புரிசை கண்ணப்ப சம்பந்தன்
- தமிழ் தெருக்கூத்துக் கலையை அழிவில் இருந்து மீட்டெடுத்த புரிசை பரம்பரையின் வெற்றிகரமான வாரிசு, ‘புரிசை கண்ணப்ப சம்பந்தன்’. இவரது குழுவே தென்னிந்திய தெருக்கூத்துக் கலையின் தற்போதைய பேரடையாளம்!
- திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டத்தில் இருக்கும் சிறிய கிராமம் தான் ‘புரிசை’. இங்கு, கிட்டத்தட்ட 150 வருடங்களாக தெருக்கூத்து கலையை பேணி வருகிறார்கள், புரிசை சம்பந்தன் பரம்பரையினர். துரைசாமி தம்பிரான், ராகவ தம்பிரான், நடேச தம்பிரான், கண்ணப்ப தம்பிரானுக்கு அடுத்து இப்போது செங்கோல் ஏந்தி நிற்கிறார் சம்பந்தன் தம்பிரான!
- சம்பந்தன் தம்பிரானின் பரம்பரை முழுக்கவே தெருக்கூத்து கலைஞர்கள் தான். ஆனால், நடேச – கண்ணப்ப தம்பிரானின் காலத்தில் தான் தமிழ் தெருக்கூத்து தேசிய அங்கீகாரத்தைப் பெறும் அளவுக்கு வளர்ந்தது! அதை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச்செல்வதை லட்சியமாகக் கொண்டு வாழ்ந்து வருகிறார், சம்பந்தன் தம்பிரான்!
- புரிசையில் பசுமைபொங்க வீற்றிருக்கும் ‘தெருக்கூத்து பயிற்சி பள்ளி’ சம்பந்தன் தம்பிரானின் மிகமுக்கிய சாதனை. தந்தை கண்னப்ப தம்பிரான் இறந்த சில நாட்களில் (2003) அதை உருவாக்கினார், சம்பந்தன். இப்போதும் ஏதோ ஒரு இளைய கரம் ’வருகிறான் ராவணன்…’ என, வாளேந்தி அங்கே நடித்துக் கொண்டிருக்கிறது.
- தெருக்கூத்து, மனிதன் கதை சொல்ல ஆரம்பித்த காலத்திலேயே உருவாகிவிட்ட ஆதி கலை! நம் பண்பாடும், வரலாறும் அதில் தான் நரம்பொடு ரத்தமென ஊறிக் கிடக்கின்றன. அதை, மரபை மதிக்காத மில்லினியம் தலைமுறைக்கும் வெற்றிகரமாக கடத்தியது, சம்பந்தன் தம்பிரானின் மகத்தான சாதனை!
- மகாபாரதம் தான் தெருக்கூத்துக் கலையின் வற்றா அன்னப் பாத்திரம்! உலகில் எங்கெல்லாம் தெருக்கூத்து நிகழ்த்தப்படுகிறதோ, அங்கெல்லாம் ஒரே ஒருமுறையேனும் மகாபாரதக்கதை சொல்லப்பட்டு விடும். அப்படிப்பட்ட மாகாவியத்தின் மாந்தர்களை கண்முன் நிகழ்த்திக் காட்டும் வல்லமை படைத்தவர்கள், சம்பந்தன் தம்பிரானின் குழுவினர். முடிந்தால், அவர்களின் கர்ணமோட்சம், ராஜசூய யாகம், வீர அபிமன்யூ போன்ற தெருக்கூத்தை இணையத்தில் காணுங்கள். சும்மா, விழியாலேயே விளையாண்டிருப்பார்கள், அனைவரும!
- மகாபாரதம் என்றில்லை, ராமாயணத்திலும் கலக்கக்கூடியவர்கள் சம்பந்தன் தம்பிரானின் தம்பி, தங்கைகள்! புராணங்களை கடந்து, கார்சியா மார்க்கஸின் ‘A very oldman with enormous wings’ என்ற சிறுகதையையும் கூட தெருக்கூத்தாக்கி அசத்தியிருக்கிறார்கள், அவர்கள்!
- வருடத்தின் மார்ச் முதல் ஜூலை வரையிலான மாதங்கள், சம்பந்தன் தம்பிரான் குழுவினருக்கு முக்கியமான மாதங்கள். அந்த மாதங்களில் தான் அதிகமான அம்மன் திருவிழாக்கள் தமிழகத்தில் நடக்கும். அப்போதெல்லாம், உண்ணுதல் உறங்குதல் என எல்லா நேரமும் துரியோததனாகவும், துச்சாததனாகவும், ராவணனாகவும், இரணிய கசிபுவாகவும் இருப்பார்கள் சம்பந்தன் குழுவினர்!
- 2000களுக்கு முன்னால் வரை தெருக்கூத்தில் பெண்களுக்கு அதிகளவு இடமில்லை. அதையும் மாற்றிக்காட்டியிருக்கிறார், சம்பந்தன் தம்பிரான். அவரது குழு அரங்கேற்றிய ‘சிலம்புச்செல்வி’ தெருக்கூத்தில் கண்ணகியாக நடித்தது, கெளரி எனும் இளம்பெண். அவர் சம்பந்தனின் மகள். அதாவது, ‘துரைசாமி தம்பிரான் தெருக்கூத்து மன்றத்தின்’ அடுத்த வாரிசு!
- தெருக்கூத்து ஒன்றும் கோடிகள் புரளும் உயர்வர்க்கத்தின் கலையல்ல. ஆனால், உயர்வர்க்கத்தின் கலைகளுக்கெல்லாகம் அதுவே ஆணிவேர். தெருக்கூத்து கலைஞர்கள் ஆதியில் ‘அடவு’ கட்டி ஆடாமல் விட்டிருந்தால், இப்போது உயர்வர்க்கத்தினர் ‘மானச சஞ்சரரே…’ என, மார்கழி சபாவில் ஆலாபனை செய்ய முடியாது. அப்படிப்பட்ட மகத்தான ஆதி கலையை பேணும் சம்பந்தன் தம்பிரான் குழுவினர், தமிழக அரசாலும் மக்களாலும் எப்போதும் போற்றப்பட வேண்டியவர்கள்!