leader-profile-image

பிரபுதேவா

 • சந்தேகமே இல்லாமல், இந்தியாவின் மைக்கேல் ஜாக்ஸன் பிரபுதேவா தான். பாதத்தில் தெறிக்கும் நடன அசைவுகளில் இருந்து, முகத்தில் வெளிப்படும் உணர்ச்சிநிலைகள் வரை, எம்ஜேவின் இந்திய வெர்ஷனை பிரபுதேவாவிடம் பார்க்கலாம்.
 • பிரபுதேவாவுக்கு முன்னாலும் நிறைய நடன இயக்குனர்கள் இங்கே இருந்திருக்கிறார்கள். ஆனால், பிரபுதேவாவே புகழ்பெற்ற நடன குடும்பத்தில் இருந்து வந்தவர் தான். ஆனால், எவரிடமும் இல்லாத ஒரு பித்துநிலை பிரபுதேவாவிடம் இருந்தது. எதுவும் வேண்டாம். மின்சாரவுக் கனவின் ‘வெண்ணிலவே… வெண்ணிலவே’ பாடலைப் பார்த்தாலே, அதை உணரலாம்.
 • உண்மையில், பிரபுதேவா பிரம்மாதமான நடிகன்! அவர் அளவுக்கு காதல் தோல்வியை நடிப்பில் வெளிப்படுத்திய நடிகர்கள், இந்திய அளவிலேயே வேறு எவரும் இல்லை. வேண்டுமானால், ஷாருக் கான் பிரபுதேவாவுக்கு அருகில் வருவார்!
 • தமிழ் சினிமாவின் நடனத்தையே பி.மு (பிரபுதேவாவுக்கு முன்), பி.பி (பிரபுதேவாவுக்கு பின்) என்று பிரிக்கலாம். அந்த அளவுக்கு தமிழ்சினிமா நடனத்தின் தரத்தையும் மதிப்பையும் உயர்த்தியவர், பிரபுதேவா. பிரபுதேவாவுக்கு முன்னால்வரை, கைகளையும் கால்களையும் ஆட்டுவது மட்டும் தான் இங்கே நடனம்.  அதையே வேகமாக ஆட்டினால், சிறப்பான நடனம்! ஆனால், பிரபுதேவா அனைத்து ‘மித்’களையும் உடைத்தார். அவரது நடனத்தில் உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை உணர்வுகள் தாண்டவமாடின. ‘பேட்டராப்’ பாட்டு ஒன்று போதும். ஒரு கானா பாட்டுக்கு அதைவிட சிறப்பான நடனத்தை, இந்தியாவின் எந்த கொம்பனும்அமைக்க முடியாது.
 • காதலன் வந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், இன்னும் மில்லியன்களை தாண்டி பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன, ஊர்வசியும் முக்காபுலாவும். கூடவே, காதலிக்கும் பெண்ணின் கைகளையும் சேர்க்கலாம். எல்லாமே, பிரபுதேவாவுக்காக, அவரது நடனத்துக்காக!
 • ஏபிசிடி பிரபுதேவாவின் வாழ்க்கையில் மிகமுக்கியமான படம். நடனத்தை ஒரு துறையாக எடுத்து, அதில் உழைப்பைப் போட்டு வாழ்க்கையில் முன்னேற முடியும் என்பதை, நம் இளைஞர்களுக்கு காட்டிய படம். அந்தப் படத்தில் பிரபுதேவாவின் நான்கு நிமிட நடனக்காட்சி ஒன்று இருக்கிறது. அவரது மாணவர்கள் தோற்றுவிலகிய பின், பிரபுதேவா களத்தில் குதிப்பார். அடுத்த நான்கு நிமிடத்தை நடனப்புயல் என்பதா, நடனச்சூறாவளி என்பதா… இல்லை அது நடனப்பிரளயம்! பிரபுதேவாவின் ஒவ்வொரு அசைவும் உள்ளத்தில் அதிர்வை கிளப்பும். Simply, its a master’s master piece! நடனக்கலையின் ஏபிசிடியை அறிய விரும்பும் இளைஞர்கள், கண்டிப்பாக ஏபிசிடியை பார்க்கலாம்!
