leader-profile-image

ஐஸ்வர்யா மணிவண்ணன்

  • தமிழகத்தின் ‘சிலம்பச் செல்வி’! ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் சிலம்பக்கலையில் புயலென முளைத்த பூ!
  • ஐஸ்வர்யா அடிப்படையில் பரதநாட்டியக் கலைஞர். கவிதா ராமு IAS தான் அவரது ஆசிரியை. ஒருநாள் விளையாட்டாக, ‘உன்னுடைய நகர்வுகள் நன்றாக இருக்கின்றன. நீ ஏன் சிலம்பம் கற்கக்கூடாது…’ என்று ஆசிரியை கேட்க, மாணவியும் ’சிலம்பம் தானே… கற்றால் போச்சு…’என்று தலையாட்டியிருக்கிறார். அடுத்த ஐந்தாண்டில், சிலம்பத்தில் உலக சாம்பியன் அளவுக்கு உயர்ந்துவிட்டார், ஐஸ்வர்யா!
  • அடுத்து அவர் சென்று நின்றது, பவர் பாண்டியன் மாஸ்டரிடம்! ஏனென்றால், தமிழகத்தில் சிலம்பத்தை ஒரு தவமென கருதி கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்கள் மிகக்குறைவே. அதில் முக்கியமானவர், பவர் பாண்டியன் மாஸ்டர்! சென்னையில் இருக்கும் பவர் பாண்டியன் ஆசான் அகாடமியில், அவரது மூன்று பெண்களுடன் நான்காவது பெண்ணாக இணைந்து சிலம்பத்தில் தேர்ந்தார், ஐஸ்வர்யா!
  • சிலம்பத்தை சிலர் ‘தற்காப்பு’ என்பார்கள், சிலர் ‘கலை’ என்பார்கள். ஆனால், ஐஸ்வர்யா தற்காப்பு, கலை இரண்டையும் கடந்து, அதை ‘ஆன்மீகம்’என்பார்.
  • தமிழகத்தில் உண்டான சிலம்பக் கலையின் தொல்சிறப்பை உலக மேடைகளில் ஒலிக்க எப்போதுமே ஐஸ்வர்யா தவறியதில்லை. அவரது எல்லா உரையும், ‘மூன்றாயிரம் வருடங்கள் பழமையான எங்களின் சிலம்பக்கலை…’ என்றே தொடங்கும்!
  • ‘சிலம்பம் ஒரு போர்க்கலை. ஆகவே, உடல்வலிமை உள்ளவர்க்கே அது சாத்தியப்படும்’ என்று சொல்லிவந்தார்கள், ஐஸ்வர்யாவுக்கு முன்புவரை. ஆனால், ‘சிலம்பம் முதலில் ஒரு கலை. எந்தக் கலையும் மனதால் ஆளப்படுவதே…’ என்று நிரூபித்தார், ஐஸ்வர்யா. தமிழகத்தில் சிலம்பத்தை ஒரு தியானமாகவும் கருதவைத்ததில், அவருக்கு முக்கியப் பங்குண்டு.
  • 2016ம் ஆண்டு தேசிய கைத்தறி தினத்தின் போது, ஐஸ்வர்யா வெளியிட்ட ஒரு ‘சிலம்ப’ வீடியோ மிகப்பெரிய வைரல். அதில், எளிய கைத்தறி நெசவு சேலையைக் கட்டிக்கொண்டு அவர் சிலம்பம் சுற்றிக்காட்டியது பலரையும் வியக்கவைத்தது. ‘What an eye opener…’ என்று, ஒரு பெரிய பெண்கள் குழுவே அப்புறம் சிலம்பத்தின் பக்கம் திரும்பியது.
  • சிலம்பம் இன்றுமே கிராமங்கள் சார்ந்த ஒரு கலை தான். அதை நகர்ப்புற மக்களுக்கும் கொண்டுவந்து சேர்க்கவேண்டும் என்பது ஐஸ்வர்யாவின் ஆசை!
  • ஐஸ்வர்யா, சென்னைப் பெண். கல்லூரிப் படிப்பெல்லாம் லயோலாவில் தான். இப்போது இளம் தொழில்முனைவராக கலக்கிக் கொண்டிருக்கிறார். சென்னையில் அவர் நடத்தி வரும் ‘MAISHA’ நல்ல தரமான டிஸைனிங் கம்பெனியாக உருவெடுத்திருக்கிறது. 
  • எந்தவொரு பாரம்பரியக் கலையும் நவீன கலைகளை எதிர்த்துநிற்க கடமைப்பட்டதே. அப்படி எதிர்த்து நிற்க வேண்டுமானால், அந்தக் கலையின் பொருளாதார அடித்தளத்தை வலுப்படுத்த வேண்டும். அந்த வகையில், சிலம்பக்கலையின் பொருளாதார அடித்தளத்தை மாற்ற மிகவும் உழைத்துக் கொண்டிருக்கிறார், ஐஸ்வர்யா. தமிழகம் முழுவதும் அவர் நடத்திய புதுமையான சிலம்பம் workshopகள், இளைய தலைமுறைக்கு மிகவும் பயனுள்ளவை!