மொழி

பெட்ரிசியா நாராயண்

[vc_row][vc_column][vc_column_text]

  • சேர்த்து வைத்த பணம் அல்ல, வாங்கிப்போட்ட சொத்து அல்ல, எடுத்துக்கொண்ட தொழிலை எவ்வளவு நேசிக்கிறோம் என்பதே, ஒரு தொழில் முனைவாளரை தனித்துக் காட்டுகிறது! அந்த வகையில், விதியால் தொடர்ச்சியாக வீழ்த்தப்பட்ட போதும், நேசத்துடன் பணிசெய்து வென்று காட்டிய அதிசயப் பெண், பெட்ரிசியா நாராயண்!
  • 1980களில், வெறும் இரண்டு பேருடன் சென்னை மெரினா கடற்கரையில் ஒரு பலகாரக் கடையை தொடங்கினார், பெட்ரிசியா. ஆனால், இன்று 200 பேருக்கு மேல் அவர் உருவாக்கியிருக்கும் ’Sandeepha Chain of Restaurants’ உணவகங்களில் பணிபுரிகிறார்கள்!
  • பெட்ரிசியா விதியால் வீழ்த்தப்பட்டவர் என்று சொன்னதற்கு பின்னால், காரணம் இருக்கிறது. அதாவது, 17 வயதிலேயே அவருக்கு நாராயணுடன் திருமணம் ஆகிவிட்டது. அதுவும், பெற்றோரை எதிர்த்து கலப்புத் திருமணம். ஆரம்பத்தில், இல்லறம் நன்றாகவே சென்றது. ஆனால், போகப்போக போதைப்பொருளுக்கு அடிமையானார், நாராயண். ஒரு கட்டத்தில், அடுத்தநாள் செலவுக்கே பணமில்லாத அளவுக்கு வாழ்க்கையின் ஓரத்துக்கு தள்ளப் பட்டார், பெட்ரிசியா. பிறகு, ‘இனியும் இந்த திருமண பந்தத்தை தொடர்வது நல்லதல்ல…’ என்ற புரிதல் ஏற்பட்டு, நாராயணை பிரிந்தார், பெட்ரிசியா. அப்போது பெட்ரிசியாவை நம்பி, ஒரு மகன் ஒரு மகள் என இரண்டு உயிர்கள் இருந்தன. என்ன செய்வது? சிறிதாக வீட்டிலேயே உணவுப்பொருட்களை தயாரித்து விற்கிறார், பெட்ரிசியா. ஆனால், அந்த வருமானம் போதுமானதாக இல்லை. எனவே, தெரிந்தவர்கள் அளித்த சிறிய நிதியுதவியுடன் மெரினா கடற்கரையில் ஒரு எளிய பலகாரக் கடையை தொடங்கினார், பெட்ரிசியா. அது தான் இன்றைய, ’Sandeepha Chain of Restaurants’ என்ற நிறுவனம்!
  • ‘Sandeepha’ என்பது, பெட்ரிசியாவின் செல்லமகளின் பெயர். இதற்கு பின்னால், இன்னொரு சோகம் இருக்கிறது. அப்போது, ஆண்டு 2004. சென்னையின் சில அரசு அலுவலகங்களுக்கு உணவு தயாரிப்பாளராகவும், கூடவே ’Sangeetha Restaurants’-ன் இயக்குனராகவும், ஒரு நிம்மதியான வாழ்க்கையை நடத்திக்கொண்டு இருந்தார், பெட்ரிசியா. ‘வாழ்வின் கொடிய பாதைகளை எல்லாம் கடந்து ஒரு நிலைமைக்கு வந்தாயிற்று. இனி பெரிய கவலைகள் ஏதுமில்லை’ என்று அவர் நினைத்த காலம் அது. ஆனால், அவளது மகள் சந்தீபாவும் அவரது இணையரும் ஒரு எதிர்பாரா விபத்தில் உயரிழந்த செய்தி, அவரை நிலைகுலைய வைத்தது. இடி விழுந்த மரம் போல, எண்ணங்களெல்லாம் கருமையாகி நகரக்கூட தெம்பில்லாமல் வீழ்ந்தார் பெட்ரிசியா. இருந்தாலும், ‘உங்களால் சந்தீபாவின் பெயரை வரலாற்றில் நிறுத்தமுடியும், அம்மா… ’ என்று, மகன் சொல்லிய வார்த்தைகள் பெட்ரிசியாவை திரும்பவும் எழுந்து ஓட வைத்தன!
