டிரில்லியன் டாலர் பொருளாதாரம்

செய்க பொருளைச் செறுநர் செருக்குஅறுக்கும் எஃகுஅதனின் கூரியது இல்’ – குறள் 759 - (எதிரியின் செறுக்கை அறுக்க வல்ல கூர்மையான ஆயுதம் பணத்தை விட வேறெதுவும் இல்லை)

தமிழ்நாட்டின் சுற்றுச்சூழலுக்கும், தமிழ்நாட்டு மக்களின் மகிழ்ச்சிக்கும் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாமல், புதிய அறிவுசார் தொழில்களை உருவாக்கியும், ஏற்கனவே இருக்கும் தொழில்களை அறிவுசார்மயப்படுத்தியும், அனைவரையும் உள்ளடக்கிய ஒரு டிரில்லியன் டாலர் மதிப்புகொண்ட பொருளாதாரத்தை அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளில் நிறுவுவதே, ‘கனவு தமிழ்நாடு’ இயக்கத்தின் தலையாய இலக்கு!

Our-Goal-1trillion-1

அறிவுசார்ந்த தொழில்கள் (Knowledge Economy)

அறிவுசார்ந்த தொழில்களுக்கு ‘மனித வளமே’ அடிப்படை. உலக அளவில் தமிழ்நாடு மனிதவளத்தில் மிகவும் முன்னோடியாக இருக்கிறது. தோராயமாக, வருடத்திற்கு 5 லட்சம் பொறியாளர்களும் பட்டதாரிகளும் இங்கே வெளியே வருகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கிறதா என்றால், இல்லை என்றே சொல்ல வேண்டும். பொறியியல் படித்துவிட்டு, உணவகங்களில், பெட்ரோல் நிலையங்களில் வேலைப் பார்க்கும் ஏகப்பட்ட இளைஞர்களை நாம் தினந்தோறும் கடக்கிறோம். இது வெகு சீக்கிரமே ஒரு சமூக அமைதியின்மையை தமிழ்நாட்டில் உருவாக்கக் கூடும். இந்த அபாயத்திலிருந்து தப்பிக்கவேண்டுமானால்,  வேலை தேடும் சமூகமாக இருக்கும் தமிழ்நாடு, வேலைகளை உருவாக்கும் சமூகமாக மாற வேண்டும். இதை ஒரே நாளில் நம்மால் நிகழ்த்திவிடமுடியாது. வரும் ஆண்டுகளில், தமிழ்நாட்டின் எல்லா மாவட்டங்களிலும் படிப்படியாக அறிவுசார்ந்த தொழில்களை வளர்த்தெடுத்து, அந்த நிலையை நாம் அடையவேண்டும்.

கனவு தமிழ்நாடு இயக்கம் அறிவுசார்ந்த தொழில்களை தேர்ந்தெடுத்தற்கு பின்னால் இரண்டு வலுவான காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, பொருளாதாரக் காரணம். இன்னொன்று, சமூகக் காரணம். 

பொருளாதாரக் காரணம்: உடல் உழைப்பு சார்ந்த தொழில்களுக்கு எதிர்காலத்தில் ‘ரோபோடிக்ஸ் (Robotics) மற்றும் ஏஐ (Artificial Intelligence)’ தொழில்நுட்பங்களால் பெரிய ஆபத்து காத்திருக்கிறது. அந்த நாள் வரும்போது, உடல் உழைப்பு சார்ந்த பெரும்பாலான தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள். அதை நம் தொழிலாளர் சட்டங்களால் தள்ளிப்போட முடியுமே தவிர, தவிர்க்க இயலாது. 

சமூகக் காரணம்: உடல் உழைப்பு சார்ந்த தொழில்களில் சாதி ஏற்றத்தாழ்வு முக்கியப்பங்கு வகிக்கிறது. இப்போதும் தமிழ்நாட்டில் மேல் சாதி மற்றும் இடைநிலை சாதியினர் லேத்து பட்டறைகள், துப்புரவுப் பணிகள், கழிவுநீர் அகற்றும் வேலைகளில் ஈடுபடுவதில்லை. அதை தாழ்த்தப்பட்ட மக்கள் தான் அதிகம் செய்து கொண்டிருக்கிறார்கள். அறிவுசார்ந்த தொழில்களில் இந்த ஏற்றத்தாழ்வும் ஒடுக்குமுறையும் மிகக் குறைந்த அளவில் இருக்கும் இருக்காது. ஏனென்றால், கணினிக்கு சாதி, மதம், ஆண், பெண் பேதம் என எதுவும் முக்கியமில்லை. அறிவிருப்பவர் எவரையும் அது அரவணைக்கும்!

