மொழி

வாஜ்பாய்

  • நேருவுக்கு அடுத்து, தன்னலமற்ற, ஆடம்பரமற்ற இந்தியப்பிரதமராக காட்சிக்கு வந்தவர், அடல்பிகாரி வாஜ்பாய்! அவர் சார்ந்த கட்சியில் அரசியல் நாகரிகத்துக்கும் எளிமைக்கும் ஒருவரை உதாரணம் காட்டவேண்டுமென்றால், இப்போதும் அவரையே காட்டமுடியும். 
  • 1977ல் அமைந்த ஜனதா அரசில் வாஜ்பாய் வெளியுறவுத்துறை அமைச்சராக பதவியேற்றார். அப்போது ஒரு சம்பவம் நடந்தது. டெல்லியில் அவரது அலுவலக வளாகத்தில் இருந்த நேருவின் படத்தை அதிகாரிகள் சிலர் அகற்றிவிட்டார்கள். வாஜ்பாய்க்கு அது சிறிதும் பிடிக்கவில்லை. ‘நேரு இந்தியாவின் தலைமகன். அவர் படத்தை எப்படி எடுக்கத் துணிந்தீர்…’ என்று சொல்லி, நேருவின் படத்தை மீண்டும் மாட்டச்செய்தார், வாஜ்பாய்.
  • இந்தியாவில் மிகநீண்ட அரசியல் வாழ்க்கையைக் கொண்ட தலைவர்களில் குறிப்பிடத்தக்கவர், வாஜ்பாய். இளம் வயதிலேயே அரசியலுக்கு வந்துவிட்டார். முதன்முதலில் நாடாளுமன்ற உறுப்பினராகும் போது, அவருக்கு வயது 33 மட்டுமே! கிட்டத்தட்ட 10 முறைக்கும் மேல் அவர் நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு சாதனை படைத்திருக்கிறார்!
  • காங்கிரஸை சித்தாந்த ரீதியாக எதிர்க்கவேண்டிவந்த போதும், அதன் தலைவர்களை வரம்புமீறி விமர்சிக்காதவர், வாஜ்பாய்! நரசிம்மராவ், சோனியா என எல்லோரையும் கடைசிவரை மதிப்புமிக்கவர்களாகவே நடத்தினார்.
  • இந்தியாவின் வளர்ச்சியில் வாஜ்பாயின் பங்கு முக்கியமானது. அவரது தங்க நாற்கர சாலைத்திட்டம் இந்தியாவின் வடகோடி – தென்கோடி முனைகளை வெற்றிகரமாக இணைத்தது. இந்தியாவின் கிராமச் சாலைகளை மேம்படுத்தும் ‘பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா’ திட்டத்தையும் வாஜ்பாயே தொடங்கிவைத்தார்.
  • இந்தியாவை அணு சக்தி நாடாக மாற்றியதிலும் வாஜ்பாயின் பணி அளப்பரியது. அப்துல்கலாமுக்கு முழு சுதந்திரம் அளித்து பொக்ரான் அணு ஆயுத சாதனையை நிகழ்த்திக்காட்டினார், வாஜ்பாய்.
  • இந்தியா மாநிலங்களால் ஆன ஒரு நாடு. இப்படிப்பட்ட நாட்டில் கூட்டணி ஆட்சிக்கென்று தனி மதிப்பு இருக்கிறது. அதை உணர்ந்து, ‘கூட்டணி தர்மம்’ என்ற வார்த்தையை புழக்கத்துக்கு கொண்டுவந்தார், வாஜ்பாய். அவரது 1999 – 2004 ஆட்சி, பல்வேறு சித்தாத்தங்களை கொண்ட கட்சிகள் எப்படி கூட்டணி அமைத்து செயல்படவேண்டும் என்பதற்கு, ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
  • அரசியலில் நட்புகள் அதிக காலம் நீடிக்காது என்பார்கள். அதை உடைத்தது வாஜ்பாய் – அத்வானியின் நட்பு! கட்சியைத் தொடங்கி, அந்தக் கட்சியை எதிர்க்கட்சியாக்கி, அடுத்து ஆளுங்கட்சியாக்கி என, வாஜ்பாயும் அத்வானியும் எல்லா அத்தியாயத்திலும் நல்ல நண்பர்களாகவே நீடித்தார்கள். யின் – யாங் தெரியுமல்லவா? ஒரு அரைவட்டத்தை இன்னொரு அரைவட்டம் நிரப்பி வட்டமாக்கும் வடிவம், அது. வாஜ்பாயும் அத்வானியும் அதைப் போன்றவர்களே!
  • 2018ம் ஆண்டு, வாஜ்பாய் இறந்தபோது அவர் இந்தியாவின் பிரதமராக இல்லை. அதுவும் இல்லாமல், அவர் அரசியல் அரங்கில் இயங்கியே 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகியிருந்தது. ஆனாலும், மக்கள் அவருக்காக அழுதார்கள், அஞ்சலி நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். கண்டிப்பாக, வாஜ்பாய் ‘மக்கள் தலைவர்’!