leader-profile-image

விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன்

  • தமிழ் நாட்டுப்புறப் பாடல்களின் தலைமகள்! விஜயலட்சுமிக்கு முன்னாலும் இங்கே நாட்டுப்புறப் பாடல்கள் இருந்தன. ஆனால், அவை திரள்மக்களை அடையாமல் திண்ணைகள், வயல்கள், மரத்தடிகளில் மட்டுமே பாடப்பட்டு காற்றில் கலந்து கொண்டிருந்தன. 1990களில் விஜயலட்சுமி உள்ளேபுகுந்து தமிழ் நாட்டுப்புறப் பாடல்களுக்கென்று மிகப்பெரிய மார்க்கெட்டை தமிழகமெங்கும் உருவாக்கினார். அவருக்குப் பிறகே நாட்டுப்புறப் பாடல்கள் ‘இசைத்தட்டு (Cassette)’ என்றொரு வடிவத்தையே பார்த்தன. கிட்டத்தட்ட 10,000 இசைத்தட்டுகளை அவரும் அவரது குழுவினரும் வெளியிட்டு சாதனை படைத்தார்கள்!
  • நாட்டுப்புறப் பாடல் என்பவை சரியாக தொகுக்கவும் வகைப்படுத்தவும் படாதவை. நம் பாட்டிகளும் தாத்தன்களும் மனம்போன போக்கில் சிந்தித்து, கைபோன போக்கில் தாளம் தட்டி, கால்போன போக்கில் ஆட்டம் ஆடி உண்டாக்கிய அற்புதங்கள் அவை. அவற்றை ஒரு வடிவ ஒருமைக்குள் கொண்டுவருவது என்பது, யானையை பானையில் அடைப்பதைப் போல பெரும் சாகசம்! ஆனால், விஜயலட்சுமி தனியொரு மனுஷியாக தமிழகத்தின் உட்பகுதி கிராமங்களுக்கும் பயணம் செய்து, தமிழ் நாட்டுப்புறப் பாடல்களை தொகுத்துக் காட்டினார். உதாரணத்துக்கு, ‘வெள்ளைப் பிள்ளையார்…’ பாட்டை எடுத்துக்கொள்வோம். தமிழகத்தின் ஏதோ ஒரு கிராமத்து கிணற்றடியில் மக்கள் சாதாரணமாக பாடிய பாடல் அது. அதைக் கண்டுபிடித்து தாளங்களுக்குள் அடக்கி தமிழகமெங்கும் கொண்டுசென்றார், விஜயலட்சுமி.
  • வெறுமனே வார்த்தைகளைக் கோர்த்து பாடலாக்கி பாடும் பாடகியல்ல, விஜயலட்சுமி. அவரது ஒவ்வொரு பாட்டுக்குப் பின்னாலும் தேர்ந்த ஆராய்ச்சியும் தகவல் திரட்டும் இருக்கும். ‘தமிழ் நாட்டுப்புறப்பாடல் பேரகராதி’ ஒன்றை உருவாக்குவது, விஜயலட்சுமியின் பெருங்கனவு!
  • விஜயலட்சுமியிடம் இருந்து நவநீதகிருஷ்ணனை பிரித்தறிய முடியாது. விஜயலட்சுமிக்கு எல்லாவிதத்திலும் உறுதுணையாக இருந்தவர், இருப்பவர் அவரது கணவர் நவநீதகிருஷ்ணன். இருவரும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஆய்வுப்படிப்பு படிக்கும்போதே, நாட்டுப்புறப் பாடல் கலைக்குள் அடியெடுத்துவைத்து விட்டார்கள. அப்போது இருந்து இப்போது வரை, கணவர் நவநீதகிருஷ்ணன் இல்லாமல், விஜயலட்சுமி மேடையேறியதில்லை.
