leader-profile-image

கமல்ஹாசன்

 • தமிழ்த்திரையின் தசாவதாரன்! முகம்முழுக்க தழும்புகளோடு அறம்பேசும் அன்பே சிவமாக இருக்கட்டும், காலைவளைத்து உயரம் குறைத்து குரூரமாக சிரிக்கும் அபூர்வ சகோதரர் களாக இருக்கட்டும், கமல் நடிப்பின் ’நாயகன்’!
 • படித்தவர்களால் நிறைந்தது கமலின் குடும்பம். அப்பா, அண்ணன் என எல்லோருமே பெரிய வழக்கறிஞர்கள். அவர்களில் கமல் மட்டும் தான் படிக்காதவர்! அம்மா ராஜலட்சுமியின் அரவணைப்பில் தான் அவர் பெரும்பாலும் இருந்தார். கமல் நடிப்பின் முதல் ரசிகையும் அவர் தான்!
 • பால்குடி மறவாத பாலகனாக இருக்கும்போதே கமல் தமிழ்த்திரையில் அறிமுகமாகிவிட்டார். அவரை அறிமுகப்படுத்தியவர் ஏவி மெய்யப்ப செட்டியார். ஒருநாள் ஏவிஎம் ஸ்டூடியோவுக்கு சென்ற கமலை அழைத்து மடியில் உட்காரவைத்து, ‘படத்தில் நடிக்கிறாயா…’ என்று கேட்டிருக்கிறார், செட்டியார். ‘இது ஏதோ ஒரு புது விளையாட்டு போல’ என்று நினைத்து கமலும் சம்மதித்து விட்டார். அன்று தொடங்கியது ஒரு புது வரலாறு!
 • கமலை எப்போதும் ‘முடிவிலா முகங்கள் கொண்டவர்’ என்று வரையறுப்பார், எழுத்தாளர் ஜெயமோகன். அது முற்றிலும் சரி! கமல் திரையில் போடாத வேடங்கள் இல்லை. ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு அடி வாங்கி முகம் வீங்கிய குருதிப்புனலும், பாதி சிரைத்த தலை மற்றும் மீசையோடு நடித்த விருமாண்டியும் எந்த தமிழ் நடிகனுமே செய்யத் தயங்கும் கதாபாத்திரங்கள். ஆனால், கமல் செய்தார். ஏனென்றால், அவர் நடிகன் அல்ல, அதையும் மீறிய ‘கலைஞன்’! ஒரே படத்தில் பத்து முகங்களை அவர் வெளிப்படுத்திய தசாவதாரம் ஒரு உலக சாதனை!
 • தமிழில் ‘மெத்தேட் ஆக்டிங்’ செய்த முதல் கலைஞனும் கமல் தான். நாயகனில் அதன் தடயங்கள் அதிகமாகவே தெரியும். ‘மெத்தேட் ஆக்டிங்’ என்பது பேச்சு, செயல், மனநிலை என எல்லாவற்றிலும் அந்தக் கதாபாத்திரமாகவே மாறி நடிப்பது. ஹாலிவுட்டில் மார்லன் பிராண்டோ, டஸ்டின் ஹாப்மேன் போன்ற நடிகர்கள் அதைப் பிரபலப்படுத்தினார்கள். தமிழில் அதைச் சிறப்பாக செய்தவர் கமல்.
 • தமிழ் சினிமாவின் முதல் ‘Fashion Freak’ கதாநாயகனும் கமல் தான். உலகளவில் எந்த ஃபேஷன் டிரெண்டானாலும் அதை எப்படியாவது தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்திவிடுவார். பெல் பாட்டம், ஃபங்க் ஹேர்கட் என எண்பதுகளை கலக்கியெடுத்தார், கமல்!
 • நாற்காலி போல நின்ற இடத்திலேயே சுழன்று கொண்டிருந்த தமிழ்க் கதாநாயகர்களின் நடனமுறையையும் கமல் தான் மாற்றினார். கமலுக்குப் பிறகே தமிழ்த்திரையில் சுறு சுறுப்பான நடன அசைவுகள் அறிமுகமாயின. இப்போது அதெல்லாம் சாதாரணமாக தெரியும். ஆனால், முன்மாதிரிகள் இல்லாத ஒரு காலத்தில் ஒருவன் அதைச் செய்தான் என்பது மிகப்பெரிய விஷயம்!
 • தமிழ்சினிமாவை நவீனப்படுத்தியதில் முக்கியானவர், கமல்! அவரது விக்ரம் படத்தில் தான் முதன்முதலில் கணினி மூலம் இசை பதிவு செய்வது தமிழில் தொடங்கியது. தேவர் மகன் படத்தில் திரைக்கதை எழுதும் மென்பொருளை அவர் அறிமுகம் செய்தார். மகாநதியில் ‘Avid’ எடிட்டிங்கை கொண்டுவந்தார். அடுத்த சில ஆண்டுகளில், குருதிப்புனல் மூலம் ‘Dolby Stereo” சவுண்டிங் தொழில்நுட்பத்தையும் அறிமுகப்படுத்தினார். விருமாண்டி படத்தில் தான் முதன்முதலில் லைவ் சவுண்ட் ரெக்கார்டிங் அறிமுகமானது. மும்பை எக்ஸ்பிரஸ் வணிக ரீதியாக வெற்றியடையாத படம் தான். ஆனால், அதிலிருந்து தான் தமிழ் சினிமா Digitalize ஆனது. அதாவது, அதுவரை 35mm பிலிம் ரீலை வைத்துத் தான் திரையரங்குகளில் படம் ஓட்டிக் கொண்டிருந்தார்கள். ஆனால், மும்பை எக்ஸ்பிரஸில் கமல் அதை மாற்றினார். ‘DCP (Digital Cinema Package)’ யை அறிமுகப்படுத்தி பட வெளியிட்டில் ஒரு புரட்சியை ஏற்படுத்தினார். விஸ்வரூபத்தைப் பற்றி சொல்லவே வேண்டாம். இன்றைய OTT யுகத்திற்கு அதுவே ஆரம்பம். அதுவும் இல்லாமல் அதில் தான் ‘Auro 3D’ சவுண்ட் தொழில்நுட்பமும் தமிழுக்கு அறிமுகமானது. சந்தேகமே வேண்டாம். கமல் நிச்சயம் ஆச்சர்யங்களால் ஆனவர்!
