’கனவு தமிழ்நாடு’ ஒரு அரசு சாரா நிறுவனம்(NGO). ஆனால், நீங்கள் வழக்கமாக சந்திப்பதைப் போன்ற அரசு சாரா நிறுவனம் கிடையாது. பெரும்பாலான அரசு சாரா நிறுவனங்கள் தொண்டு செயல்களில் (Charity Work) மட்டுமே ஆர்வம் காட்டுவார்கள். ஆனால், கனவு தமிழ்நாடு இயக்கம் தமிழ்நாடு முழுவதும் ஒரு மிகப்பெரிய பொருளாதார புரட்சியை (Economic Impact) உண்டாக்கும் செயல்திட்டத்தோடு களமிறங்கி இருக்கிற மாறுபட்ட அரசு சாரா நிறுவனம்! Dream Tamilnadu is not yet another NGO. It is different, it is the first and only think tank that is focused on the growth of Tamilnadu!

எப்போதுமே ஒரு மக்கள் இயக்கத்துக்கு முதன்மையான குறிக்கோள் என்று ஒன்று இருக்கும். அந்தக் குறிக்கோளை நோக்கியே அந்த இயக்கத்தின் மொத்த விசையும் குவிக்கப்படும். உதாரணத்துக்கு, சுதந்திரப் போராட்ட இயக்கத்தை எடுத்துக்கொள்வோம். அதன் முதன்மையான குறிக்கோள், ‘விடுதலை’. அதைச் சுற்றியே அந்த இயக்கத்தின் மொத்த விசையும் குவிக்கப்பட்டது. அதே போலத் தான் கனவு தமிழ்நாடு இயக்கமும்! நம் இயக்கத்தின் முதன்மையான குறிக்கோள் ‘தமிழகத்தை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உருவாக்குவது’. அடுத்த பதினைந்து ஆண்டுக்குள், தமிழகத்தின் பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் டாலர், அதாவது இன்றைய ரூபாய் மதிப்பில் 72 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு நாம் உயர்த்தப் போகிறோம். ’72 லட்சம் கோடி…’ என்ற எண்ணைப் பார்த்ததும், ‘என்னடா இது, இவ்வளவு பிரம்மாண்டமான குறிக்கோளா….’ என்று மலைக்கவேண்டாம். எந்தக் கடலும் முதலில் ஒரு துளியே, எந்தப் பயணமும் முதலில் ஒரு அடியே. ஆக, உணர்வோடு ஒன்றுபட்டு செயல்பட்டால், ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை பதினைந்து ஆண்டுகள் அல்ல, பத்து ஆண்டுகளிலேயே கூட நாம் அடைந்து காட்டலாம்.

‘ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம்’ எனும் இலக்கை, ‘பொருளாதார பலம்’ என்ற ஒற்றைக் காரணியின் அடித்தளத்திலேயே நாம் அமைத்திருக்கிறோம். ஆயிரம் சொன்னாலும், பணம் தான் இங்கே எல்லாவற்றையும் தீர்மானிக்கிற சக்தி. நம்மை அவமதிப்பவர்களையும் இழிவுபடுத்துபவர்களையும் கூட பணத்தைக் கொண்டே நம்மால் வாயடைக்கச் செய்ய முடியும். வள்ளுவர் சொல்லியதைப் போல, ‘எதிரியின் செறுக்கை அறுக்க வல்ல கூர்மையான ஆயுதம் எப்போதும் பணம்… பணம்… பணம் மட்டுமே’! இவ்வளவு அழுத்திச் சொல்வதால், நாம் எந்தவழியிலும் செயல்பட்டு பணம் செய்வோம் என்று அர்த்தமில்லை. நமக்கென்று சில விதிகள் இருக்கின்றன. அதாவது, தமிழ்நாட்டு மக்களின் மகிழ்ச்சிக்கும் தமிழ்நாட்டின் சுற்றுச்சூழலுக்கும் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாமல், மிகக்கவனமாக நாம் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரக் கனவை அடையப்போகிறோம்.

சரி… ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை உருவாக்குவதோடு மட்டும் கனவு தமிழ்நாடு இயக்கத்தின் பணிமுடிந்துவிடுமா என்றால், கண்டிப்பாக இல்லை. ஒரு மக்கள் இயக்கத்தின் பணி அவ்வளவு எளிதில் முடிந்தும் விடாது. ஆகவே, நாம் உருவாக்கி நிலைநிறுத்தும் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை பாதுகாக்கவேண்டியதும் நம் கடமையே. இதற்காக, சமூகநீதி, மதச்சார்பின்மை, கூட்டாட்சி, இருமொழிக்கொள்கை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்கிற, 5 அசைக்கமுடியாத தத்துவங்களை நாம் உருவாக்கியிருக்கிறோம். நமது இயக்கத்தில் செயல்பட விரும்புபவர்கள், முதலில் இந்த 5 தத்துவங்களில் தேர்ச்சிபெற வேண்டியது மிகவும் அவசியம்!

மாபெரும் தமிழ்க்கனவை முன்னெடுத்து செல்லும் கனவு தமிழ்நாடு இயக்கத்தில், நீங்களும் ஒரு செயல்வீரராக இணைந்து செயல்பட அழைக்கிறோம்!