leader-profile-image

தமிழ்நாட்டுப் பெண்கள் எப்படி முன்னேறினார்கள்?

‘பெண்கள் எவ்வளவு முன்னேறியிருக்கிறார்கள் என்பதை வைத்தே, ஒரு சமூகம் எவ்வளவு முன்னேறியிருக்கிறது என்பதை நான் அளவிடுவேன்…’ என்றார், அண்ணல் அம்பேத்கர். அவர் இன்றிருந்திருந்தால், ‘தமிழ்நாட்டை அளவுகோலாக வைத்து ஒரு சமூகத்தை நான் மதிப்பிடுவேன்’ என்று மிக எளிதாக முடித்திருப்பார். ஆம்! இந்தியாவிலேயே பெண்களுக்கான வாழ்வியல் சூழலை தமிழ்நாடு அளவுக்கு அழகாக உருவாக்கியிருக்கும் மாநிலம் வேறு இல்லை. யோசித்துப் பாருங்கள். ஒரு தமிழ்ப்பெண் இன்று எல்லாவற்றுக்கும் அவளது தந்தையையோ தமையனையோ கணவனையோ சார்ந்திருக்க வேண்டிய நிலையில் இல்லை. அவளுக்கு பிறப்பு முதல் இறப்பு வரைக்கும் தேவையான அத்தனை தகவமைப்புகளையும் தமிழ்நாட்டின் தொலைநோக்கு கொண்ட தலைவர்களும், ஆட்சியாளர்களும் சிறப்பாக உருவாக்கியிருக்கிறார்கள்.

அடித்தளம்: 

சமூகத்தில் ஒடுக்கப்படும் எந்தத் தரப்புக்கான போராட்டமும், அந்தத் தரப்பில் இருந்து எழும் ஒரு போராளியாலேயே முதலில் ஆரம்பிக்கப்படும். அப்படி, தமிழ்நாட்டில் பெண்களுக்கான நிலையை மாற்ற முதலில் எழுந்தவர், டாக்டர். முத்துலட்சுமி அம்மையார். புதுக்கோட்டையில் 1886ம் ஆண்டு பிறந்தார், முத்துலட்சுமி. அவருக்கு வாழ்வின் ஆரம்பத்திலிருந்தே நிறைய சிக்கல்கள் மற்றும் போராட்டங்கள். ஆனால், அனைத்தையும் கடந்து இந்தியாவின் முதல் பெண் மருத்துவராக 1912ம் ஆண்டு பட்டம் பெற்றார், முத்துலட்சுமி. அது முதல் அவர் பெண்களுக்காக களத்தில் இறங்கி போராட தொடங்கினார். 1927ம் ஆண்டு, அன்னிபெசண்ட் அம்மையாரின் உதவியுடன் மெட்ராஸ் மாகாண சட்டமன்றத்தின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார், முத்துலட்சுமி. அப்போது, இந்தியாவே அவரைப் பார்த்து வியந்தது. ஏனென்றால், அதுவரை அடுப்படியை விட்டு வெளியே அனுப்பப்படாத பெண்கள் கூட்டத்திலிருந்து முளைத்த ஒரு பெண், முதன்முறையாக மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். ஆகவே, அந்தப் பதவியின் முக்கியத்துவத்தை முத்துலட்சுமி நன்றாகவே உணர்ந்திருந்தார். ஆட்சிமன்றத்துக்கு சென்ற சில நாட்களிலேயே, ‘இத்தனை நூற்றாண்டுகளாக நீங்கள் உருவாக்கிய அத்தனை விதிகளும், சட்டங்களும், விதிமுறைகளும், பெண்களை ஒடுக்கிவைக்கும் நோக்கிலேயே உருவாக்கப்பட்டன. இங்கே இதுவரை ஒரே ஒரு நீதியான நடவடிக்கை கூட எடுக்கப்படவில்லை. இனி அது எல்லாமே மாறும்…’ என்று முழங்கினார், முத்துலட்சுமி. அடுத்து அவர் வைத்த அடி முக்கியமானது. அதாவது, கோயில்களில் நடைமுறையில் இருந்த சிறுமிகளுக்கு பொட்டு கட்டுதல் கொடுமையை ஒழிக்க தீர்மானம் கொண்டுவந்தார், முத்துலட்சுமி. தொடர்ந்து, தேவதாசி முறையை ஒட்டு மொத்தமாக அழித்தொழிப்பதற்கான தீர்மானத்தையும் அவர் முன்மொழிந்தார்.