இந்த இரண்டு காரணிகளின் பின்னணியிலேயே, கனவு தமிழ்நாடு இயக்கம் அறிவுசார்ந்த தொழில்களை முன்னிறுத்திச் செயல்படுகிறது.

பெரும் தொழில்முனைவாக்கம் (Mass Entreprenuership) 

‘தொழில்’ என்ற வார்த்தை இடம்பெற்றாலே அது பணத்தை அடிப்படையாகக் கொண்டதாகத்தான் இருக்கும் என்பதைப் போன்ற பிம்பம், நம்மிடையே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தொழிலுக்கும் தொழில்முனைவுக்கும் பெரிய வேறுபாடு இருக்கிறது. தொழில்முனைவு என்பது, புதுமையையும் (Innovation) மதிப்புருவாக்கத்தையும் (value creation)  அடிப்படையாகக் கொண்டது. ஒரு தொழில்முனைவோருக்கு பணம் முக்கியம் தான். ஆனால் அது பிரதானம் அல்ல. சமூகத்தில் இருக்கும் ஒரு பிரச்சனையை அவரது Idea and Innovation தீர்க்கிறதா இல்லையா என்பதே பிரதானம். அப்படி தீர்க்கும் போது கிடைக்கும் ஒரு By – Product தான், தொழில்முனைவோருக்கு பணம் என்பது. பல நேரங்களில், தொழில் செய்யும் முதலாளிகள் தன்னைச்சுற்றி ஒரு Resposible Society-யை உருவாக்குபவராக இருப்பதில்லை. ஏனென்றால், பெரும்பாலான முதலாளிகள் பணம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு இயங்குகிறார்கள். ஆனால், பெரும்பான்மையான தொழில்முனைவோர் தன்னைச்சுற்றி ஒரு Responsible Society-யை உருவாக்குகிறார்கள். ஆகவே, நம் இளைஞர்களை பணத்தின் பின்னால் ஓடும் தொழிலதிபராக ஆக்க முயலாமல், சமூகத்திற்காக சிந்திக்கும் தொழில்முனைவோராக ஆக்க முயல வேண்டும். 

இப்போது வரை, தொழில்முனைவில் தமிழ்நாட்டு இளைஞர்கள் காட்டும் ஆர்வம் மிகக்குறைவான அளவிலேயே இருக்கிறது. ஆயிரத்தில், 2 அல்லது 3  இளைஞர்கள் மட்டுமே தொழில்முனைவுக்கு தயாராக இருக்கிறார்கள். ஆனால், அமெரிக்காவில் குறைந்தது  இளைஞர்கள் தொழில்முனைவில் இறங்குகிறார்கள். இதில் கவனிக்க வேண்டிய அம்சம் என்னவென்றால் அமெரிக்காவின் உயர்கல்வி விகிதத்தை விட, நம்முடைய உயர்கல்வி விகிதம் அதிகம். ஆனாலும், நம்மால் ஆயிரத்தில் 3 இளைஞர்களையே தொழில்முனைவோராக ஆக்க முடிகிறது. ஏனென்றால், தொழில்முனைவு குறித்து நம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூகத்தினர் சரியான புரிதலை இதுவரை அடையவில்லை. நம்முடைய இளைஞர்களை ஒரு தேய்ந்து போன ஃபார்முலாவுக்குள் அடக்கவே நாம் எல்லோரும் விழைகிறோம். நம் இளைஞர்கள், ‘நன்றாக படித்து, நல்ல கல்லூரியில் சேர்ந்து, கேம்பஸ் இண்டர்வியூவில் தேர்வாகி நல்ல வேலைக்குச் சென்று கைநிறைய சம்பாதித்தால் மட்டும் போதும்’ என்பதே அந்த தேய்ந்து போன ஃபார்முலா. இதைக் கடைபிடிப்பதில், பணக்காரர்கள், நடுத்தரவர்க்கத்தினர் என எந்த பிரிவினருமே விதிவிலக்கல்ல. நாம் எல்லோருமே ஒரு அணியாக சேர்ந்து, நம் இளைஞர்களை ஒரு சிறிய வட்டத்துக்குள் அடைத்து, அவர்கள் பெரும் சாதனையாளர்களாக உருவாவதை தடுத்துக்கொண்டிருக்கிறோம். அதனால் தான், ஒரு பில்கேட்ஸோ, ரிச்சர்ட் பிரான்ஸனோ தமிழ்நாட்டில் இருந்து உருவாவதில்லை. தொழில்முனைவுக்கு பெரிய அளவில் சிந்திக்கும் தன்மையை இளைஞர்களிடம் உருவாக்க வேண்டும். அதற்கு அவர்களின் மனக்கட்டுகளை அவிழ்த்துவிட்டு, சுதந்திரமாக சிந்திக்கவும் செயல்படவும் வழிவகை செய்ய வேண்டும். 

