leader-profile-image

பத்மசிங் ஐசக் (ஆச்சி மசாலா)

  • “ஒரு நாள் முழுவதும் நீங்கள் உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்க வேண்டுமெனில், உங்கள் காலை உணவு ரொம்ப முக்கியம் . அந்த உணவு ஆரோக்கியமானதாகவும் சுவை மிகுந்ததாகவும் அமைந்துவிட்டால் உடலும் மனமும் நீங்கள் நினைத்ததை முடிக்க உதவும்” என்கிறது மருத்துவம். அத்தகைய சுவை மிகுந்த உணவுகளுக்கான மசாலாக்களை தயாரிப்பதில் புகழ்பெற்றுள்ளது ஆச்சி மசாலா நிறுவனம். அதை நிறுவியவர் பத்மசிங் ஜசக். 
  • ஒவ்வொரு இல்லத்திலும் சமையல் என்பது பெண்களுக்கு பெரிய வேலை. குறிப்பாக சமையலுக்கான மசாலாக்களை தயாரிப்பதிலேயே பெரும் பங்கு நேரம் விரயமாகிவிடும். அந்த கால விரயத்தை மிச்சப்படுத்தியதில் ஆச்சி மசாலாவுக்கு இன்று முக்கிய இடமுண்டு. 
  • ஒவ்வொரு இல்லத்திலும் உள்ள அஞ்சறைப் பெட்டியில் இன்று ஆச்சி மசாலாவின் தயாரிப்பு ஒன்று நிச்சயமாக இடம்பெற்றிருக்கிறது. அதுதான் ஐசக்கின் வெற்றி. அவரின் பயணம் சுவாரஸ்யமானது. வெற்றிக்கனியை பறிக்க நினைக்கிற ஒவ்வொருவரும் அறிந்துகொள்ள வேண்டியதும் கூட. 
  • ஜசக்கினுடையது எளிய குடும்பம். கல்லூரியில் பி.பி.ஏ பட்டப்படிப்பை முடித்துவிட்டு, விற்பனை அதிகாரியாய் பயணத்தை தொடங்கியவர். தன்னுடைய தொழிலில் ஒவ்வொரு வாடிக்கையாளரும் முக்கியம் என்பதை உணர்ந்தார். அவர்களை தன் வசப்படுத்த தேவை `பொறுமை’ என்பதை மிகக் குறுகிய காலத்திலேயே கற்றுணர்ந்தார். தன் வெற்றி குறித்து பிறருக்கு அவர் தரும் ஆலோசனையும் அதுவே!
  • 1990 ஆண்டு துவக்கத்தில் தமிழகத்தில் ஒரு பெரிய மாறுதல் நடந்துகொண்டிருந்தது. பல்வேறு பணிகளுக்காக துபாய், சிங்கப்பூர், அமெரிக்கா என வெளிநாடுகளுக்கு பலர் பறந்துகொண்டிருந்தனர். அப்படி செல்லும்போது ஒவ்வொருவரின் பயணப் பையிலும் குழம்பு மசாலாப் பொருட்களும் நிரம்பியிருக்கும். அந்தப் பொருட்களை தயாரிப்பதற்காக பலர் சிரமப்படுவதைக் கண்டார் ஜசக். குறிப்பாக குழம்பு மிளகாய் தூள்.
  • `எங்கே பிரச்னையிருக்கிறதோ அங்கே ஒரு தொழில்முனைவு காத்திருக்கிறது’. இதை உணர்ந்தவர் ஜசக். 1995 ஆம் ஆண்டு பிறந்தது ஆச்சி மசாலா. அதன் முதல் தயாரிப்பு ஆச்சி குழம்பு மிளகாய் தூள். 
  • தமிழர்கள் எளிதில் ஒரு பொருளை தன் இல்லத்தில் இடம்பிடிக்க அனுமதிக்க மாட்டார்கள். அப்படி அவர்கள் அனுமதித்துவிட்டால் அந்தப் பொருள் சர்வதேச சந்தையில் மிகப் பெரும் செல்வாக்கு செலுத்திவிடும். இது பெரும் நிறுவனங்கள் பல அறிந்த உண்மை. இதை உணர ஜசக்குக்கு ஒரு வருடம் பிடித்தது. பிறகு, ஆச்சி மசாலா குழம்பு மிளகாய் தூள் விற்பனையில் பின்னியெடுத்தது. 
  • குழம்பு மிளகாய் தூளைத் தொடர்ந்து பல்வேறு மசாலாக்களை அறிமுகப்படுத்தினார் ஜசக். செயற்கை நிறங்களைத் தவிர்த்து, இயற்கை நிறங்களை பயன்படுத்துவது, வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் கருத்துக்களைப் பின்பற்றி, பாரம்பர்ய முறைப்படி விளைவிக்கப்படும் உணவு பொருட்களிலிருந்தே தன்னுடைய தயாரிப்புகளை உருவாக்குவது என ஜசக்கின் கொள்கை தமிழர் ஒவ்வொருவரும் அறிய வேண்டியது. 
  • “உணவின் மூலமான சேவையே உண்மையான மக்கள் சேவை”. இதுதான் ஆச்சி மசாலா நிறுவனத்தின் கொள்கை, உணவே மருந்து. அதைத் தரமாக அளிப்பது அதுவே ஆச்சியின் லட்சியம். இன்று நம்பர் ஒன் இடத்தில் ஆச்சி மசாலா இருப்பதற்கு பின்னாலுள்ள சீக்ரெட் இதுவே
  • தற்போது பாரம்பர்ய விவசாயத்தை ஊக்குவித்து, அதன்வழியாக ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் ஜசக். வெல்லட்டும் அவரது கனவு!