வேலு ஆசான்
- தமிழ் வளர்த்த மதுரையில் ‘தப்பு’ வளர்க்க பிறந்திட்ட மகத்தான கலைஞன், வேலு ஆசான்!
- பறை, தமிழர்களின் ஆதி கலைகளில் ஒன்று. பறையிசை இல்லாமல் தமிழனுக்கு கொண்டாட்டமோ, துக்கமோ எதுவுமே வரலாற்றில் இருந்ததில்லை. தமிழனின் போர் மரபு, காதல் மரபுக்கு பின்னாலும் பறை ஒரு முக்கியப்பங்கை வகித்திருக்கிறது. ‘அனிச்சப்பூ கல்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு நல்ல படாஅ பறை’ என்று சொல்கிறார், வள்ளுவர். இத்தகைய பறையிசைக் கலையை உலகெங்கும் கொண்டுசெல்ல வேண்டுமென்று வாழ்க்கையை அர்ப்பணித்தவர், வேலு ஆசான்!
- வேலு ஆசானுக்கு பறை அறிமுகமானது அவரது பதிமூன்றாவது வயதில்! அந்த ஆண்டு, 1982. அன்று முதல் இன்று வரை, வேலு ஆசானுக்கு மூன்றாம் கரமென பறையும், பதினொன்றாம் விரலென பறைத்தடியும் திகழ்கின்றன!
- வேலு ஆசானுக்கு பறையிசையை முழுவதுமாக கற்பித்தவர்கள், மலைச்சாமி வாத்தியார் மற்றும் சேகு வாத்தியார்! இருவருமே உறவுமுறையில் வேலு ஆசானுக்கு அண்ணன்கள். அதனால், கண்டிப்பும் கரிசனமும் கலந்த சூழலில் பறையிசையை கற்றார், வேலு ஆசான். கற்று முடித்ததும், மதுரை அலங்காநல்லூர் திருவிழாவில் அவருக்கு முதல் நிகழ்ச்சி தரப்பட்டது. அன்று அவர் அடித்த அடியையும் (பாட்டு), வைத்த அடியையும் (ஆட்டம்) பார்த்துவிட்டு, ‘இவனாலே இந்தக் கலை இன்னும் உசரத்துக்குப் போகும்…’ என்று ஆர்ப்பரித்தது கூட்டம்!
- ஆனால், வெளியே கிடைத்த பாராட்டு, வேலு ஆசானுக்கு வீட்டில் கிடைக்கவில்லை. வீட்டில் அவர் வெறுக்கப்பட்டார். அவரது கலைத்திறன் வீட்டாரால் தூற்றப்பட்டது. ஆகவே, கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் அவர் வனவாசம் போனார். அதாவது, பறையை தொடாமலே வாழ்ந்தார். ஆனாலும், சைக்கிள் கடை (Helper) , மீனாட்சி மிஷன் மருத்துவமனை (Ward boy) என, வேலை பார்த்த அத்தனை இடங்களிலும், பறை ஆர்வத்தை விடாமல் தொடர்ந்தார் வேலு ஆசான். காதில் எந்த பாட்டுச் சத்தம் கேட்டாலும், உடலே கையில் கிடைக்கும் கருவிகளை எடுத்து தாளம் தட்டி அதிரவிடுவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார், அவர். இப்போதும் அதை, ’எட்டு வருடங்களாக தப்பு அடிக்காமல் இருந்திருக்கிறேன். ஆனால், தாளம் அடிக்காமல் இருந்ததில்லை’ என்று நயத்தோடு சொல்வார், வேலு ஆசான்!
- இன்று கானா பாடல்களுக்கென்று ஒரு பெரிய மார்க்கெட் தமிழகத்தில் உருவாகியிருக்கிறது. ‘வாத்தி கம்மிங்’கும், ‘பேட்ட பராக்’கும் கோடிகளில் பார்க்கப்படுகின்றன. ஆனால், மார்க்கெட் இருக்கும் கானா பாடல்களுக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது மார்க்கெட் இல்லாத பறையிசை தான். இதை உரக்கச் சொல்லும் கலைஞனாக இருக்கிறார், வேலு ஆசான்! ‘ஹிப் ஹாப், கானா போல, பறையிசைக்கென்றும் தனி மார்க்கெட்டை உருவாக்குவேன்’ என்று சூளுரைத்து உழைத்துக் கொண்டிருக்கிறார்.
- தமிழகத்தின் மிகப்பெரிய தப்பிசைக் குழு, வேலு ஆசானின் அலங்காநல்லூர் தப்பிசைக் குழு தான். சாமி கும்பிடாக இருக்கட்டும், சாவு வீடாக இருக்கட்டும், அலங்காநல்லூர் குழு அடிக்கும் அடி (beat) இடி, வைக்கும் அடி (step) மின்னல்! சும்மா, ‘அலங்காநல்லூர் தப்பிசைக் குழு’ என்று யூடியூபில் தேடிப்பாருங்கள். தொல் தமிழனின் தோல் பறை, நாடியைத் தொட்டு, நரம்பைத் துளைத்து, நாளத்திற்குள் நுழைந்து உயிரைப் பிசைவதை உணர்வீர்கள்!