 • திரையில் மட்டுமல்ல, தமிழ் மண்ணுக்கும் நிறைய தொழில்நுட்பக் கருவிகள் கமல் படங்களின் மூலமே அறிமுகமானது., அபூர்வ சகோதரர்கள் படத்தில் டெல்லி கணேஷை கமல் கொல்லும் அந்த மர்மமான இயந்திரம் இயற்பியலின் இயங்குவிதியை எளிதாக நம் மாணவர்களுக்கு சொன்னது. அடுத்து, மைக்கேல் மதன காமராஜனில் முதன்முதலாக லேப்டாப்பை காட்டினார், கமல். அவிநாசியின் திருட்டுத்தனத்தை அந்த லேப்டாப்பில் கணக்கிட்டுத் தான் வெளிக் கொண்டுவருவார், அவர். மைக்கேல் மதன காமராஜன் வெளிவந்த ஆண்டு 1990.  அந்த லேப்டாப், இப்போதைய லைட் வெயிட் ஐபிஎம் அல்லது மேக்புக் ஏரின் ’ஹெவி வெயிட்’ வடிவம்! அடுத்து சிங்காரவேலனில் போட்டோஷாப். குஷ்பூவின் சிறுவயது போட்டோவை வைத்து இளம்வயது குஷ்பூ எப்படியிருப்பார் என்று கமல் கண்டுபிடிக்கும் அந்தக் காட்சி தமிழ்நாட்டில் மிகவும பிரபலம். ரொம்ப நாட்கள் கழித்து தசாவதாரத்தில் ஒரு தொழில்நுட்பக் கருவியை நமக்கு அறிமுகப்படுத்தினார், கமல். அது தான் செக்வே (Segway). சிறிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் போல அது இருக்கும். பெரிய ஆய்வகங்களில், நிறுவனங்களில் அதை ஒரு நடக்கும் கருவியாக பயன்படுத்துவார்கள். தசாவதாரத்தின் முதல் ரீலில் வரும் லேப் சீனில், கமல் அதைப் பயன்படுத்துவார்!
 • நடிப்பு மட்டுமல்ல, திரை எழுத்திலும் பயங்கரன் கமல். பாலச்சந்தர், பாரதிராஜா, பாலு மகேந்திரா, கே.விஸ்வநதாத் என பெரிய இயக்குனர்களுடன் பழகி, அழகாக திரை நுணுக்கங்களை அவர் கற்றுக்கொண்டார். அவரது தேவர் மகன், மைக்கேல் மதன காமராஜன் திரைக்கதைகள், உலகளவிலேயே மிகச்சிறந்த திரைக்கதைகளில் சேர்க்கப்பட வேண்டியவை.
 • கிரேஸி மோகனை மிகச்சரியாக பயன்படுத்தியவர் கமல் தான். இருவரது காம்பினேஷனில் வந்த எந்த காமெடிப்படமும் தமிழ் ரசிகர்களை ஏமாற்றியதே இல்லை. மைக்கேல் மதன காமராஜன், பஞ்ச தந்திரம், வசூல்ராஜா போன்ற படங்கள் கமலுக்கும் கிரேஸிக்கும் மட்டுமே சாத்தியம்!
 • கமல் இதுவரை 4 (மூன்றாம் பிறை, நாயகன், தேவர் மகன், இந்தியன்) தேசிய விருதுகளை வென்றிருக்கிறார். 19 முறை பிலிம்ஃபேர் விருது அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இதுவரை எந்த இந்திய நடிகரும் கமலின் ‘விருது’ சாதனையை உடைத்ததில்லை.
 • பெரியத்திரையில் இருந்து சின்னத்திரைக்கு வரும் நடிகர்களுக்கும் கமல் தற்போது ஒரு ‘Bench Mark’ செட் செய்து வருகிறார். அவரது பிக்பாஸ் நிகழ்ச்சி, தமிழ் சேனல்களின் முன்னணி நிகழ்ச்சியாக ரேட் செய்யப்பட்டிருக்கிறது. அதில், கமல் காட்டும் ஒவ்வொரு பாவமும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை எப்படி ‘Compose’ செய்யவேண்டும் என்பதற்கான பாடம்!
 • நிரந்தர கலைஞன்! இப்போது கேமிராவுக்கு முன்னால் வந்து நின்றாலும் கமலுக்கு ஈடுகொடுக்கக் கூடிய நடிகர்கள் அநேகமாக இங்கு இல்லை!