leader-profile-image

வசந்தகுமார் (வசந்த் அன்ட் கோ)

  • வாடிக்கையாளருக்கு சிறப்பான சேவை தந்தாலே வியாபாரத்தின் சிகரத்தை எட்ட முடியும் என்பதற்கு ஓர் உதாரணம் வசந்த் அன்ட் கோ நிறுவனர் வசந்தகுமார். தவணை முறை திட்டங்கள் வழியாக நடுத்தர மக்களின் கனவை நனவாக்கிய நாயகன்.
  • விஜிபி எனும் நிறுவனத்தில் விற்பனை அதிகாரியாய் பயணத்தை தொடங்கி, பிறகு கிளை மேலாளாராக உயர்ந்து, பின்னர் அங்கிருந்து விலகி வசந்த் அன்ட் கோ வை தொடங்கும்போது வசந்தகுமாருக்கு வயது 28. அவரின் முதலீடு 22 ரூபாய் தான்.
  • முதலில் தன்னுடைய கடையில் அவர் விற்பனை செய்தது நாற்காலி. பின்னர் படிப்படியாக வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி, விற்கத் தொடங்கியவருக்கு ஆரம்பம் ஒன்றும் அவ்வளவாக சரியில்லை. எனவே, சைக்கிளில் பொருட்களை சுமந்துகொண்டு தெருத் தெருவாக சென்று விற்றார். பின்னாட்களில் அதே தெருக்களில் விலை உயர்ந்த கார்களில் பவனி வந்தார். உண்மை, உழைப்பு, உயர்வு இதுவே வசந்தகுமாரின் வெற்றி ஃபார்முலா!
  • 1985 ஆம் ஆண்டு. ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடந்துகொண்டிருந்த தருணம். வண்ணத் தொலைக்காட்சிகள் வரவு ரசிகர்களை உற்சாகப்படுத்திக்கொண்டிருந்தது. அத்தகைய தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது. இதை அறிந்துகொண்ட வசந்தகுமார் அந்தக் குறிப்பிட்ட நிறுவனத்தை அணுகி, ஆர்டர் கேட்டார். அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
  • தந்தை காந்தியவாதி. எனவே ஆரம்பத்தில் எளிமையாகவே ஆடை அணிவார் வசந்தகுமார். ஆனால், அது அவரது தொழில் வாழ்க்கையில் நிறைய சங்கடங்களை கொடுத்தது. பிறகே, அவர் கோட் சூட்டுக்கு மாறினார். கைமேல் பலன் கிடைத்தது. அனுமதி வழங்க மறுத்த, நிறுவனங்கள் பின்னர் ஆர்டர்களை அள்ளிக் குவித்தன. எந்த நிறுவனம் அவருக்கு வாய்ப்பு மறுத்ததோ பின்னர் அதே நிறுவனம் அவரது நேரத்திற்காக காத்திருக்கவும் செய்தது வரலாறு. விளம்பரங்களில் அவர் கோட் சூட்டோடு வருவதின் பின்னணி அதுதான்!
  • `கதர், காந்தி, காமராஜர்’ இவை மூன்றும் வசந்தகுமாருக்கு பிடித்தவை. அண்ணன் குமரி ஆனந்தன் காங்கிரஸ் கட்சியில் முக்கிய பிரமுகர். அதனால் இயல்பாகவே அவருக்குள் காங்கிரஸ் கட்சி பெரும் தாக்கம் செலுத்தி இருந்தது. அக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு மக்கள் பணி செய்தார். காங்கிரஸ் கட்சியின் சார்பில் நாங்குநேரி தொகுதியில் நின்று 2006 மற்றும் 2016 ஆம் ஆண்டில் எம்.எல்.ஏ.வாக தேர்வானவர். கன்னியாகுமரி தொகுதியின் எம்.பி.யாகவும் பதவிகளை வகித்தார்.
  • பெரும்பாலானோர் ஓர் கட்சியில் சேர்ந்த பிறகே தொழிலதிபர் ஆவார்கள். ஆனால், வசந்தகுமார் இதற்கு நேரெதிர். அவர் தொழிலதிபராகி பல வருடங்களுக்குப் பின்னரே காங்கிரஸில் தன்னை இணைத்துக்கொண்டார். ஒருபோதும் வியாபாரத்திற்குள் அவர் கட்சியை கொண்டுவரவில்லை. அது அவருக்கு பெரும் வாடிக்கையாளர்களை கொண்டுவந்து சேர்த்தது.
  • தன் வெற்றிப் பயணம் குறித்து, தொடர்ச்சியாக இளைஞர்களிடத்தில் உத்வேகம் தரும் வகையில் பல சொற்பொழிவுகளை நடத்தியவர். தன் வாழ்க்கை குறித்து அவர் எழுதிய `வெற்றிக்கொடி கட்டு’ என்ற நூலை ரஜினிகாந்த் வெளியிட்டார்.
  • ஒரு பொருளை சந்தையில் பிரபலப்படுத்த வேண்டுமென்றால் பிரபலமான நடிகரையோ, நடிகையையோதான் விளம்பரத்துக்குப் பயன்படுத்துவார்கள். அதை உடைத்து, தன்னையே தன் கடையின் விளம்பர மாடலாக மாற்றிக் கொண்டவர். இன்று வசந்த் அன் கோ என்ற பெயரை கேட்டவுடன் சிரித்த முகத்தோடு கோட் சூட் அணிந்தபடி சாய்ந்த நாற்காலியிலிருந்து திரும்பும் வசந்தகுமாரை உங்கள் நினைவுக்கு வரும். இப்போது பலரும் அவரது பாணியை பின்பற்றுவதற்கு ஊக்கச் சக்தியாக இருந்தார் வசந்தகுமார் என்றால் அது மிகையில்லை.