leader-profile-image

பாரதிராஜா

 • புதிய அலை தமிழ் சினிமாவின் முதல் புதல்வன், பாரதிராஜா! அவரது பதினாறு வயதினிலேவில் இருந்து தான், தமிழ் சினிமாவில் இயல்புத்தன்மை இன்றியமையாத ஒன்றாக மாறியது! அவரை அடியொற்றி மகேந்திரன் வந்தார். மகேந்திரனை அடியொற்றி பாலு மகேந்திரா வந்தார். பாலு மகேந்திராவை அடியொற்றி பாலா வந்தார். பாலாவை அடியொற்றி சசிகுமாரும் அமீரும் வந்தார்கள். ஆக, கிட்டத்தட்ட நான்கு தலைமுறையின் கதை சொல்லும் பாணியையே பாரதிராஜா தீர்மானித்தார்.
 • ஊர்க்குருவியென ஸ்டூடியோக்களில் மட்டுமே வட்டமடித்துக் கொண்டிருந்த தமிழ்சினிமாவை, சிறகுகள் சூட்டி வானத்துக்கு அழைத்துச் சென்றவர், பாரதிராஜா தான்! அவர் காட்டிய புதுமை கிராமங்களையும், விந்தை மனிதர்களையும் மதிப்பிடுவது சிரமம்! பதினாறு வயதினிலே பரட்டையில் இருந்து, பொம்மலாட்டம் ராணா வரை அவரது கதாபாத்திரங்கள் அனைத்துமே தனித்துவம் கொண்டவை, முன்மாதிரிகள் அற்றவை!
 • தமிழ்த் திரைத்துறையில் பாரதிராஜா அடைந்த வெற்றி எளிதில் கடந்துபோகக் கூடியது அல்ல. நகர வாழ்க்கையின் பிரம்மாண்டத்தைக் கண்டு அஞ்சிய சாதாரண தமிழ் இளைஞர்களுக்கு அவர் அளித்தது மாபெரும் நம்பிக்கை. ‘எதுவும் வேணாம்டா மச்சான். திறமை இருந்தா மட்டும் போதும்டா. பட்டணத்துக்கு போய் ஈஸியா ஜெயிக்கலாம்டா…’  என்று, தமிழகத்தின் கிராமத்து இளைஞர்கள் பாரதிராஜாவைப் பார்த்து பாடம் படித்தார்கள். அப்படி கிளம்பி வந்தவர்கள் தான் பாக்கியராஜூம் மணிவண்ணனும். இருவரும் அடைந்த உயரங்களை அகிலமறியும்!
 • பாரதிராஜாவுக்கு எல்லா சீடர்களுமே ஸ்பெஷல் தான். ஆனால், பாக்கியராஜ் மட்டும் கொஞ்சம் சூப்பர் ஸ்பெஷல்! ஏனென்றால், பாரதிராஜாவின் ஆளுமையை பாதி அளவுக்கேனும் நிகர்செய்யும் சீடராக பாக்கியராஜ் வளர்ந்தார்! ‘பதினாறு வயதினிலே’ படத்தில் முதன்முதலாக பாக்கியராஜை திரையில் தோன்றவைத்தது பாரதிராஜா தான். அடுத்து, புதிய வார்ப்புகள் படத்தில் பாக்கியராஜை கதாநாயகனாகவே அறிமுகம் செய்தார், பாரதிராஜா! அப்புறம், தேனுக்கு கூடென தமிழ்சினிமாவின் தவிர்க்கமுடியாத கதாநாயகனாக பாக்கியராஜ் ஜொலித்தார்! மணிவண்ணனையும் கூட பாரதிராஜாவே நடிப்புக்கு அறிமுகப்படுத்தினார். ’கொடி பறக்குது’ படத்தில் அது நடந்தது. பின்னர், 1990களில் தமிழ்சினிமாவின் அசைக்கமுடியாத கேரக்டர் ஆர்டிஸ்டாக உயர்ந்து குருவுக்கு பெருமை சேர்த்தார், மணிவண்ணன். பொன்வண்ணனும் பாரதிராஜாவின் அறிமுகம் தான். அந்தப் படம், பசும்பொன்! 
 • பாரதிராஜா அறிமுகப்படுத்திய அளவுக்கு வேறு யாரேனும் புதுப்புது கதாநாயகிகளை தமிழுக்கு அறிமுகப்படுத்தியிருப்பார்களா தெரியவில்லை. ரேவதி, ரேகா, ராதிகா, ராதா என அவர் அறிமுகப்படுத்திய அத்தனை கதாநாயகிகளுமே தமிழ் சினிமாவின் நடிப்பாற்றலை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச் சென்ற பெண் ஆளுமைகள்.
 • 1980களில், கதாநாயகிகளுக்கு ‘R’ எழுத்தில் பெயர் வைப்பதை ஒரு செண்டிமெண்ட் போல கடைபிடித்தார், பாரதிராஜா. ராதிகா, ராதா, ரேகா, ரேவதி, ரதி என எல்லோரும் பாரதிராஜாவால் பெயர் சூட்டப்பட்டவர்களே. அப்புறம், அந்த செண்டிமெண்டை ‘புது நெல்லு புது நாத்து’ படக்காலத்தில் கைவிட்டு விட்டார், பாரதிராஜா. அதற்கு அவர் சொன்ன காரணம், ‘பெற்றோர் வைத்த பெயரை மாற்றுவதற்கு நான் யார்…’ என்பது!
