leader-profile-image

Stop Hindi Imposition

இந்தியாவே சிக்கலான நாடு. அதில், ‘மொழி’ என்பது இன்னும் சிக்கலானது. ஆகவே, இருக்கும் நிலையை அப்படியே நீடிக்க விடுவது தான், எந்த அறிவுள்ள அரசாங்கமும் செய்யக்கூடியது. 

அதை மீறி, இந்தி மொழியை (இந்தி எனும் போது சமஸ்கிருதத்தையும் சேர்த்தே சொல்கிறேன்) திணிக்க முயற்சித்தால், கண்டிப்பாக அது இந்திய ஒருமைப்பாட்டின் மீது நடத்தப்படும் போராகவே முடியும். இந்த அபாயத்தை உணர்ந்ததால் தான், நேருவே ‘மொழி’ விவகாரத்தில் அமைதியாக நகர்ந்தார். 

ஆனால், மோடி ஆணவத்தில் ஆடுகிறார். கையில் அதிகாரம் இருக்கிறது என்பதால், எதையும் செய்துவிட முடியும் என கனவு காண்கிறார். இந்தியாவை ‘இந்து ஆதிக்க தேசமாக’ மாற்றுவது அவரது இலக்கு. அதாவது, இந்து ராஷ்டிரம் (Hindu State)! 

இப்போதே அப்படித்தானே இருக்கிறது என நினைக்கவேண்டாம். இது மக்களின் ஏற்பு இல்லாமல் இருக்கிறது. ஆனால், உண்மையான இந்து ராஷ்டிரம் மக்களின் ஏற்பின் மேல் நிர்மாணிக்கப்படும். அந்த மக்களின் ஏற்பை அடையத்தான் இந்தியை தேசியமயமாக்க துடிக்கிறார், மோடி. 

ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவின் போது, வடக்கே எழுந்த உணர்வெழுச்சி நினைவிருக்கிறதா?! அதை அப்படியே இந்தியாவின் எல்லா மாநிலங்களுக்கும் கடத்துவது தான் மோடியின் திட்டம். அதற்கு தடையாக பிராந்திய மொழி அறிவு இருக்கிறது. 

என்ன தான் ஒரு ஆந்திராக்காரனும், கன்னடக்காரனும் அவனை இந்துவாக உணர்ந்தாலும், அது இரண்டாம் பட்சமே. முதலில் அவன் ஆந்திரன் மற்றும் கன்னடன். அந்த உணர்வு அவனுக்குள் நீடிக்கும் வரை மோடியால் இந்து ராஷ்டிரத்தை அவன் மேல் ஏற்றிவைக்க முடியாது. 

ஏனென்றால், அவன் எப்போது வேண்டுமானால் அதை உதறிவிடுவான். மராட்டியத்தில் மிகவலிமையாகவே இருக்கிறது இந்துத்துவம். ஆனால், மராத்தி அடையாளத்துக்கு என்று ஒரு பிரச்சனை வரட்டும். ஒரு மராத்தியன் அந்த நிமிடமே இந்து அடையாளத்தை புறந்தள்ளி வெறும் மராத்தியன் மட்டுமே என மாறிவிடுவான். 

இதை உணர்ந்து தான், சிவன் சேனாவை அமைக்காமல் சிவாஜிசேனாவை அமைத்தார் பால் தாக்கரே. ராமர் கோயில் அமைக்க வேண்டும் என்று மிகத்தீவிரமாக குரல் கொடுத்தவர், உத்தவ் தாக்கரே. பால் தாக்கரேவின் பாதம் கூட அயோத்தியில் பட்டதில்லை. ஆனால், உத்தவின் பாதம் அயோத்தியில் பட்டது. 

‘ராமர் கோயிலை நீங்கள் கட்டுகிறீர்களா இல்லை நாங்கள் கட்டட்டுமா’ என்று, அயோத்தி மண்ணில் நின்று கொக்கரித்தவர், உத்தவ். ஆனால், மராட்டியத்தை காக்கவேண்டிய பொறுப்புக்கு வந்ததும், அவர் அடங்கினார். ராமர் கோயிலை விட மும்பையின் வெள்ளப்பெருக்கு தான் இப்போது அவருக்கு முக்கியம். 

