leader-profile-image

கே.பி.நடராஜன் (கேபிஎன் டிராவல்ஸ்)

  • நெடுந்தூரங்களின் சுமையை குறைத்து, பயணத்தை குதூகலமாக்கிய சாலைகளின் அரசன் கே.பி.நடராஜன். நவீன பேருந்துகளை தமிழகத்திற்குள் இறக்கி, நகரங்களுக்கு இடையே வர்த்தகப் பாலம் அமைத்த  கேபிஎன் டிராவல்ஸ்ஸை நிறுவியவர். 
  • கே.பி. நடராஜனின் சொந்த ஊர் சேலம் அருகே பெரியப்புதூர். விவசாயக் குடும்பம். விவசாயத்தில் நாட்டமில்லாததால், டூர் ஆபரேட்டராக வாழ்க்கையை தொடங்கினார். சில மாதங்களிலேயே அந்த வாழ்க்கை ரொம்பவே பிடித்துப்போனது. 
  • பயணங்களின்போது நடராஜனுக்கு உதித்த ஓர் ஐடியாதான் தனியார் பேருந்து சேவை. ஐடியாவை செயல்படுத்த துணியும்போதுதான் பல பிரச்னைகள் முன்னால் வந்து நின்றன. பல கட்டப் போராட்டங்களுக்குப் பிறகே தனியார் பேருந்து சேவைக்கான அனுமதி கிடைத்தது. 
  • கேபிஎன் நிறுவனத்தை தொடங்கும்போது நடராஜனுக்கு வயது 23 தான். கேபிஎன் பேருந்தை நவீன வசதிகள் நிறைந்த தரமான, பாதுகாப்பான பயணமாக திட்டமிட்டார். சாலை விபத்துக்கு மிக முக்கிய காரணங்களுள் ஒன்று ஓட்டுநர் கண்ணயர்வது. நீண்ட பயணங்களின்போது உறக்கம் ஓர் தவிர்க்கவியலாதது. 
  • இதையறிந்த நடராஜன், ஒரு பேருந்துக்கு இரு ஓட்டுநர்களை பணியமர்த்தினார். பயணிகள் வாழ்க்கை மட்டுமில்லை ஓட்டுநர்களின் வாழ்க்கையையும் நவீனமாக்கினார். ஒருவர் பணியில் இருக்கும் மற்றொருவர் ஓய்வில். விபத்தில்லா பயணம் எளிதில் வசமானது. 
  • நவீன சொகுசுப் பேருந்து. கட்டணம் அதிகமாக இருக்கும் என்று ஆரம்பத்தில் பயணிகள் அதிகம் ஆர்வம் காட்டவில்லை. ஆனால், நாளடைவில் அரசுப் பேருந்து கட்டணங்களுக்கு மிக அருகிலேயே அதன் கட்டணம் வரவே பயணிகள் வரவேற்றனர். வெற்றி காற்று அவர் பக்கம் திரும்பி நின்று வீசியது. 
  • ஓர் பேருந்தில் தொடங்கி, தற்போது 600க்கும் மேற்பட்ட நவீன, சொகுசு பேருந்துகளை தன்னகத்தே கொண்டுள்ளது கேபிஎன். பேருந்து சேவை மட்டுமல்ல, கேபிஎன் பார்சல் சர்வீஸ் நிறுவனமும் மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றுள்ளது. 
  • 1972 ஆம் ஆண்டு தொடங்கிய கேபிஎன் பயணம், 2020 ஆம் ஆண்டை தாண்டி பொன்விழாவை நோக்கி வெற்றிகரமாக பயணித்துக்கொண்டிருக்கிறது. 
  • கே.பி. நடராஜனின் தற்போதைய ஆசை என்ன தெரியுமா. கிராமங்களுக்கு இடையே ஹெலிகாப்டர் சேவை. ஆம். மகத்தானவர்கள் எப்போதும் மகத்தான கனவுகளையே காண்கிறார்கள்.