 • தமிழ்சினிமாவின் போக்கை மாற்றிய மூவர் (The three gems who turned the film industry) என, ‘பாரதிராஜா, இளையராஜா, வைரமுத்து’வை சொல்வார்கள். இதில், இளையராஜாவுக்கும் வைரமுத்துவுக்கும் சினிமா நுழைவாயிலாக இருந்தவர், பாரதிராஜா தான்!
 • கதாநாயகர்களில் ரஜினி – கமல் போல, இயக்கத்தில் பாரதிஜாராஜாவும் பாலச்சந்தரும். ஒருவர் இயக்குனர் இமயம் என்றால் இன்னொருவர் இயக்குனர் சிகரம்! ஆனாலும், பாலச்சந்தருக்கும் பாரதிராஜாவுக்கும் இடையே கடைசிவரை கண்ணியமான நட்பு நீடித்தது. அவ்வளவு எளிதில் எவரையும் பாராட்டி விடாத பாலச்சந்தர். ‘பதினாறு வயதினிலே’வை பார்த்துவிட்டு பாரதிராஜாவை வந்து கட்டிப்பிடித்து அழுதார். அப்போது பாலச்சந்தர் சொன்ன வார்த்தையை இப்போதும் நினைவுகூர்வார், பாரதிராஜா. ‘Its thundering in my heart’ என்பது அந்த வார்த்தை. அதைச் சொல்லும் போதெல்லாம், கண்ணீர் விட்டு கலங்குவார், கல்லுக்குள் ஈரம் தந்தவர்! பாலச்சந்திரின் இயக்கத்தில் பாரதிராஜாவுக்கு மிகப்பிடித்த படம், நீர்க்குமிழி!
 • பாரதிராஜாவின் மாஸ்டர் பீஸென எல்லோரும் பதினாறு வயதினிலே, முதல் மரியாதை மற்றும் கிழக்கு சீமையிலே படங்களை சுட்டுவார்கள். ஆனால்,  பாரதிராஜாவுக்கு பிடித்த பாரதிராஜா படம், ‘பொம்மலாட்டம்’!
 • இயக்கத்தைப் போல நடிப்பிலும் தனித்துத் தெரிபவர், பாரதிராஜா. ஆயுத எழுத்தில் ஆரம்பித்தது அவரது அதகளம். அதற்கு முன்னால், கல்லுக்குள் ஈரம் படத்தில் கதாநாயகனாகவே அவர் தோன்றியிருக்கிறார். ஆனால், ஆயுத எழுத்து அவரது நடிப்பின் முழு பரிமாணத்தையும் சரியாக படம்பிடித்து காட்டிய படம். ஒரு அனுபவ அரசியல்வாதியாக தோன்றும் காட்சிகளில் எல்லாம் தோட்டாவென வெடித்திருப்பார், பாரதிராஜா. இப்போதும், அவர் பிஸி நடிகர் தான். அன்பான தந்தை, தாத்தா கதாபாத்திரங்களுக்கு பாரதிராஜாவே முதல் சாய்ஸ்!
 • பெயரில் மட்டுமல்ல, செயலிலும் ராஜா! இதுவரை 40 திரைப்படங்களுக்கு மேல் இயக்கியிருக்கிறார். ஆனால், ஒருமுறை கூட எந்த நடிகரிடமும் கால்ஷீட் கொடுங்கள் என்று சென்று நின்றதில்லை, பாரதிராஜா!
 • தமிழ்சினிமாவில் இயக்குனர்களுக்கு என்று ஒரு சிறப்பு மரியாதையை ஶ்ரீதர் ஏற்படுத்திக் கொடுத்தார். அவரது கல்யாணப் பரிசு வந்தபோது தான், ஒரு இயக்குனரின் பெயருக்கு தியேட்டரில் ரசிகர்கள் கைதட்டினார்கள். அடுத்து வந்தார், பாலச்சந்தர். போஸ்டர்களில் இயக்குனரின் பெயரைப் பார்த்துவிட்டு படங்களுக்கு செல்லும் பழக்கம் அப்போது ஏற்பட்டது. ஆனால், ஶ்ரீதர், பாலச்சந்தர் என எல்லோரின் ரெக்கார்டுகளையும் மிஞ்சினார், பாரதிராஜா. 1980களில் பாரதிராஜாவின் பெயரில் 950 ரசிகர் மன்றங்கள் தமிழகத்தில் உருவாகின. மாஸ் நடிகர்கள் ஒரு கிளாஸ் இயக்குனரை உயர்ந்து பார்த்த காலம் அது. பின்னர், ’ரசிகனாக இருக்கலாம், ஆனால் ரசிகவெறியனாக இருக்கக்கூடாது’ என்று சொல்லி, மன்றங்களையெல்லாம் கலைத்துவிட்டார் பாரதிராஜா!
 • சினிமாவில் சமூகக்கருத்துக்களை வலுவாக பேசமுடியும் என்பதையும் பாரதிராஜா நிரூபித்துக் காட்டினார். அவரது வேதம் புதிது, கருத்தம்மா போன்ற படங்கள், மிகப்பெரிய விழிப்புணர்வை தமிழகத்தில் ஏற்படுத்தின!
 • எந்த கலைஞனும் சூனியத்தில் இருந்து உருவாவதில்லை. அவனுக்கென்று கண்டிப்பாக சில ஆதர்சங்கள் இருப்பார்கள். அப்படி, பாரதிராஜாவின் ஆதர்சங்களாக இருந்தவர்கள் ஐவர்… ஶ்ரீதர், பாலச்சந்தர், சாந்தாராம், சத்யஜித் ரே மற்றும் டேவிட் லீன்!