காயிதே மில்லத்

[vc_row][vc_column][vc_column_text]

 • தேசத்தின் மீது அளப்பறிய பற்றும், மொழியின் மீது தீராதக் காதலும், மக்களின் மீது வற்றாத அன்பும் கொண்ட மகத்தான தலைவர்களில் ஒருவர் கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத்.  இவர் பெயருக்கு அரபி மொழியில் மக்களின் வழிகாட்டி என்று பொருள். அந்தப் பொருளுக்கேற்ப தன் வாழ்வில் நடந்துகொண்ட மகத்தான மக்கள் தலைவர்.
 • திருநெல்வேலி மாவட்டம் பேட்டையில் பிறந்தவர். இயற்பெயர் முகமது இஸ்மாயில் சாகிப். இளம் வயதிலேயே தந்தையை இழந்தவர். ஆகவே, தாயின் அரவணைப்பில் வளர்ந்தார். வளரும்போதே சுதந்திரத் தாகம் அவருக்குள் வேர்விட்டது.  பின்னர் காந்தியின் மீது ஈடுபாடு கொண்டு, அவருடைய ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுப்பதற்காக, தன்னுடைய பி.ஏ. தேர்வை எழுதாமல் புறக்கணித்தவர். பின்னாட்களில், இஸ்லாமிய குழந்தைகள் மட்டுமில்லாமல், அனைத்து தரப்பு மக்களின் கல்விக்காகவும் சென்னை புதுக்கல்லூரி, திருச்சி ஜமால் முகமது கல்லூரி, அதிராம்பட்டினத்தில் காதர் மொய்தீன் கல்லூரி என சுமார் 14 கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தி, இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் அறிவு விளக்கேற்றிய அழியாச் சுடர். 
 • 1936-ல் முஸ்லீம் லீக் கட்சியில் இணைந்து, மக்கள் நலப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட காயிதே மில்லத், பின்னர் 1945-ல் தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சியின் தலைவரானார். அதன்பிறகு 1948-ல் அகில இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவராக தேர்வானார். 
 • தேசப்பிரிவினையால் முஸ்லீம் லீக் கட்சி இரண்டாக பிரிக்கப்பட்டது போல, அதன் சொத்துக்களும் இரண்டாகப் பிரிக்கப்பட்டன. அதன்படி இந்திய முஸ்லீம் லீக் கட்சிக்கு சேர வேண்டிய 17 லட்ச ருபாயை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தினார் முகமது அலி ஜின்னா. ஆனால், “பாகிஸ்தான் எங்களுக்கு அண்டை நாடு. அங்கிருந்து எங்களுக்கு எதுவும் தேவையில்லை. கட்சிக்குத் தேவையான நிதியை நாங்களே திரட்டிக்கொள்வோம்” என கூறி மறுத்துவிட்டார் காயிதே மில்லத். சுதந்திர இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரலாக பொறுப்பு வகித்த ராஜாஜி அந்தத் தொகையை பெற்றத் தருவதாகக்கூறியபோதும் உறுதிபட மறுத்துவிட்டார்.
 • 1948 ஆம் ஆண்டு மார்ச் 10-ம் தேதி சென்னை ராஜாஜி மண்டபத்தில் அகில இந்திய முஸ்லீம் லீக், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்காக மாற்றப்பட்டது. அதே ஆண்டு இந்திய அரசியல் நிர்ணய சபைக்கு தமிழகத்தின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார் காயிதே மில்லத். 
 • “இஸ்லாம் என் மதம். தமிழ் என் தாய்மொழி” என பிரகடனப்படுத்தியவர். இந்தித் திணிப்பை கடுமையாக எதிர்த்தவர். 1949 ஆம் ஆண்டு இந்திய தேசிய அரசியலமைப்பு நிர்ணய கூட்டத்தில் தமிழ்நாட்டின் சார்பில் கலந்துகொண்டார் காயிதே மில்லத். அந்தக் கூட்டத்தில் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இந்தியை தேசிய மொழியாக்க வேண்டும் என்று குரல் கொடுத்தனர். அப்போது வெகுண்டெழுந்தவர், “ஒரு மொழி இந்திய மொழியாக இருந்தால் மட்டும் போதாது. அது பழமையான மொழியாக இருக்க வேண்டும். அந்த மொழியிலேயே உயர்ந்த இலக்கியங்கள் படைக்கப்பட்டிருக்க வேண்டும். அத்தகைய மொழியே தேசிய மொழியாக அறிவிக்க முடியும். அப்படியானால், அதற்கான முழு தகுதியும் தமிழ் மொழிக்கு உண்டு. பழமையும் உறுதியும் கொண்டது தமிழ் மொழி. அது எனது தாய்மொழி. இதை எந்தவொரு வரலாற்று மொழி ஆய்வாளரிடம் வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள்” என்று, இந்திக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு “தமிழ் மொழியை தேசிய மொழியாக்க வேண்டும்” என்று குரல் கொடுத்ததும் கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் தான்!
