leader-profile-image

வடிவேலு

  • தமிழ்ச்சமூகத்தின் Evergreen Stress Buster, நம் வைகைப்புயல் வடிவேலு! சில பேர் பேசினால் சிரிப்பு வரும். சில பேர் சேட்டைகள் செய்தால் சிரிப்பு வரும். ஆனால், வடிவேலுவைப் பார்த்தாலே எல்லோருக்கும் சிரிப்பு வரும்!
  • மதுரை தான் வடிவேலுவின் சொந்த ஊர். மிகவும் எளிய பின்னணி அவருடையது. ஆனால், சிறுவயதில் இருந்தே நடிப்பின் மீது ஆர்வம். ஏதாவது சேட்டை செய்து எல்லோரையும் சிரிக்கவைத்துக் கொண்டே இருப்பார். 90களின் ஆரம்பகாலத்தில் சினிமா வாய்ப்பு தேடி வடிவேலு சென்னை வந்தார். ராஜ்கிரண் அவரை ‘என் ராசாவின் மனசிலே’ படத்தில் அறிமுக ப்படுத்தினார். அதற்கு முன்னாலேயே, ‘என் தங்கை கல்யாணி’ படத்தில் வடிவேலு ஒரு சிறிய காட்சியில் தோன்றினார். ஆனால், அவரது பெயர் அந்தப் படத்தின் டைட்டில் கார்டில் இடம்பெயறவில்லை. ஆகவே, ‘என் ராசாவின் மனசிலே’ தான் வடிவேலுவின் அதிகாரப் பூர்வ முதல் படம்!
  • வடிவேலுவின் நகைச்சுவை பாணி தனித்துவமானது. நாகேஷூம், சந்திரபாபுவும் ’Slabstick’ வகை காமெடியில் பின்னியெடுப்பார்கள். அதாவது, உடலசைவுகளின் மூலம் அவர்கள் அதிகமாக சிரிக்கவைப்பார்கள். கவுண்டமணியின் காமெடி பெரும்பாலும், ‘Dialogue’ வகை காமெடி. அதாவது, பேசுதலும் மற்றவர்களை கலாய்த்தலும் தான் அவரது காமெடி. ஆனால், வடிவேலுவின் காமெடியில் இரண்டுமே கலந்திருக்கும். அதற்கு வின்னர் படம் சரியான உதாரணம். காலில் அடிபட்டு விசுக்கி நடக்கும் காட்சியில் அவ்வளவாக வசனமே இருக்காது. ஆனால், மக்கள் விழுந்து சிரிப்பார்கள். பஞ்சாயத்து காட்சியில், ‘சங்கமே அபராதத்துல தான் ஓடுது…’ என பெரும்பாலும் வசனங்கள் தான். அதற்கும், மக்கள் விழுந்து சிரிப்பார்கள். இது தான் வடிவேலு! அதே போல, பிறரை இழிவுபடுத்தாமல் அதிகம் தன்னை இழிவுபடுத்தி மக்களை சிரிக்க வைப்பார் வடிவேலு!
  • தமிழ் இணைய உலகின் சூப்பர் ஸ்டார் வடிவேலு தான். வடிவேலுவின் மீம்களைப் பார்க்காமல் தமிழனுக்கு எந்தப் பொழுதும் விடிந்ததுமில்லை, முடிந்ததுமில்லை. அது அரசியலோ, சினிமாவோ, விளையாட்டோ, எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்திருப்பார் வடிவேலு.
  • தமிழனின் வாழ்க்கையில் ஒருநாள் கூட வடிவேலுவின் வசனத்தை உச்சரிக்காமல் கடந்து செல்லாது. ‘எவ்வளவு நேரம் தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது’, ‘தம்பி டீ இன்னும் வரல’, ‘அது போன மாசம், இது இந்த மாசம்’, ‘வாழ்க்கைன்னா சில அடிகள் விழத்தான் செய்யும்’ என, வடிவேலுவின் வசனத்தை ஒரு முறையேனும் உச்சரிக்காத தரப்பே இங்கு இல்லை.
  • வடிவேலு அளவுக்கு சமூகத்தின் விதவிதமான மனிதர்களின் பாத்திரங்களை ஏற்று நடித்த நடிகர்களும் இங்கு குறைவே. கல்லூரி மாணவனில் இருந்து கட்டையை அடுக்கு பிணைத்தை எரிக்கும் வெட்டியான் கதாபாத்திரம் வரைக்கும் வடிவேலு செய்திருக்கிறார்.  அத்தனையுமே பட்டாசு ரகம். முக்கியமாக அந்தக் கதாபாத்திரங்களின் பெயர்கள் ஆய்வுக்குரியவை. ’நாய் சேகர், பாடிசோடா, கைப்புள்ள, ஸ்டைல் பாண்டி’ என எல்லா பாத்திரங்களிலும், தமிழர்களை கண்ணீல் தண்ணீர் வரும் அளவுக்கு சிரிக்க வைத்திருக்கிறார்.
  • ஒரு சில நடிகர்களை மட்டுமே ‘அவர்கள் நடிக்கிறார்கள்’ என்பதையறியாமல் மக்கள் ரசித்துக் கொண்டிருப்பார்கள். தமிழில் ரஜினிக்கு அடுத்து, அத்தகைய திறனை இயல்பாகப் பெற்றவர், வடிவேலு.
  • எத்தனையோ ஆன்மீகவாதிகள் சொல்லியும் விளங்காத வாழ்க்கையின் தத்துவத்தை, ‘லொஜக் – பிறப்பு, மொஜக் – வாழ்வு, பஜக் – இறப்பு’ என வெறும் மூன்றே வரியில் தமிழர்களுக்கு சொல்லிச் சென்றார், வடிவேலு.
  • தமிழ் உள்ளவரை, தமிழர்கள் உள்ளவரை வாழ்வார் வடிவேலு! அவருக்கு ‘எண்ட் கார்டே’ கிடையாது!