முத்துலட்சுமிக்கு அடுத்து நாம் போற்றவேண்டிய இன்னொரு பெண்ணியவாதி, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார். முத்துலட்சுமிக்கு இணையாகவே பெண்களுக்கான உரிமை போராட்டங்களில் ஈடுபட்ட பெருமைக்குரியவர், அவர். முக்கியமாக, தேவதாசி முறை ஒழிப்புக்காக எந்த எல்லைக்கும் சென்று போராட, ராமாமிர்தம் தயாராக இருந்தார். 1935ல் அவர் வெளியிட்ட ‘தாசிகளின் மோசவலை’ நாவல் வழியாகவே, தேவதாசி முறையின் பல கொடுமைகளை உலகம் உணர்ந்தது. 1947ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ‘தேவதாசி ஒழிப்புச் சட்டத்திலும் [Madras Devadasis (Prevention of Dedication) Act]’ கூட , ராமாமிர்தம் அம்மையாரின் பங்களிப்பு நிறையவே உண்டு. இது தவிர, பெண்களின் சமூகவிடுதலையை முன்னிறுத்தி நிறைய பொதுக்கூட்டங்களை வெற்றிகரமாக நடத்தினார், ராமாமிர்தம்.

முத்துலட்சுமி, ராமாமிர்தம் போலவே மீனாம்பாள் மற்றும் தர்மாம்பாள் ஆகியோரும் குறிப்பிடத்தக்க பெண்ணுரிமை போராளிகள். இருவரில் தர்மாம்பாள் சற்றே மூத்தவர். அவர் உருவாக்கிய தமிழ்நாடு பெண்கள் சங்கம் தான் , தமிழ்நாட்டில் பெண்களுக்காக உருவான முதல் தனித்த அமைப்பு. நீதிக்கட்சியில் இயங்கிய தர்மாம்பாள், 1930 – 40களில் தமிழ்நாட்டில் நிறைய இடங்களில் பெண்ணுரிமையை வலியுறுத்தும் கூட்டங்களை நடத்தினார். அவரது தலைமையில் நூற்றுக்கணக்கான மறுமணங்கள் மற்றும் கலப்புத் திருமணங்களும் கூட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் நடந்தன. பெண்களுக்கு கல்வி எவ்வளவு முக்கியமானது என்பது குறித்தும் தொடர்ச்சியாக பேசினார், தர்மாம்பாள். இன்னொரு பக்கம், மீனாம்பாள் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண் போராளி. மெட்ராஸ் மாநகராட்சி உறுப்பினராக அவர் பதவி வகித்தார். 1940ல் மெட்ராஸ் மற்றும் பாம்பேவில் அவர் நடத்திய இரண்டு பெண்கள் மாநாடு மிகமுக்கியமானது. அந்த மாநாடுகளில் பெண்கள் சுயமரியாதை பெற வேண்டியதன் அவசியத்தை நுணுக்கமாக பேசினார், மீனாம்பாள்.

Periyar-copy

இவர்கள் நால்வருக்கும் வழிகாட்டியாகவும் பக்கபலமாகவும் இருந்தவர், பெரியார். அவரது செங்கல்பட்டு மாநாடு 1929ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17 மற்றும் 18ம் தேதிகளில் நடந்தது. அந்த இரண்டு நாட்களில் இரண்டாயிரம் ஆண்டுகளாக நிலவிய பெண்கள் ஒடுக்குமுறைக்கு நிறைய தீர்வுகள் தீர்மானங்களாக முன்வைக்கப்பட்டன. அவற்றை 6 பகுதிகளாக பிரிக்கலாம்… 1. சொத்துப்பங்கீட்டில் பெண்களுக்கும் சம உரிமை வேண்டும், 2. பெண்களின் திருமண வயதை 16ஆக உயர்த்துதல், 3. குழந்தை திருமணம் தடை, 4. மறுமணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரித்தல், 5. பெண்கள் விருப்பப்பட்ட சாதியில், மதத்தில் இணையை தேர்ந்தெடுத்துக்கொள்ள உரிமை, 6. பெண்கள் விருப்பப்பட்ட துறையில் கல்வி கற்கவும், பணிபுரியவும் உரிமை! இன்று 2021ல் நாம் நின்றிருக்கிறோம். அப்படியே 1920 – 30கள் காலத்தைய சமூகத்தைப் பின்னோக்கி பார்த்தால், செங்கல்பட்டு மாநாட்டுத் தீர்மானங்கள் எத்தனை முற்போக்கானவை என்பதை நம்மால் உணர்ந்துகொள்ள முடியும். அப்போது, இந்தியாவில் வேறு எந்த மாநிலங்களிலும் செங்கல்பாட்டு மாநாடு போன்ற முற்போக்கு மாநாடு நடக்கவில்லை என்பதைவிட, நடப்பதற்கான சூழல் கூட இல்லை.

