு நடைமுறை சாத்தியமாக இங்கில்லை. ’நமக்குத் தேவையான அனைத்தையும் நாமே உருவாக்கிக் கொள்ளவேண்டும்’ என்பது, உண்மையிலேயே பெரும் சவால். ஆனால், நம்மாழ்வார் அதை வெற்றிகரமாக நிகழ்த்திக் காட்டினார். 75 வயதில் இறக்கும் வரை, அவர் தற்சார்பு வாழ்க்கையில் இருந்து விலகவே இல்லை.
 • ஒரு பயணம். அருகில் இருப்பவர்களிடம், ‘உங்கள் கல்லறையில் என்ன வாசகம் எழு துவீர்கள்’ என்றொரு விளையாட்டை ஆரம்பிக்கிறார், நம்மாழ்வார். எல்லோரும் ஏதோ ஒன்றை சொல்கிறார்கள். நம்மாழ்வாரின் முறை வருகிறது. ஆழ்ந்து யோசித்து, ’பலபேரை தூக்கத்தில் இருந்து எழுப்பியவன் இங்கே தூங்குகிறான் என்று எழுதுங்கள்’ என்கிறார், அவர். சுற்றியிருந்தவர்கள் ஆமோதித்து சிரிக்கிறார்கள். ஆம்! செயற்கையின் காலில் விழுந்து கிடந்த பலரை, தலையில் தட்டியெழுப்பிய ‘தற்சார்பு தாத்தன்’, நம்மாழ்வார்!
 • நம்மாழ்வார் எதையும் விவசாயிகளுக்கு கற்றுக்கொடுக்கவில்லை. மாறாக, அவர் அவர்களுக்கு எல்லாவற்றையும் ‘புரியவைத்தார்’. எளிய மொழியில், அழகிய உவமைகளில், ‘உங்கள் நிலத்தில் இது தான் பிரச்சனை. இதைச் செய்தால் உங்கள் நிலம் நலமாகும்’ என்று எடுத்துச் சொன்னார். விவசாயிகள் திரள் திரளாக அவரால் விழிப்புணர்வு பெற்றனர்.
 • எல்லோரும் கடைசியில் இயற்கையிடம் தான் தஞ்சமடைந்தாக வேண்டும். அதை நம்மாழ்வார் போல உலகுக்கு உணர்த்தியவர்  வேறு யாரும் இல்லை. அதற்காக, தமிழர்கள் மட்டுமில்லை, மனித இனமே அவருக்கு நன்றி சொல்லவேண்டியிருக்கிறது!