அறம் (Virtue):
‘மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்ஆகுல நீர பிற.’
(எவர் மீதும் வெறுப்பை காட்டாமல், எவருக்கும் பாதிப்பு ஏற்படுத்தாமல், உள்ளத்தூய்மையோடு அறச் செயல்கள் புரிய வேண்டும்)
அறமே நம்மை எப்போதும் ஆளும்! நம்மை தரம் குறைக்க நினைப்பவர்களுக்கும், முடக்க நினைப்பவர்களுக்கும் கூட, நாம் அறவழியிலேயே எதிர்வினையாற்ற விரும்புகிறோம். தமிழ்நாட்டில், மதம், இனம், மொழி, நிறம், சாதி என பல தரப்புகளாக பிரிந்து ஒரு தரப்பை இன்னொரு தரப்பு தாக்குவது, விமர்சிப்பது ஒரு மோசமான பண்பாடாக வளர்ந்து நிற்கிறது. ஆனால், நாம் அப்படியான செயல்களை ஒருபோதும் செய்யமாட்டோம். அனைவரையும் அரவணைத்துச் செல்வதே நமது கொள்கை! அதே போல, இயக்கச் செயல்பாடுகளில் நாம் முற்றிலுமான மக்களாட்சித் தன்மையையும் அறவழியையும் பின்பற்ற விரும்புகிறோம். எத்தகைய கடின சூழலிலும், நாம் வன்முறையை ஒரு தீர்வாக கையாளவோ, முன்னிறுத்தவோ மாட்டோம்!
தரவு (Data):
‘எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்மெய்ப்பொருள் காண்பது அறிவு.’குறள்- 423
(எது ஒன்றையும் கண்ணைமூடிக்கொண்டு உடனே நம்பாமல், அதை ஆராய்ந்து பார்ப்பதே உண்மையான அறிவாகும்)
தரவுகள் அடிப்படையில் அனைத்தையும் அணுகுவது நம் அடையாளமாகும். தகுந்த ஆதாரங்களுடன் கூடிய உறுதிப்படுத்தப்பட்ட தரவுகளை நாம் மக்களிடத்தில் எடுத்து வைத்தோம். கூடவே, தரவுகளை தேடிக் கண்டடைவது கடினமான செயலுமல்ல என்றும் உறுதிபடுத்தினோம். இதன் மூலம், தமிழ்நாட்டு வளர்ச்சியின் மறைக்கப்பட்ட உண்மைகளை மக்கள் உணர்ந்து கொள்ள வழி செய்தோம். இப்போது மாநகர பேருந்து எண்களைப் போல, நம் இயக்கத்தின் தரவுகள் மக்களிடத்தில் வழக்கத்தில் இருக்கின்றன. வரும் காலத்திலும், ’தமிழ்நாட்டைப் பற்றி யாருக்கு நன்றாக தெரியும்’ என்ற கேள்விக்கு, நம் இயக்கம் நல்ல பதிலாக இருக்கும் என ஆழமாக நாங்கள் நம்புகிறோம்!
நல்லெண்ணம் (Positivity):
‘உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றதுதள்ளினுந் தள்ளாமை நீர்த்து.’குறள்- 596
(நம் உள்ளத்தின் எண்ணங்கள் எப்போதும் உயர்வானதாகவே இருக்கவேண்டும். அவை சில காரணங்களால் நிறைவேறாமல் போனாலும், நமக்கு நல்லப் பெயர் கிடைக்கும்)
‘நல்லதையே நினைப்போம், நல்லதையே உரைப்போம், நல்லதையே செய்வோம்’ என்பது நம் ஆதார மனப்பான்மை. நேர்மறை எண்ணத்தை இழக்காமல் முன் நடக்க முயற்சிக்க வேண்டும். ‘மனிதர்கள் தவறு செய்பவர்கள்’ என்பதே இயற்கை. ஆனால், ஒருவர் செய்த இரண்டு தவறுக்காக, அவர் செய்த இருபது சரிகளை நாம் இல்லையென்று ஆக்கிவிடக்கூடாது. எனவே, இயன்ற அளவில் அனைவரின் நல்ல அம்சங்களை மட்டுமே கவனத்தில் எடுத்துக் கொண்டு நாம் முன்செல்ல முனைகிறோம். நம்மைப்பற்றி உள்நோக்கத்துடன் அவதூறு பரப்பும் போதும் கூட, அதை நாம் இன்னொரு அவதூறால் எதிர்கொள்வதில்லை. மாறாக, நம் தரப்பு நியாயங்களை ஆணிதரமாக எடுத்து வைத்து, அவதூறு பரப்புபவர்களிடம் இருந்து சரியானவற்றை வெல்ல முயற்சிக்கிறோம். ‘குறைந்த மாற்றுக் கருத்துடையோர் மிகுந்த ஆதரவாளர்கள்’ என்பதே, நமது விருப்பம்!
