கலாநிதி மாறன் (சன் குழுமம்)
- உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் இல்லத்திரையில் நுழைந்திருக்கும் சன் தொலைக்காட்சியை உருவாக்கிய `கனவு நாயகன்’ கலாநிதி மாறன்.
- அரசியல் அதிகாரம் மிக்க குடும்பப் பின்னணியில் பிறந்தவர் கலாநிதி மாறன். தந்தை முரசொலி மாறன். தமிழக அரசியலில் பிரிக்க முடியாத மாபெரும் தலைவர்களில் ஒருவர். அதிகாரத்துக்கு பஞ்சமில்லை என்றாலும், கலாநிதி தன் உழைப்பாலும் மாறுபட்ட சிந்தனையாலும் இன்னும் பல சோதனைகளைக் கடந்தே சிகரத்தை தொட்ட மாமனிதரானார்.
- சென்னை `டான் பாஸ்கோ’வில் பள்ளிப் படிப்பு, `லயாலோ’வில் கல்லூரி படிப்பு பின்னர் அமெரிக்கா சென்று பல்கலைக்கழகப் பட்ட மேற்படிப்பையும் பயின்றவர். அமெரிக்காவில் படிக்கும்போது கிடைத்த அனுபவங்களில்தான் பின்னாளில் அவர் தொடங்கிய `சன் தொலைக்காட்சி’. ஆனால், அதற்கு முன்னால் அவர் நிறைய கற்கவும் கடக்கவும் வேண்டியிருந்தது.
- கலாநிதியின் முதல் பணி `சுமங்கலி’ பப்ளிகேஷனில் சர்குலேஷன் கிளார்க். பின்னர் `குங்குமம்’ இதழில் பணியாற்றினார். ஆனாலும் அவர் மனதில் தொலைக்காட்சி சேனல் தொடங்குவது குறித்த எண்ணமே ஓடிக்கொண்டிருந்தது.
- 1990-களில் அந்த எண்ணத்திற்கு முதல் வடிவம் கொடுத்து `பூமாலை’ எனும் வீடியோ செய்தி மாத இதழை தொடங்கினார். அப்போது அது தமிழ் உலகுக்கு முற்றிலும் புதியது.
- `பொதிகை’ தொலைக்காட்சியே அதுவரை பெரும்பாலான மக்கள் அறிந்திருந்த முதல் டெலிவிஷன். அதுவும் குறிப்பிட்ட நேரங்களுக்கு மட்டுமே தமிழ் நிகழ்ச்சிகள் காணக் கிடைக்கும். மேலும், தொலைக்காட்சி பெட்டிகள் எல்லோரது வீடுகளையும் அலங்கரித்திருக்கவில்லை. ஒவ்வொரு கிராமத்திலும் பஞ்சாயத்துக்கு என்று ஒரு பெட்டி இருக்கும். அதுவும் இரவில் மட்டுமே பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும். இந்தச் சூழலில் பூமாலை அவருக்கு பல சோதனைகளைத் தந்தது.
- கலாநிதி சோர்ந்துவிடவில்லை.
- கையில் பணமில்லை. ஆனால் பெரும் கனவு இருந்தது. தன் சேமிப்பை முழுவதையும் வங்கிக் கடனும் கொண்டு `சன் தொலைக்காட்சி’யைத் 1993 ஆம் ஆண்டில் தொடங்கினார். தன் கல்லூரி நண்பர்களையே தன் குழுவாக இணைத்துக்கொண்டார். முதலில் 3 மணி நேரம் மட்டுமே ஒளிபரப்பில் கவனம் செலுத்தினார். பின்னர் படிப்படியாக நிகழ்ச்சிகளை அதிகரித்தார்.
- 1998 ஆம் ஆண்டு சேட்டிலைட் ஒளிபரப்பில் இந்திய அரசு தராளமயமாக்கலை அனுமதித்தது. கேபிள் என்ற வார்த்தையையே அறியாத கிராமங்கள் பின்னர் அந்த பெயரை உச்சரிக்க ஆரம்பித்தன. பின்னர் வேகமாகவே எல்லோரது வீடுகளுக்குள் தொலைக்காட்சிப் பெட்டிகள் வரத் தொடங்கின.
- கலாநிதி அன்ட் டீமின் அயராத உழைப்பும் மாறுபட்ட நிகழ்ச்சிகளும் சன் தொலைக்காட்சியில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியது. 24×7 தொடர் நிகழ்ச்சிகளால் திக்குமுக்காடியது தமிழகம். தொலைக்காட்சி முன்னால் பெப்சி உமாவின் வசீகரப் பேச்சும், தொலைக்காட்சிக்குப் பின்னால் தூரன் கந்தசாமியின் கம்பீரக் குரலும் (இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக..) சன் தொலைக்காட்சியின் பிராண்ட்டாகவே மாறியது. அதன்பின்னர் சன் தொலைக்காட்சி விஸ்வரூபம் எடுத்து, சன் குழுமமாக மாறி, வீறுநடை போடுவதை ஊரறியும்.
- கலாநிதியின் பெரும் வெற்றிக்கு மிக முக்கிய காரணங்கள் என்று சில உண்டு. மிகப் பெரிய மீடியா தன் வசம் வைத்திருந்தபோதும் அவர் தன்னை முன்னிறுத்திக்கொண்டதில்லை. தன் நிறுவனத்தை முன்னணியில் நிறுத்துவதையே கவனம் செலுத்தியவர். அரசியல் அதிகாரம் அவரைத் தேடிவந்த போதும், அதை மறுத்து, தன் கனவின் பாதையிலேயே தொடர்ந்து பயணித்துக்கொண்டிருப்பவர்.
- சன் இன்று ஆசியாவிலேயே மிகப் பெரிய நெட்வொர்க். தமிழ் மட்டுமின்றி பல்வேறு மொழிகளில் அதன் ஆதிக்கம் தொடர்ந்துகொண்டிருக்கிறது. அதன் ரிமோட்டை தன் கையில் வைத்திருக்கும் `டெலிவிஷன் கிங்’ கலாநிதி என்பதில் சந்தேகமே இல்லை.