leader-profile-image

அப்துல் கலாம்

  • தமிழ்நாடு இந்தியாவுக்கு அளித்த ‘விண் ஞானி’! அப்துல் கலாமைப் போன்ற ஒருவரின் அர்ப்பணிப்பு இல்லையென்றால், இந்தியாவின் ஏவுகணை வெற்றி நிறையவே தாமதமாகி யிருக்கும். விக்ரம் சாராபாயின் உடனேயே இருந்து அதை மிகச்சீக்கிரமே சாத்தியமாக்கி காட்டியவர், அப்துல் கலாம்!
  • ‘படிப்பு’ ஒருவனை எவ்வளவு உயரத்திற்கு கொண்டுசென்று வைக்கும் என்பதற்கு அப்துல் கலாம் சிறந்த உதாரணம். ‘அக்னிச் சிறகுகளை’ புரட்டும் எவனும் படிப்பின் மகத்துவத்தை உணராமல் இருக்கமாட்டான்.
  • ராமேஸ்வரத்தில் வாழ்ந்து கெட்ட பெரிய குடும்பம் ஒன்றில் பிறந்தவர் அப்துல் கலாம். அவரது குடும்பத்தில் ஐந்து மகன்கள் மற்றும் ஐந்து மகள்கள். இது அல்லாமல் நிறைய சொந்தக் காரர்களும் உண்டு. ‘எப்போதும் என் வீட்டில் மூன்று தொட்டில்கள் ஆடிக்கொண்டிருக்கும். அதைப் பார்த்தபடியே நான் பள்ளிக்குச் செல்வேன்’ என்று சொல்கிறார், அப்துல் கலாம். அவரது அப்பாவுக்கு தோணி ஓட்டுவது தான் தொழில். அதில் வரும் சொற்ப வருமானமே மொத்த குடும்பத்துக்குமான ஆதாரம். ஆனாலும், அப்துல் கலாமை பெரும்படிப்பு படிக்கவைத்து விடவேண்டும் என்று அவரது அம்மாவுக்கு கொள்ளை ஆசை. ‘அதிகாலை 4 மணிக்கு எல்லாம் என்னை எழுப்பி குளிப்பாட்டி, கணித வகுப்புக்கு அனுப்பிவைத்து விடுவார். எனக்கு பொழுதுவிடிவதே கணித ஆசிரியர் சுவாமியார் வீட்டில் தான்’ என்கிறார், அப்துல் கலாம்.
  • நாம் வியக்கும் ஒவ்வொரு சாதனையாளருக்குப் பின்னாலும் உறங்காத ஒரு விழி இருக்கிறது என்பார்கள். அப்துல்கலாமுக்கு பின்னால் இருந்த அந்த உறங்காத விழி, அவரது அம்மா! ‘என் அம்மாவே எனக்கு ஆற்றல் அளித்தார். என் அம்மாவே எனக்கு நம்பிக்கை அளித்தார். அவர் தினம் ஐந்து வேலைகள் நமாஸ் செய்வார். அப்போதெல்லாம் அவரைத் தூரத்தில் இருந்து பார்ப்பேன். ஒரு தேவதையைப் போல அவர் காட்சி தருவார்’ என்று உருகுகிறார், அப்துல் கலாம்.
  • உண்மையில், அப்துல் கலாம் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவர் அல்ல. மிகவும் Average மாணவர் தான் அவர். ஆனாலும், அவருக்கு படிப்பின் மீது பற்று இருந்தது. ‘நன்றாக படித்து எதிர்காலத்தில் நல்ல நிலைக்கு வருவேன்’ என்று உறுதியாக நம்பினார். விடாமுயற்சியால் அதைச் செய்தும் காட்டினார்! அவர் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மாதச் சம்பளத்துக்காக சாதாரண பணிகளில் முடங்கிப்போனபோது, அப்துல் கலாம் மட்டும் அவரது கனவுகளை வானளவுக்கு விரித்துக்கொண்டே போனார். அவர்கள், நிறுவனம் அளித்த நோட்டுகளை தடவிப்பார்த்து சந்தோசம் அடைகையில், அப்துல்கலாம் நாட்டுக்காக விட்ட ஏவுகணைகளை தொட்டுப்பார்த்து சந்தோசம் அடைந்தார். அந்த பணப்பிரியர்கள் இன்று வரலாற்றில் இல்லை. ஆனால், அப்துல் கலாம் இருக்கிறார்!
  • அப்துல் கலாமின் வாழ்க்கையில், திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரிக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. அங்கு தான் அவர் நல்ல படிப்பாளி என்ற நிலையைக் கடந்து, நல்ல லட்சியவாதி என்ற நிலைக்கு மாறினார்.
  • ஆசிரியர்களின் மீது அளவில்லா பற்று கொண்டிருந்தார், அப்துல் கலாம். அவரது தொடக்கப்பள்ளி ஆசிரியர் முத்துவில் இருந்து, எம்.ஐ.டி ஆசிரியர் ஶ்ரீனிவாசன் வரை அனைவரையும் நினைவுகூர்ந்து பேசுவார். கல்லூரி மாணவர்கள் முன்னால் உரையாற்றும் போதும், ‘ஆசிரியர்களை மதியுங்கள். அதில் இருந்தே எல்லாம் ஆரம்பமாகிறது’ என்று மறக்காமல் சொல்வார். 2001ம் ஆண்டு, அண்ணா பல்கலைக்கழகத்தில் கவுரவ பேரா சிரியராக இணைந்தார் அப்துல் கலாம். வாழ்வின் கடைசிவரை அதைத் தொடர்ந்தார்!
  • 2002ம் ஆண்டு இந்தியாவின் 11வது குடியரசுத்தலைவராக பொறுப்பேற்றார், அப்துல் கலாம். 2007 வரை அவர் அந்தப் பதவியில் இருந்தார். ராஷ்டிரியபதி பவன் மிகப்பெரிய அரண்மனை. ஆனால் அதற்குள் ஒரு எளிய வாழ்க்கையையே வாழ்ந்தார் அப்துல் கலாம். அவர் காலத்தில் தான், ராஷ்டிரியபதி பவன் முதன்முறையாக மக்கள் பார்வைக்காக திறந்துவிடப்பட்டது.
  • ‘கனவு காணுங்கள்’ என்ற வார்த்தைக்கு சொந்தக்காரர்!