உள்ளூரியல்பு (Local):
‘வரப்புயர நீர் உயரும்நீர் உயர நெல் உயரும்…’
(ஒரு நிலத்தில் வரப்பு உயர்ந்தால் மட்டுமே, நீர் உயரும். நீர் உயர்ந்தால் மட்டுமே பயிர் உயரும். அது போல, ஊள்ளுர்ப் பகுதிகளில் ஒவ்வொன்றாக உயர்ந்தால் மட்டுமே நாடும் உயரும்.)
‘பிள்ளையை சுமக்கும் தாய்க்கே பிள்ளை பேறு வலி தெரியும்’ என்று நம்மூரில் ஒரு சொல் உண்டு. அதைப் போலத் தான், ஒரு நிலப்பரப்பின் சமூகச் சிக்கல்களை, அந்த சிக்கல்களுக்கான உரிய தீர்வுகளையும், அந்த நிலப்பரப்பைச் சேர்ந்த உள்ளூர் மக்களே அறிவார்கள். அந்த நிலப்பரப்பு ஆயிரம் பேர் வசிக்கும் ஒரு சிற்றூராக இருக்கலாம் அல்லது பத்தாயிரம் பேர் வசிக்கும் ஒரு பேரூராக இருக்கலாம் அல்லது ஒரு லட்சம் பேர் வசிக்கும் ஒரு தாலுகாவாக இருக்கலாம் அல்லது பத்து லட்சம் பேர் வசிக்கும் மாவட்டமாகவும் இருக்கலாம். எதுவாக இருந்தாலும், ஒரு பகுதியின் மக்களே அந்தப் பகுதியின் முழு உரிமையாளர்கள். அவர்களுக்கே அந்தப் பகுதியின் பிரச்சனைகளோடும், வளர்ச்சித் திட்டங்களோடும் உணர்வுபூர்வமான பிணைப்பு இருக்கிறது. ஆகவே, தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியின் தனித்துவத்தையும் கண்டறிந்து, உள்ளூர் மக்களின் கைகளில் இயக்கப்பணிகளை ஒப்படைப்பதை நாம் முக்கியக் கடமையாகக் கொண்டிருக்கிறோம்!
தொழில்நுட்பம் (Technology):
‘ஆயுதம் செய்வோம்…’
(சரியான ஆயுதங்களை உருவாக்கி, மக்களை முன்னேற்றப் பாதையில் செலுத்துவோம்)
நூற்றாண்டுகளுக்கும் மேலாக தீர்க்கப்படாத பல சமூகப் பிரச்சனைகளை ஒரு சில பத்தாண்டுகளில் தீர்த்து வைத்தது தொழிற்நுட்பம் தான். ஆகவே, நாம் தொழிற்நுட்பத்தை தமிழர்களின் வாழ்வில் அடுத்தடுத்த படிகளுக்கு உயர்த்தும் ஒரு உயர்வான கருவியாக கருதுகிறோம். நம்முடைய இயக்கத்தவர்களும் தொழிற்நுட்ப அறிவை, முதன்மை திறன்களில் ஒன்றாக நினைத்து போற்றும் இயல்பை கொண்டவர்களாக இருப்பார்கள். அதே நேரம், நாம் நம்முடைய மரபையும் விட்டுக் கொடுக்கப் போவதில்லை. நமக்கு சிலப்பதிகாரத்துக்கும் பொருள் தெரியும், சிலிக்கான் வேலிக்கும் வழி தெரியும்! இத்தகைய நம்முடைய தொழில்நுட்ப அறிவை தமிழர்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்காக நாம் பயன்படுத்துகிறோம். நம் மக்களின் தொடர்ச்சியான பிரச்சனைகளுக்கு தொழிற்நுட்பத்தின் வாயிலாக மிக விரைவான, நியாயமான தீர்வுகளை நாம் கண்டடைய முயற்சிக்கிறோம். இதன் வழியே, தொழிற்நுட்பத்தை தமிழர் வாழ்வியலின் ஒரு முக்கியமான பகுதியாக மாற்றவும் நாம் பணி செய்கிறோம்!