  • பெட்ரிசியா உணவகத்துறையில் வென்றதற்கு முக்கிய காரணம், அவருக்கு உணவின் மீதும் உணவுத்தயாரிப்பின் மீதும் இருந்த தீராக்காதல். படுத்து கால்நீட்டினால் சுவர்கள் இடிக்கும் சிறிய வீட்டில் இருந்தபடி ஊறுகாய் போட்டு விற்று தினமும் பத்து, இருபது ரூபாய் லாபம் பார்த்தபோதும் சரி, அகன்ற மெரினா கடற்கரையில் ஒரு சிறிய கடை திறந்து சமோசா, பஜ்ஜி விற்று தினமும் 25,000 ரூபாய் லாபம் பார்த்தபோதும் சரி, இப்போது சென்னையின் பிரதான இடங்களில் பெரிய உணவகங்களை திறந்து தினமும் 2 லட்சம் ரூபாய் லாபம் பார்க்கும் போதும் சரி, அவரது உணவுக்காதல் தோல்வியுறாமலேயே நிற்கிறது!
  • உணவுக்காதலுக்கு அடுத்தபடியாக பெட்ரிசியாவை உயர்த்தியது, அவரது அயரா உழைப்பு. 1980களில் மெரினாவில் நிறைய சமோசா, பஜ்ஜி கடைகள் இருந்தன. ஆனால், பெட்ரிசியாவின் தனித்தன்மையான உழைப்பைப் பார்த்தே, அவருக்கு குடிசை மாற்று வாரிய அலுவலகத்துக்கான உணவு தயாரிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அடுத்து, Bank of Madurai, National Port Trust Management School ஆகிய இடங்களுக்கு உணவு தயாரிக்கும் பொறுப்பு கிடைத்த தற்கும் அதுவே காரணம். இதில், National Port Trust Management School -ல் மொத்தம் 700 மாணவர்களுக்கு உணவு தயாரிக்க வேண்டும். அந்த சவாலை, எப்போதும் போல உழைப்பின் மூலமே எதிர்கொண்டு சாதித்தார், பெட்ரிசியா!
  • புதுமைகளே ஒரு தொழில்முனைவாளரின் சுவாசம். பெட்ரிசியா அவரது தொழிலில் ஆரம்பகாலத்திலேயே சில புதுமைகளை அலட்சியமாக நடைமுறைப் படுத்தினார். முதலாவது, அப்போது மெரினா கடற்கரையில் பலகாரக் கடைகள் என்றாலே ஒரே இடத்தில் கூரைகளோ, தடுப்புகளோ அமைக்கப்பட்டு வழக்கமான ஒன்றாகவே இருக்கும். ஆனால், பெட்ரிசியா மெரினா கடற்கரையில் முதன்முதலாக நடமாடும் (Mobile Cart) பலகாரக் கடையை அமைத்தார். இரண்டாவதாக, டீ, முறுக்கு, பஜ்ஜி என்று வழக்கமாக விற்கப்படும் பொருட்களுக்கு பதிலாக, கட்லட்ஸ், சமோசா, பழச்சாறு, ஃபிரெஞ்ச் ஃபிரைஸ் , ஐஸ்கிரீம் என புதிய வகைகளை இறக்கினார், பெட்ரிசியா. மூன்றாவதாக, பணியாளர்களாக அவர் தேர்ந்தெடுத்தது இரண்டு மாற்றுத் திறனாளிகளை. அவர்களுக்கு தகுந்த பயிற்சியளித்து பணி வாய்ப்பு வழங்கினார், பெட்ரிசியா. விளம்பரத்தையும் கூட வித்தியாசமாகவே செய்தார், அவர். உதாரணத்துக்கு, எம்.ஜி.ஆர் போன்று வேடமணிந்த நபரை கடைக்குள் உலவவிட்டு போட்டோ பிடித்து, மெரினா சுற்றுப்புற பகுதி மக்களின் உள்ளத்தைப் பிடித்தார், பெட்ரிசியா.
  • பெட்ரிசியாவின் வெற்றி இரண்டு விதத்தில் மிகமுக்கியமானது. முதலாவது, அவர் ‘என் வெற்றிக்கு பின்னால் ஒரு ஆண் இருக்கிறார்…’ என்று சொல்லத் தேவையில்லாத ஒரு வெற்றிகரமான தமிழக பெண் தொழில்முனைவாளர். இரண்டாவது, அவர் தமிழ்நாட்டின் தென்கோடியான நாகர்கோவிலில் இருந்து சென்னை எனும் பெருநகரத்துக்கு வந்து சாதித்த முதல் பெண்மணி!

[/vc_column_text][/vc_column][/vc_row]