- தாளக்கட்டு இல்லாத எந்த இசைவடிவமும் அதன் முழுவடிவில் காலத்திற்கும் நீடிக்காது. கர்நாடக இசை இன்றும் முழுவடிவில் நீடிக்கிறது என்றால், அதற்குக் காரணம், ஆலாபனைகளை வகுத்துக் கொடுத்த தியாகராஜர். அதே போல, பறையிசைக்கு வாய்த்த தியாகராஜர், வேலு ஆசான்!மிகச்சிரமப்பட்டு, முன்பிருந்த அத்தனை வாத்தியார்களின் அடிகளையும் மனதுக்குள் ஓட்டி, பறையிசையை ஒரு தாளக்கட்டுக்குள் (Standardize) கொண்டுவந்தார், வேலு ஆசான். விருது அளித்து பாராட்டவேண்டிய பெரும்பணி, இது!
- பறை என்பது இங்கே கலை மட்டுமல்ல, அது ஓர் அரசியலும் கூட! நாம் மொத்தமாக இது ‘தமிழர்களின் இசை’என்று சொன்னாலும், இன்றும் பறை ஒரு சமூகத்தோடே அடையாளப்படுத்தப்படுகிறது. அந்தத் துயர் வேலு ஆசானுக்கும் உண்டு! ஆனால், அத்தனை இழிவுகளையும் ஓங்கியடித்த ஒற்றைப்பறை ஒலியில் கடந்தார், வேலு ஆசான்! இன்று அவருடன் நிற்கவே கூச்சப்படுபவர்களாகவே மாறியிருக்கிறார்கள், அவரை இழிவுபடுத்தியோர்!
- பறையை மொத்தமாகப் பார்க்கும்போது , அது ஒரு தனிககருவி மட்டுமே! ஆனால், அதற்குள் ‘புது அடி, பழைய அடி’ என நிறையவகை உண்டு. ஆனால், அத்தனை அடியிலும் நின்று விளையாடும் கில்லி, நம் ‘வேலு’!
- உலகத்தின் எந்த இசைக்கருவிக்கும் இல்லாத சிறப்பு, பறைக்கு உண்டு. ஏனென்றால், இறப்பின் துயரத்தை, ஓலத்தை தசைகளுக்குள் ஏற்றும் வல்லமை கொண்டது அது. அதை ‘சாவு அடி’ என வகைப்படுத்துவார், வேலு ஆசான். அந்த சாவு அடியிலும், மாவட்டத்திற்கு ஒருவகையென, ‘ஒத்தையடி, ரெட்டையடி…’ என பிரித்து மேய்வார். Simply, he is a living ‘parai maestro’!
- தமிழகத்தின் மற்ற இசைக்கலைஞர்களைப் போல, நாம் வேலு ஆசானை பார்க்கமுடியாது. ஏனென்றால், தமிழகத்தின் மற்ற கலைகளுக்கு குறைந்தது 5 அல்லது 10 ஆசான்களாவது இருக்கிறார்கள். ஆனால், பறையிசைக்கு நம்மிடம் இருக்கும் ஒரே ஆசான், வேலு ஆசான் மட்டுமே. அவரைப் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமை!
- வேலு ஆசான் அலங்காநல்லூரில் திருவிழாக்களுக்கும் வாசிக்கிறார். சென்னையில் கார்ப்பரேட் கம்பெனிகளின் ஆண்டு விழாக்களுக்கும் வாசிக்கிறார். அதனால், அவர் லட்சங்களில் புரள்கிறார் என்று எவரும் நினைக்கவேண்டாம். இன்றும் சாப்பாட்டுக்கு கஷ்டப்படும் வாழ்க்கை தான், அவருக்கு. ஆனாலும், அவருக்கு. ஆனாலும், சிரிப்போடே வாழ்கிறார். ‘இது நம்ம கலை தம்பி… நம்ம தானே காப்பாத்தணும்’ என்று வெள்ளந்தியாக சொல்கிறார்.
- பறையிசை ஆதிகாலந்தொட்டே ஆண்களோடு தான் அடையாளப்படுத்தப்பட்டு வருகிறது. அதற்குப் பெயரே போர்ப்பறை தான்! ஆனாலும், அலங்காநல்லூர் பறையிசைக் குழுவில் பெண்களுக்கு அதிக இடம் கொடுத்து பேணிக்காத்து வருகிறார், வேலு ஆசான்!
- ஒரு பேட்டியில், ‘மனிதர்கள் வருவார்கள், போவார்கள். ஆனால், கலை நிரந்தரமானது!’ என்று சொன்னார், வேலு ஆசான்! கலை மட்டுமல்ல, கலைஞனும் நிரந்தமானவன் தான்! வேலு ஆசான் நிரந்தரமானவர்!