 • குலக்கல்வி திட்டத்தின் காரணமாக பதவியை ராஜினாமா செய்தார் ராஜாஜி. அதன் காரணமாக குடியாத்தம் சட்ட மன்ற தொகுதியில் போட்டியிட்டார் காமராஜர். வாணியம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் முஸ்லீம்கள் அதிகம் வசித்தனர். எனவே, அவர்களது வாக்குகளைப் பெற காயிதே மில்லத்தின் உதவியை நாடியவர். காயிதே மில்லத்தின் ஆதரவோடும் தேர்தலில் வென்ற காமராஜர், அடுத்த முதல்வராகப் பதவியேற்றார்.
 • மாநிலங்களின் உரிமைக்காகவும், மாநிலங்களில் மொழிக்காகவும் போராடிய மகத்தான தலைவர். 1956 ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அதன்படி தேவிகுளம், பீர்மேடு ஆகிய பகுதிகள் கேரளாவில் இணைக்கப்பட்டன. இதற்கு தமிழ்நாட்டு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். “குளமோ, மேடோ இந்தியாவில்தானே இருக்கிறது” என்றார் காமராஜர்.  ஆனால், அப்போது மாநிலங்களவை உறுப்பினராக இருந்த காயிதே மில்லத், தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் இவ்விரு பகுதிகளையும் தமிழ்நாட்டோடு இணைக்க வேண்டும். அதற்கு சான்று கடந்த தேர்தலில் பெரும்பான்மையான மக்கள் தமிழகத்தில் வாக்களித்துள்ளதையும் சுட்டிக்காட்டினார். உண்மையில், தமிழகத்தை விட கேரளாவில் தான் காயிதே மில்லத்தை ஆதரிக்கும் வாக்காளர்கள் அதிகம் இருந்தனர். அதைப் பற்றி கவலைப்படாமல் தமிழகத்தின் நலனுக்காக அவர் குரல் எழுப்பினார். அதன்பிறகு நடந்த தேர்தல்களில் மூன்று முறை கேரளாவில் உள்ள மஞ்சேரி தொகுதியில் இருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது வரலாறு. 
 • வேட்புமனுவை தபாலில் அனுப்பி, பிரசாரத்துக்கு செல்லாமலேயே தேர்தலில் வென்றவர் கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத். இதை இப்போதும் அரசியல் விமர்சகர் சிலாகிப்பது உண்டு. 
 • 1962 ஆம் ஆண்டு இந்தியாவை சீனா ஆக்கிரமிக்க முயற்சித்த போது, சீனாவை எதிர்க்கும் பெயர் பட்டியலில் தன்னுடைய பெயரை முதலாவது எழுத வேண்டும் என்றவர். அத்துடன் நிற்காமல் சீனாவை எதிர்த்து போரிட தன்னுடைய ஒரே மகனை ராணுவத்துக்கு அனுப்ப உறுதியாக உள்ளதாகவும் வெளிப்படையாக அறிவித்த, உண்மையான தேசப்பற்றாளர். 
 • காங்கிரஸ் கட்சிக்கும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கும் இடையே சுமுகமான உடன்பாடு இல்லாவிட்டாலும் கூட, காயிதே மில்லத் மீது மிகுந்த நேசம் கொண்டிருந்தார் நேரு. இந்திய மக்கள் பிரச்னைகள் பலவற்றில் அவரின் கருத்துக்களை கேட்கத் தவறியத்தில்லை நேரு. பின்னர் அதே வழியில் இந்திரா காந்தியும் காயிதே மில்லத் கருத்துக்களை கேட்கத் தவறியதில்லை. 
 • 1965 ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்டது. பாகிஸ்தானை எதிர்த்து காயிதே மில்லத் பேசியது பதிவு செய்யப்பட்டு, ஐக்கிய நாடுகள் சபையில் ஒளிபரப்பப்பட்டது. 