 • பிரபுதேவா சிறந்த கமர்சியல் இயக்குனரும் கூட. தெலுங்கில் அவர் எடுத்த  ’Nuvvostanante nenoddantana‘ படம் ஒரு ட்ரெண்ட் செட்டர். ஹிந்தியில் அவர் இயக்கிய ’Wanted’ படமும் மிகமுக்கியமானது. வீழ்ந்து கிடந்த சல்மான் கானின் மார்க்கெட்டை, ‘Wanted’ படம் தான் தூக்கி நிறுத்தியது. இப்போது, இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக வலம் வருகிறார், சல்மான் கான்! அக்‌ஷய் குமாரை வைத்து உருவாக்கிய, ரவுடி ராத்தோர் படமும் மெஹா ஹிட்டே!
 • இந்தியாவில் டிவி ரியாலிட்டி ஷோக்களுக்கென பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அதில் மிகமுக்கியமானவையாக, டான்ஸ் ரியாலிட்டி ஷோக்கள் இருக்கின்றன. தெற்கே ஜோடி நெம்பர் 1 என்றால், வடக்கே டேன்ஸ் இந்தியா டேன்ஸ்! இந்த எல்லா ஷோக்களுக்குமே பிரபுதேவாவின் நடனம் தான் மாடல். இந்தியாவிலேயே ஒரு நடனக்கலைஞனின் பெயரை டைட்டிலாக வைத்து ஒரு ரியாலிட்டி ஷோ வந்ததென்றால், அது பிரபுதேவாவுடையது தான். ஷோவின் பெயர்… ‘உங்களில் யார் அடுத்த பிரபுதேவா?’.
 • பரதத்துக்கும் குச்சிப்புடிக்கும் இங்கே முன்மாதிரி நடன அசைவுகள் இருக்கின்றன. ஆனால், கானாப்பாட்டுக்கு இல்லை. அது எந்த இலக்கணத்திலும் அடங்காத நடனவகை. மானுடத்தின் விடுதலை உணர்வைப் பேசுவது. அதற்கு, அட்டகாசமான ஒரு நடன முன்மாதிரியை உருவாக்கினார் பிரபுதேவா. ‘லாலாக்கு டோல்டப்பிமா… என்று பிரபுதேவா போட்ட நடனம் தான், இன்றும் கானா நடனகர்த்தர்களுக்கு ரெஃபரன்ஸ் பீஸ்!
 • பிரபுதேவா – வடிவேலு காம்பினேஷனைப் பற்றி இங்கே அதிகம் பேர் பேசியதில்லை. ஆனால், இருவரின் காம்பினேஷனில் வந்த படங்கள் எல்லாமே காமெடி தமாக்காக்கள். காதலனும் மனதைத் திருடிவிட்டாயும், ஹீரோ – காமெடியன் காம்போ ஒரு படத்தில் இருக்கவேண்டும் என்பதற்கான பாடங்கள். இதைப் பின்பற்றி தான்,  பின்னாளில் பாஸ் என்கிற பாஸ்கரனும் ஒரு கல் ஒரு கண்ணாடியும் வெளிவந்தன. 
 • பிரபுதேவாவின் வாழ்க்கையில் இன்னொரு முக்கியமான படம், தேவி. கிட்டத்தட்ட 15 வருடங்களுக்குப் பிறகு அவர் கதாநாயகனாக நடித்த படமது. எந்த கதாநாயகனாக இருந்தாலும் 15 வருட இடைவெளி கொஞ்சம் பிசிறு தட்ட வைக்கும். ஆனாலும், பிரபுதேவாவுக்கு எதுவுமே தட்டவில்லை. காஃபி ஷாப்பில் அமர்ந்து காஃபி சாப்பிடுவதைப் போல, வெகு அசால்டாக தேவியை செய்து முடித்தார், பிரபுதேவா. ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ காலத்து பிரபுதேவா அப்படியே கண்முன் தெரிவதாக சிலாகித்தார்கள், ரசிகர்களும் விமர்சகர்களும்!
 • தமிழின் கலைமாமணி, தெலுங்கின் நந்தி, ஹிந்தியின் பிலிம்பேர் என எல்லா விருதுகளையும் ரவுண்டி கட்டி வாங்கியிருக்கிறார், இந்த ‘ரவுடி பேபி’! மின்சாரக் கனவு , லக்‌ஷ்யா படத்துக்காக தேசிய விருதையும் வென்று அசத்தியிருக்கிறார், நம் நடனப்பிரளயன்!
 • தமிழ்நாட்டில் நடன ஆசைகொண்டு கை, கால்களை அசைக்கும் குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள் என எல்லோரின் மனதிலும் நீக்கமற நிறைந்திருக்கும் பெயர், ‘பிரபுதேவா’!