சர்வதேச சீர்முத்திரைகள் (Global Brands)

தொழில் முனைவு பற்றி பேசும்பொழுது ஒரு முக்கியமான காரணத்தை நாம் மறந்து விடக்கூடாது. தமிழ்நாடு அடிப்படையிலேயே தொழில்வளர்ச்சி அடைந்த மாநிலம். பல தொழில்துறைகளில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. உதாரணமாக, எலக்ட்ரானிக்ஸ், தோல்பொருள், ஆடை உற்பத்தி போன்ற துறைகளில் தமிழ்நாடு தான் முதன்மை இடம் வகிக்கிறது. ஆனால், இந்த துறைகளில் எல்லாம் நாம் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ‘ஒப்பந்த உற்பத்தியாளராகவே (Contract Manufacturer)’ செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். அதனால், தமிழ்நாட்டு உற்பத்திப் பொருட்களின் மதிப்புருவாக்கம் (Value Creation) எல்லாமே, பன்னாட்டு நிறுவனங்களை சென்றடைகிறது. உதாரணத்துக்கு, உள்ளாடை நிறுவனங்களை எடுத்துக் கொள்ளலாம். ஜாக்கி மற்றும் ஹேன்ஸ் ஆகிய இரண்டு உள்ளாடை நிறுவனங்களும் உலகத்திலேயே மிகப்பெரிய நிறுவனங்கள். இவை இரண்டும் சேர்ந்து மட்டுமே, வருடத்திற்கு மொத்தம் 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் ஈட்டுகின்றனர். ஆனால், இந்த நிறுவனங்களின் பொருட்களை தயாரிப்பவர்கள் எல்லாம், தமிழ்நாட்டின் ஓசூர் திருப்பூர் கோயம்புத்தூர் போன்ற ஊர்களில் இயங்கும் தொழில் நிறுவனங்களே. ஆனாலும், உழைக்கும் நமக்கு மதிப்பு உருவாக்கத்தில் எந்தவொரு பங்கும் கிடைப்பதில்லை. உழைப்புக்கு கூலி மட்டுமே கிடைக்கிறது. ராயல்டி போன்ற உரிமைகளையும் நாம் கேட்டுப்பெறுவதில்லை. ஆகவே, இனி வரும் காலத்தில் நம்முடைய உற்பத்திப் பொருட்களை உலகளவில் எடுத்துச்செல்லும் வகையில், Global Brandsகளை நாம் தமிழ்நாட்டில் உருவாக்கவேண்டும். அப்படி உருவாக்கினால், அந்த பிராண்ட்களின் மூலம் உருவாகும் மொத்த மதிப்புருவாக்கத்தையும் நாமே கையகப்படுத்தி, பொருளாதாரத்தில் பலமடங்கு வளர்ச்சியை அடைவோம்.

அரசியல் முக்கியத்துவம்

எப்போதுமே பொருள்வளத்தைச் சுற்றியே அரசியல் மையம் கொள்கிறது. இந்திய ஒன்றியத்துக்கு தமிழ்நாடு சிறந்த பங்களிப்பு ஆற்ற வேண்டுமென்றால்,  இந்தியப் பொருளாதாரத்தில் (GDP) தமிழ்நாட்டின் பங்கு கணிசமான அளவில் இருப்பது சிறந்தது. அடுத்த 10 ஆண்டுகாலத்தில் இந்தியப் பொருளாதாரம் சற்றேறக்குறைய 5-லிருந்து 7 டிரில்லியன் டாலரை அடைந்திருக்கும். அதே காலகட்டத்தில், தமிழ்நாட்டுப் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் டாலர் அளவுக்கு கொண்டுவந்துவிட்டால், இந்தியப் பொருளாதாரத்தில் நம்முடைய பங்களிப்பு 15-லிருந்து 20 சதவிகிதம் அளவுக்கு உயர்ந்துவிடும். அப்போது, இந்திய அரசியல் அதிகாரத்தில் தமிழ்நாட்டுக்குப் பெரும் முக்கியத்துவம் கிடைக்கும்!