leader-profile-image

நா. முத்துசாமி

 • தமிழ் நாடகக்கலை மரபை 21ம் நூற்றாண்டு இளைஞர்களுக்கும் கொண்டுவந்து சேர்த்தவர், நா. முத்துசாமி! ஆனால், அவர் அளித்த நாடகங்கள் மரபானவை அல்ல, அத்தனையும் நவீனமானவை!
 • நா.முத்துசாமியை ‘avant – garde’ என்றழைத்தது , ‘the hindu’. அது உண்மை! ‘Avant – garde’ என்றால், மரபான கலைவடிவங்களை உடைத்து, அதில் புதிய மாற்றங்களை செய்து புரட்சிகரமாக மாற்றுவது என்று அர்த்தம். பின்நவீனத்துவத்தில் அதற்கு பெரிய மதிப்புண்டு. உலகில் பல கலைஞர்கள் (Marcel Duchamp, Wassily Kandinsky, Alexander Rodchenko) avant – gardeவாக கலக்கியிருக்கிறார்கள். தமிழகத்தில் அப்படி கலக்கியவர், நா. முத்துசாமி!
 • நா.முத்துசாமியை தேர்ந்த வாசிப்பு கொண்டவர் என்று சொல்லமுடியாது. ஆனால், தேர்ந்த ரசனை கொண்டவர். அவரது நாடகங்களில் வெளிப்படும் சின்னச் சின்ன நுணக்கங்கள் எல்லாமே, அந்த ரசனையில் இருந்து எழுந்து வந்தவையே! ‘இங்கிலாந்து, நாற்காலிக்காரன், சுவரொட்டிகள்’ போன்ற அவரது புகழ்பெற்ற நாடகங்களை காணும்போது அதை உணரமுடியும்!
 • நா.முத்துசாமியை தெருக்கூத்து பக்கம் திருப்பியது, 1975ம் ஆண்டு கலைவாணர் அரங்கில் புரிசை நடேச தம்பிரான் நடத்திய ’கர்ண மோட்சம்’ நாடகம்! சாதாரண திரைச்சீலைக்கு முன்னால் நடேச தம்பிரான் குழுவினர் அரங்கேற்றிய அசாதாரண கலைவடிவம், நா.முத்துசாமியை பெரிதும் ஈர்த்தது. அதற்குப் பிறகு, நாடகக்கலையை வளர்ப்பதற்கென்றே வாழ்நாளை அர்பணித்துவிட்டார், நா.முத்துசாமி!
 • 1978ம் ஆண்டு, கூத்துப்பட்டறையை தொடங்கினார், நா.முத்துசாமி. ஆரம்பகாலத்தில் கூத்துப்பட்டறைக்கு என்று தனி அலுவலகமெல்லாம் இல்லை. காலியாக இருந்த நண்பர்களின் கட்டிடங்களில், ஒண்டிக்குடித்தனம் போல கூத்துப்பட்டறையை நடத்தி கரைசேர்த்தார், நா.முத்துசாமி. கூத்துப்பட்டறைக்கு ‘கூத்துப்பட்டறை’ என்ற பெயரை தேர்ந்தெடுத்தவர் நா.முத்துசாமி அல்ல, அவரது நண்பர் வீராசாமி! 
 • நா.முத்துசாமி எழுதிய ‘காலம் காலமாக…’ தான் தமிழின் முதல் நவீன நாடகம். அது, சேலத்தில் இருந்து வெளிவந்த ‘நடை’ என்ற சிற்றிதழில் வெளிவந்தது. உண்மையில், தமிழின் உன்னதமான சிற்றிதழ் மரபால் உருவாக்கப்பட்ட ஆளுமையே, நா.முத்துசாமி!
 • நா.முத்துசாமி நகரத்தில் வாழ்ந்த கிராமத்துக்காரர். ஆகவே, நகரவாழ்க்கை அவருக்கு எளியோரின் வயிற்றைக் கிழித்து உண்ணும் ஒரு பெரும்பூதமாகவே தெரிந்தது. அந்தப் பெரும்பூதத்தின் கொடூரங்களை கடைசிவரை நாடகங்களில் காட்சிப்படுத்தினார், நா.முத்துசாமி!
 • நா.முத்துசாமி ஒரு குருபீடம்! அவரால் கல்லென கண்டெடுக்கப்பட்டு, சிலையாக செதுக்கப்பட்ட எண்ணற்ற கலைஞர்கள், இன்று தமிழ்க் கலை உலகில் தரமான இடத்தை வகிக்கிறார்கள். விஜய் சேதுபதி, பசுபதி, கலைராணி, விநோதினி, விமல், விதார்த் போன்றோர் அதில் முக்கியமானவர்கள்! 
 • சினிமா துறையில் ‘koothu-p-pattarai artist’ என்றாலே தனி மதிப்பும் கவுரவமும் கிடைக்கும்! அது ஒரு immortal tag! ஆனால், இது எதுவுமே நா.முத்துசாமிக்கு சாதாரணமாக நடந்துவிடவில்லை. சமரசமே இல்லாமல் உழைத்து அவர் அந்த மதிப்பை எட்டினார்!
 • விஜய்சேதுபதி நடித்து, மணிகண்டன் இயக்கிய ‘ஆண்டவன் கட்டளை’ திரைப்படம், பெரும்பாலும் கூத்துப்பட்டறை வரலாற்றைச் சார்ந்தது. அதில், நா.முத்துசாமியின் கதாபாத்திரத்தை அழகாக செய்திருப்பார், நாசர். ஒருவகையில் அது நன்றிக்கடன். ஏனென்றால், நாசரும் கூத்துப்பட்டறை வார்ப்பே!
 • ‘முத்துசாமி சார்…’ இது தான் அறிந்தோர் வட்டாரத்தில் நா.முத்துசாமியின் நிரந்தரப் பெயர்!
 • 2012-ம் ஆண்டு, நா.முத்துசாமிக்கு இந்தியாவின் நான்காவது உயரிய விருதான ‘பத்ம ஶ்ரீ’ வழங்கி கெளரவித்தது, இந்திய அரசு!