 • 1967 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில், இந்த தேர்தலில்தான் “முரண்களின் கூட்டணி” என விமர்சிக்கப்பட்டது திராவிட முன்னேற்ற கழகம். திமுக அமைத்த கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சி, சுதந்திரா கட்சி, ம.பொ.சி.யின் தமிழரசு கழகம், சி.பா.ஆதித்தனாரின் நாம் தமிழர் கட்சி உடன் காயிதே மில்லத்தின் கட்சியும் இடம்பெற்றது. இத்தகைய அரசியல் தலைவர்கள் அனைவரும் கழுதை மீது அமர்ந்து கோட்டைக்குப் போவது போல விமர்சித்து, கார்ட்டுன் வெளியிட்டது ஆனந்த விகடன் பத்திரிகை. “காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடக்கும் கோட்டையை பிடிக்க கழுதையே போதுமானது” என பதிலடி கொடுத்தனர் திமுக கூட்டணி கட்சியினர். “கழுதை எப்படியாகினும் இலக்கைச் சென்று சேரும். எனவே நமது வெற்றிக்கு இந்தக் கார்ட்டுன் கட்டியம் (முன்னறிவிப்பு) கூறும்” என்றார் காயிதே மில்லத். அவர் குறிப்பிட்டவாறே, அந்தத் தேர்தலில் திமுக வென்று, கோட்டையை கைப்பற்றியது.  
 • கலை, இலக்கியத்திலும் தீராத ஆர்வம் உள்ளவர். அந்தவகையில் “சென்னையில் திரைப்படக் கல்லூரி.  உருவாக வேண்டும். தமிழகம் கோலிவுட்டாக மாற வேண்டும்” என்று சட்டமன்றத்தில் கோரிக்கை விடுத்தவர். காயிதே மில்லத்தின் இலக்கிய ஆர்வத்தை அறிந்திருந்த அண்ணா, 1968 ஆம் ஆண்டு நடந்த இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டின் தமிழ் அரங்கிற்கு தலைமையேற்கச் செய்தார் அண்ணா. 
 • தொடர் பயணங்கள், மக்கள் நலப் பணிகள் என அயராத உழைத்துக்கொண்டிருந்த காயிதே மில்லத்தின் உடல்நலம் பாதிக்கப்படத்தொடங்கியது. 1971 ஆம் ஆண்டு குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்கச் சென்றபோது மேலும் உடல்நலம் பாதிக்கப்பட்டது.  டெல்லியிலிருந்து திரும்பிய அவரில் உடல்நலம் மேலும் மேலும் பாதிக்கப்படவே, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், 1972 ஆம் ஆண்டு ஏப்ரல் 5ம் தேதி இரவு, அவர் இவ்வுலகை விட்டு மறைந்தார். 
 • காயிதே மில்லத்தால் உருவாக்கப்பட்ட புதுக்கல்லூரியிலேயே அவரது உடல் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. இதனால் அவரது உடலைப் பார்க்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது. காயிதே மில்லத்துக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்தார் பெரியார். ஆனால், அவரால் உள்ளே செல்ல முடியாத அளவுக்கு கட்டுக்கடங்கா கூட்டம். அங்கே பெரியாரைக் கண்ட அவரின் நண்பரான ஈரோடு கே.ஏ.எஸ். அலாவுதீன் சாகிப், கூட்டத்தை விலக்கிக்கொண்டு பெரியார் கரம் பற்றி, காயிதே மில்லத் உடல் அருகே கொண்டுபோய் நிறுத்தினார். அவரது உடலைப் பார்த்ததும் பெரியார் மனம் உடைந்து அழுதார். அருகிலிருந்தவர்கள் அவரைத் தேற்றினர். பின்னர் அங்கே இருந்தவர்களுக்கு காதில் விழும்படி, “முஸ்லிம் சமுதாயத்துக்கு இவரைப் போன்ற தலைவர்கள் கிடைப்பது அரிது. உத்தமமான மனிதர்” என்றார். பொதுவாக அவ்வளவு எளிதாக பெரியார் யாரையும் புகழ மாட்டார். அது அபூர்வம். ஆனால், பெரியாரின் புகழ்மாலையை சூடிக்கொண்டு, இன்னும் மக்களின் மனங்களில் உயிரோடியிருக்கிறார் கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத்.

[/vc_column_text][/vc_column][/vc_row]