கட்டுமானம்:

சரி, அடித்தளம் அமைக்கப்பட்டு விட்டது. அடுத்து, அந்த அடித்தளத்தில் காலை ஊன்றி மேலே எழவேண்டும். அதை நம் ஆட்சியாளர்கள் சரியாக பார்த்துக் கொண்டார்கள். அவர்களில் காமராஜர் முதன்மையானவர். தமிழ்நாட்டுப் பெண்களை அதிகளவில் கல்விநிலையங்களுக்கு வரவழைக்க அவரால் முடிந்தது. எளிய பெண்பிள்ளைகளை கருத்தில்கொண்டு பள்ளிகளில் இலவச சீருடை திட்டத்தையும் அறிமுகப்படுத்தினார், காமராஜர். அடுத்தவர், அறிஞர் அண்ணா. அவருக்கு ஆட்சியாளராக அதிக ஆண்டுகள் கிடைக்கவில்லை. மொத்தம் இரண்டு ஆண்டுகள் மட்டுமே அவர் ஆட்சி செலுத்தினார். ஆனாலும், அந்த குறுகிய கால அளவிலும் சுயமரியாதை திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் அளித்து, தமிழ்ப்பெண்களுக்கான ஒரு சமூக முன்னகர்வை சாத்தியப்படுத்தினார், அண்ணா.

அண்ணா நினைத்ததை கலைஞர் சாத்தியப்படுத்தினார். 1973ம் ஆண்டு, காவல்துறையில் பெண்களுக்கும் பணியிடங்களை ஒதுக்கி மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தினார், கலைஞர். உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்காக 33 சதவிகித இட ஒதுக்கீட்டையும் அவர் அறிமுகப்படுத்தினார். கலைஞரின் 1989 – 1991 ஆட்சிக்காலத்தில் தான், தமிழ்நாட்டில் முதன்முறையாக மகளிர் சுய உதவிக்குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன. அதாவது, தர்மபுரியில் ‘மாரியம்மன் மகளிர் மன்றம்’ என்ற பெயரில் இயங்கிய மகளிர் குழுவை, சுய உதவிக்குழுவாக மாற்றினார், கலைஞர். அதே ஆட்சிக்காலத்தில் தான், பெண்களுக்கும் பாரம்பரிய சொத்தில் சம உரிமை என்ற வரலாற்று சிறப்புமிக்க சட்டத்தையும் நிறைவேற்றி, இந்தியாவை திரும்பி பார்க்கவைத்தார் கலைஞர். இவையெல்லாம் பொருளாதார தளத்தில் என்றால், சமூக தளத்தில் கோயில் அறங்காவலர் குழுவில் கண்டிப்பாக ஒரு பெண் இருக்கவேண்டும் என்று மிகபுரட்சிகரமான ஒரு செயல்திட்டத்தை கொண்டுவந்தார், கலைஞர். சிந்திக்கவும். ஒரு காலத்தில் பெண்களால் கோயில்களுக்குள்ளேயே நுழையமுடியாத நிலை இருந்தது. அதனால் தான், இந்தியப் பெண்களை சாதியடையாளமற்ற ஒடுக்கப்பட்டவர்கள் என்று அம்பேத்கர் போன்றவர்கள் எழுதினார்கள். ஆனால், அங்கிருந்து பெண்களை கோயில் நிர்வாகக்குழு வரைக்கும் அழைத்து வந்து சாதித்தார், கலைஞர். எம்.ஜி.ஆரும் சளைத்தவர் அல்ல. அவரது காலத்தில் ’Towards equal rights’ என்ற அடிக்குறிப்புடன் கொடைக்கானலில் அன்னை தெரஸா பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. சத்துணவு திட்டத்தையும் பெண்களை அதிகளவில் பணிக்கு அமர்த்தும் வகையில் வடிவமைத்தார், எம்.ஜி.ஆர். அந்தத் திட்டத்தின் 99 சதவிகித சமையலர்கள் இன்றும் பெரும்பாலும் பெண்களே.

காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர், கலைஞர் என எல்லோரும் விட்ட இடைவெளிகளை நிரப்ப, வந்தார் ஜெயலலிதா! அவரது ஆட்சிக்காலத்தை தமிழ்நாட்டுப் பெண்களுக்கான தங்கக் காலம் என்றே சொல்லலாம். உதாரணத்துக்கு, ஜெயலலிதாவுக்கு முன்புவரை ‘பெண்சிசுக்  கொலை’ தமிழ்நாட்டின் ஒரு முக்கியமான சமூக பிரச்சனை. பாரதிராஜாவின் ‘கருத்தம்மா’ போன்ற திரைப்படங்களில் அதன் கோரத்தடங்களை நம்மால் காணமுடியும். ஆனால், இன்று கருத்தம்மா போன்ற ஒரு கதையை எந்த திரைப்பட இயக்குனரும் யோசிக்கமுடியாது. ஏனென்றால், பெண்சிசுக்கொலையை ஏறக்குறைய முற்றிலுமாகவே ஒழித்துவிட்டது தமிழ்நாடு. அதற்கு, மிகமுக்கிய பங்காற்றியது, ஜெயலலிதாவின் ‘தொட்டில் குழந்தை’ திட்டம் (தொட்டில் குழந்தை திட்டத்தை 1990ம் ஆண்டு ஒரு சிறிய அளவில் கலைஞர் சேலத்தில் தொடங்கினார். பின்னர், ஜெயலலிதா அதை தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தினார்). அடுத்து, கருவிலிருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று கண்டுபிடிக்கும் நடைமுறைக்கும் ஜெயலலிதா முற்றுப்புள்ளி வைத்தார். தரவுகளின் படி, இன்றும் ‘தாய் – சேய்’ பாதுகாப்பில் இந்தியாவில் தமிழ்நாடே முதன்மை மாநிலமாக இருக்கிறது. தமிழ்நாட்டைப் போல ‘பெண்கள் கருவுறுதல் விகிதம் ( Tamilnadu Fertility Rate – 1.6)’ சரியான நிலையில் இருக்கும் மாநிலமும் இந்தியாவில் வெகு குறைவே. அதேபோல, பிரசவத்தின் போது பெண்கள் இறக்கும் விகிதமும் தமிழ்நாட்டில் நன்றாகவே கட்டுப்பாட்டில் இருக்கிறது. பெரும்பாலும், தமிழ்நாட்டு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகள் ஆரோக்கியமாகவே பிறக்கின்றன. குழந்தைகள் இறந்து பிறப்பதும், பிறந்தவுடன் இறப்பதும் இங்கே அவ்வளவாக இல்லை (Maternal Mortality Rate – 66 per 1,00,000 live births).

இவை மட்டுமில்லாமல், பெண்களுக்கான மகப்பேறு கால உதவித்தொகை, குழந்தை வளர்ப்புக்கான பரிசுப் பெட்டகம், பள்ளி செல்லும் பெண் குழந்தைகளுக்கான இலவச பாடப்புத்தகம், பை, எழுதுப் பொருள்கள், சைக்கிள், சீருடை, மடிக் கணினி, குடும்பத்தில் பெண் குழந்தை மட்டுமே எனில் அவர்கள் பெயரில் வைப்புத்தொகை,  தாலிக்குத்  தங்கம், மானிய விலையில் இருசக்கர வாகனம் என்று பெண்களின் நலன் சார்ந்த (Women Centric) தொலைநோக்கு திட்டங்களை தொடர்ச்சியாக அமல்படுத்தினார், ஜெயலலிதா. இவ்வளவும் நடந்தபிறகே, தமிழ்நாட்டுப் பெண்கள் முன்னேற்றத்தைப் பார்த்தனர். இன்று, நாடு தழுவிய பெண் தொழில்முனைவோர் பட்டியலிலும் கூட தமிழ்நாட்டுப் பெண்களே முதலிடம் வகிக்கின்றனர்!

எதிர்காலம்: 

எல்லாம் செய்துவிட்டோம். ஆனால், இன்னும் கூட தமிழ்நாட்டுப் பெண்களை முன்னால் கொண்டுசெல்ல நம்மால் முடியும். ஆய்வுசெய்து பார்த்தால், அரசுத்துறைகளில் ஏற்பட்டிருக்கும் பெண்களின் வளர்ச்சி, தனியார் துறைகளில் அவ்வளவாக இல்லை. இந்த நிமிடம் கூட தனியார் பணியிடங்களில் பாலினப் பாகுபாடு ஒரு முக்கியப் பிரச்சனையாக தமிழ்நாட்டில் இருக்கிறது. அதோடு, பிற்போக்குத்தனங்கள் நிறைந்த தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் திரைப்படங்கள், தமிழ்நாட்டுப் பெண்களின் சமூக முன்னேற்றத்துக்கு புதிய தடையாக உருமாறியிருக்கின்றன. இவற்றையெல்லாம் களைந்து, ஒரு சிறிய பிசிறு கூட இல்லாமல், நூறு சதவிகித ஆண் – பெண் சமத்துவத்தை தமிழ்நாட்டில் நிறுவிவிட்டால், அப்புறம் நம்மை அடிக்க இந்தியாவில் அல்ல, உலகிலேயே எவரும் இல்லை!