இதுதான் பிராந்திய உணர்வு. இல்லை, அதிகாரத்துக்காக அவர் சமரசம்செய்தார் என்றும் எடுத்துக்கொள்ள முடியாது. ஏனென்றால், பதவிக்கு வந்து 100 நாட்கள் முடிந்ததும் அவர்சென்று நின்ற முதல் இடம் அயோத்தியே. ‘ராமர்கோயில் கட்ட 1 கோடி ரூபாய் நன்கொடை தருவேன்’ என்றும்கூட, அவர் அப்போது அறிவித்தார்.

ஆக, அதிகாரத்துக்காக அவர் அமைதி காக்கவில்லை. பிரியங்காவே வாழ்த்துச்சொல்லி கொண்டாட்டத்தில் ஐக்கியமாகும் போது, அவருக்கு என்ன?! விஷயம் இது தான்.. சொந்த மண்ணும் மக்களும் ஒரு பிரச்சனையில் இருக்கையில், அவர் எங்கோ இருக்கும் ராமர்கோயிலுக்காக துள்ளிக்குதிப்பது பெரும் அபத்தமாகி விடும். 

ஆகவே தான் உத்தவிடம் அந்த அமைதி. (இதற்காக, உத்தவ் முழுவதுமாக இந்துத்துவத்தை கைவிட்டு விட்டார் என்று அர்த்தமில்லை. அவருக்கு ராமரை விட சிவாஜி முக்கியம். அதுவே சொல்ல வருவது.) மோடியின் இந்தித் திணிப்பு, இந்தப் பிராந்திய உணர்வை, முதலில் இல்லாமலாக்கும். (12/n)

தமிழன், கன்னடன், ஆந்திரன், மலையாளி என்ற அடையாளங்களை மீறி, எல்லோரையும் இந்து மட்டுமே என்றாக்கும். இப்போது இந்தி தெரிந்தால் தான் இந்தியன் என்று சொல்கிறார்கள் அல்லவா, பின்னாளில் இந்தி தெரிந்தால் தான் இந்து என்று சொல்வார்கள். ஏனென்றால், இந்துத்துவத்தின் மொழி இந்தி தான். 

உத்தவுக்கு இன்றுவரை நல்ல இந்தி தெரியாது. பல இடங்களில் அவர் இந்தி மொழிபெயர்ப்பாளரைத் தான் பயன்படுத்துவார். ஆனால், அதை வெளிப்படையாக அறிவிப்பதில் அவருக்கு எப்போதுமே ஒரு கூச்சம் இருக்கும். அது எதனால் என்றால், இந்தி இந்துத்துவத்தின் மொழி என்பதால்! 

‘ஒரு இந்துத்துவனுக்கு இந்தி தெரியாதா…’ என்ற கேள்வியை அது எழுப்பிவிடும் என்பதால்! இப்போதும் பிராந்திய மொழி சங்கிகள் அவர்களின் பிராந்திய மொழிகளை விட இந்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது, இந்துத்துவ அடையாளத்தை தக்கவைக்க வேண்டும் என்பதற்காகவே! 

ஆக, இந்தி இந்துத்துவத்தின் மொழி! எப்படி, ஹீப்ரூ மொழியை யூதர்களிடையே பரப்பி ஜியோனிஸ்டுகள் இஸ்ரேலை உருவாக்கினார்களோ, அதே போல இந்தியை இந்தியாவெங்கும் பரப்பி இந்து ராஷ்டிரத்தை நிர்மாணித்துவிட முடியும் என்பது, மோடியின் நினைப்பு. 

ஆகவே, இந்தித்திணிப்பை தொடர்ந்து எதிர்ப்போம்! அது, இந்துத்துவத்தையும் இந்து ராஷ்டிரத்தையும் எதிர்ப்பதற்கு சமம் என்பதால்!

Note 1: அதே நேரம், இந்தியை விருப்பப்பட்டு கற்பவர்களை தொந்தரவு செய்யக்கூடாது. அந்த மொழியையும் ஏளனமாக பேசக்கூடாது!

Note 2: அரசியல் காரணங்களுக்காக இந்தியையும், ஆய்வு காரணங்களுக்காக சமஸ்கிருதத்தையும் கற்கவேண்டும் என்பது என் ஆசை. இதில், மறைப்பதற்கு எதுவும் இல்லை.