  • விஜயலட்சுமி சில திரைப்படங்களிலும் தோன்றியிருக்கிறார். அவற்றில் அவர் பாடிய பாடல்கள் எல்லாமே, பாசப்பல்லவிகள், சந்தோச சரணங்கள்! ’ஜோதிநிலா போல அப்பம், அதலி பூ போல இட்லி, கடல்நுரை போல சோறு…’ என்று அவர் பாடும்போது, ஒருநாளுக்கு மூன்று உணவு வேளைகளை மட்டும் வைத்த முன்னோரை ’ஏன்டா இப்படி…’ என்று திட்டத் தோன்றும. அதே பாடலில், ‘காணாத சாமியெல்லாம் உன் முகத்தில் கண்டேன்…’ என்று அன்னம் உண்பவர்களின் முகத்தைப் பார்த்து விஜயலட்சுமி பாடும்போது, உள்ளமும் உப்புநீர் சுரக்கும். விஜயலட்சுமியின் பாடலில் வரிகளென வெளிப்படுவது வார்த்தையல்ல, அது வாஞ்சை! 
  • 90-களில், ’ தோட்டுக்கடை ஓரத்திலே… தோடு ஒண்ணாங்கே, தோடு இரண்டாங்கே, தோடு மூணாங்கே…’ என்ற விஜயலட்சுமியின் பாடல்களை பாடாத தமிழர்களை, விரல்விட்டு எண்ணிவிடலாம். விஜயலட்சுமி பாடியதிலேயே இதுவரை அதிகம் முறை பார்க்கப்பட்ட, கேட்கப்பட்ட பாடலும் அதுவே!
  • மாட்டுவண்டி ஓட்டுபவரை வைத்து விஜயலட்சுமி பாடிய பாடல் ஒன்று இருக்கிறது. அதில், மாட்டுவண்டிக்காரர் எப்படி மாட்டை வலதுபக்கமும் இடதுபக்கமும் திருப்புவார் என்பதை, அழகாக விளக்குவார் விஜயலட்சுமி. ‘மப்பு கொட்றது… நொச்சு கொட்றது…’ என்று அதற்கொரு வரலாற்றுச் சித்திரத்தையும் அளிப்பார்.  ‘மப்பு… நொச்சு…’ இரண்டுமே ஒலிக்குறிப்புகள். ஆகவே, அவற்றை எழுத்தில் கொண்டுவரமுடியாது. இணையத்தில் நேரடியாக பார்க்கவும். 
  • தமிழகத்தில் கும்மிப்பாட்டு என்றாலே விஜயலட்சுமி தான். அவர் பாடாத அம்மன் கோவில் திருவிழாக்களும் இல்லை, அங்கே அவர் எடுத்துவைக்காத கும்மிவகைகளும் இல்லை. ‘ஒரு தட்டு கும்மி, ரெண்டு தட்டு கும்மி, மூணு தட்டு கும்மி…’ என்று விஜயலட்சுமி பாட ஆரம்பித்தால், அம்மனே சந்நிதி விட்டெழுந்து சத்திரம் வந்து ரசிப்பாள். சில சமயங்களில், ‘அஞ்சு தட்டு கும்மி’ வரைக்கும் கூட பாடி வேப்பிலைக்காரியை வியக்கவைப்பார், விஜயலட்சுமி.
  • விஜயலட்சுமி பாடல்களில் எளிய அறிவியலும் இழையோடும். ஒரு பாடலில், ‘எட்டு அணு ஒரு இம்மி, எட்டு இம்மி ஒரு தூசி, எட்டு தூசி ஒரு எள்ளு, எட்டு எள்ளு ஒரு நெல்லு, எட்டு நெல்லு ஒரு விரலு, எட்டு விரலு ஒரு சானு, எட்டு சானு ஒரு உடம்பு’ என்று அவர் கணிதக்கணக்கை அடுக்குவது அழகோ அழகு!
  • விஜயலட்சுமிக்கு 2018ம் ஆண்டு ‘பத்மஶ்ரீ’ விருது வழங்கி கெளரவித்தது, இந்திய அரசு!