மொழி

Data-Driven

தரவுகள் அடிப்படையில் எதையும் அணுகுவதே நமது அடையாளம். நாம் வருவதற்கு முன்புவரை, தமிழ்நாட்டில் தரவுகளை வைத்து வாதிடுவது ஒரு வழக்கமாக இருக்கவில்லை. ஆய்வாளர்கள் பயன்படுத்தும் தரவுகளும் கூட பெரும்பாலும், ‘எங்கேயோ படித்தேன்…’ வகையாகவே இருக்கும்.  ஆனால், நாம் அனைத்தையும் மாற்றினோம். தகுந்த ஆதாரங்களுடன் கூடிய உறுதிப்படுத்தப்பட்ட தரவுகளை மக்கள் முன்னால் வைத்தோம். அதன் மூலம், தமிழ்நாட்டு வளர்ச்சியின் மறைக்கப்பட்ட உண்மைகளை மக்கள் அவர்களாகவே உணர்ந்துகொள்ள வழிவகுத்தோம். இப்போது மாநகர பேருந்து எண்களைப்போல, நம் இயக்கத்தின் GER, GDP தரவுகள் மக்கள் மத்தியில் புழங்கி வருகின்றன. வரும் காலத்திலும், ’தமிழ்நாட்டைப்பற்றி யாருக்கு நன்றாக தெரியும்’ என்ற கேள்விக்கு, நம்மையே மக்கள் கைகாட்டும் அளவுக்கு, நம்முடைய செயல்பாடுகள் இருக்கும்!

Positivity

‘நல்லதையே நினைப்போம், நல்லதையே பார்ப்போம், நல்லதையே பேசுவோம், நல்லதையே செய்வோம்…’ என்பதே நம் ஆதார மனப்பான்மை. எந்த சூழ்நிலையிலும் நமக்குள்ளிருக்கும் நேர்மறை எண்ணத்தை நாம் இழக்கக்கூடாது. ‘மனிதர்கள் தவறு செய்பவர்கள்’ என்பதே இயற்கை. ஆனால், ஒருவர் செய்த ஒற்றை தவறுக்காக, அவர் செய்த பத்து சரிகளை நாம் இல்லையென்று ஆக்கிவிடக்கூடாது. அது முறையும் அல்ல! ஆகவே, முடிந்தவரை எல்லோரின் நல்ல அம்சங்களை மட்டுமே கவனத்தில் எடுத்துக்கொண்டு நாம் முன்செல்ல முனைகிறோம். நம்மைப்பற்றி சிலர் உள்நோக்கத்துடன் அவதூறு பரப்பும்போதும் கூட, அதை நாம் இன்னொரு அவதூறால் எதிர்கொள்வதில்லை. மாறாக, நம் தரப்பு நியாயங்களை ஆணித்தரமாக எடுத்துவைத்து, அவதூறு பரப்புபவர்களையும் வெல்ல முயற்சிக்கிறோம். ‘0 எதிரிகள், ∞ நண்பர்கள்’ என்பதே, பண்புதளத்தில் நமது இலக்கு!

Love

வெறுப்பை நாம் வெறுக்கிறோம். நம்மை அவமதிக்க நினைப்பவர்களுக்கும், அழிக்க நினைப்பவர்களுக்கும் கூட, நாம் அன்பை மட்டுமே கொடுக்க விழைகிறோம். இப்போது இங்கே என்ன நடக்கிறது?! மதம், இனம், மொழி, நிறம், சாதி என பல தரப்புகளாக பிரிந்து ஒருவரையொருவர் மூர்க்கமாக தாக்குவது அதிகரித்து வருகிறது. ஆனால், நாம் அப்படியான காரியங்களில் ஈடுபடப்போவதில்லை. அடிப்படையில், எல்லாத்தரப்புக்குப் பின்னாலும் கன்னத்தில் கைவைத்து நல்ல நேரத்திற்காக காத்திருக்கும் எளிய மக்கள் இருக்கிறார்கள். அவர்களே நமக்கு கணக்கு! அவர்களுக்கு நாம் செய்யும் நற்பணிகளே நமக்கு முக்கியம்!

Think Local

‘பெரிய காரியங்களை செய்பவர்கள், எளிய இடத்திலிருந்து உருவாகி வருவார்கள்’ என்பது இயற்கை வகுத்த நியதி. நம் இயக்கமும் அது போன்றதே!நம்முடைய ஆணிவேரென நாம் நினைப்பது, தமிழகத்தின் அடித்தட்டு மக்களையே. அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவேண்டும் என்ற நோக்கத்திலேயே, நாம் இயக்கத்தை கட்டியிருக்கிறோம். ஆகவே, நம்முடைய இயக்கத்தின் எல்லா நடவடிக்கைகளும் அவர்களைக் கருத்தில்கொண்டு, அவர்களுக்காக வடிவமைக்கப்படுவதாகவே இருக்கும். எவ்வளவுக்கு எவ்வளவு நாம் களத்தில் இறங்கிச் செல்கிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு நம் இலக்கில் உயர்ந்து கொண்டே இருப்போம்.

நம்முடைய மிகப்பெரிய தனித்துவம், தொழில்நுட்ப அறிவு! நாம் நம்முடைய மரபை முற்றாகவே அறிந்திருக்கிறோம். அதே நேரத்தில், அந்த மரபில் இருந்து அப்படியே மாறுபட்டு தொழில்நுட்ப அறிவையும் கைகொண்டிருக்கிறோம். நமக்கு சிலப்பதிகாரத்துக்கும் பொருள் தெரியும், சிலிக்கான் வேலிக்கும் வழி தெரியும். இத்தகைய நம்முடைய தொழில்நுட்ப அறிவை தமிழர்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்காக நாம் பயன்படுத்துகிறோம். நம் மக்களின் பிரச்சனைகளுக்கு தொழில்நுட்பத்தின் வாயிலாக மிக விரைவான, நியாயமான தீர்வுகளை நாம் கண்டடைகிறோம்.