leader-profile-image

ஷிவ் நாடார் (ஹெச்.சி.எல்)

  • இந்திய கணினித்துறையின் வரலாற்றை மாற்றிய கறுப்புத் தமிழன், ஷிவ் நாடார்! அவர் உருவாக்கிய ஹெச்.சி.எல் நிறுவனம் 12 பில்லியன் டாலர் மதிப்புடன் மிகப் பிரம்மாண்டமாக இன்று நின்று கொண்டிருக்கிறது!
  • தூத்துக்குடி மாவட்டத்தில் மூலைப்பொழி எனும் சிறுகிராமத்தில் பிறந்தவர், ஷிவ் நாடார். பள்ளிப்படிப்பை கும்பகோணம் , மதுரை மற்றும் திருச்சியில் முடித்தார். பின்னர், புகழ்பெற்ற கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி கல்லூரியில் சேர்ந்து பொறியியல் ( Electical & Electronics) படிப்பில் பட்டம் பெற்றார்.
  • ஷிவ் நாடார் ஹெச்.சி.எல்லை தொடங்கிய கதை சுவாரசியமானது. 1976ம் ஆண்டு டெல்லி க்ளோத் மில்ஸ் (DCM) கம்பெனியின் கேண்டினில் ஆறு பேர் அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள் கடும் உழைப்பாளிகள். டெல்லி கிளோத் மில்ஸின் கால்குலேட்டர் தயாரிப்பு பிரிவில் பணிபுரிபவர்கள். நல்ல வேலை தான் அது. சம்பளமும் கைநிறைய கொடுப்பது. ஆனால், எவரோ ஒரு முதலாளியின் கீழ் ஒரு அடிமையப்போல பணிசெய்வது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. ஆகவே, சொந்தமாகவே ஒரு கம்ப்யூட்டர் கம்பெனி ஆரம்பித்தால் என்ன என்று ஆலோசிக்கிறார்கள். அதில் முக்கியமானவர் தமிழ்நாட்டில் இருந்து சென்ற 30 வயது இளைஞர் ஷிவ் நாடார்! அவர் தான் மற்ற எல்லோரையும் ‘லீட்ட்’ செய்கிறார். அன்று அந்த கேண்டினின் புகைமண்டிய வெளிச்சத்தில் தான், ஹெச்.சி.எல் என்ற பில்லியன் டாலர் கம்பெனி உருவாக்கம் பெற்றது. ஆரம்பத்தில் அதன் பெயர் Microcomp Limited!
  • 1976ம் ஆண்டின் கோடைகாலத்தில் பணியை தொடங்கியது. Microcomp Limited. அதன் முதற்கட்ட தயாரிப்புகள் எல்லாமே கால்குலேட்டர்கள் மட்டுமே. ஏனென்றால், கம்யூட்டரை தயாரிக்க அதிகப் பணம் தேவைப்பட்டது. அதை ஷிவ் நாடார் குழுவுக்கு அளிக்க அப்போது யாருமே தயாராக இல்லை. எனவே, முதலில் கால்குலேட்டரை தயாரித்து விற்பனை செய்து நிதிதிரட்ட தீர்மானித்தார்கள். அது நன்றாகவே வேலை செய்தது. 20 லட்சம் ரூபாய் வரை நிதி திரண்டது. அடுத்தது என்ன?! ஆகஸ்ட் 11, 1976 அன்று அதிகாரப்பூர்வமாக உதயமானது ஹிந்துஸ்தான் கம்யூட்டர்ஸ் லிமிட்டெட். அதாவது, ஹெச்.சி.எல்!
  • ஹெச்.சி.எல்லை தொடங்க ஷிவ்நாடாருக்கு பெருமளவு துணை நின்றவர், அர்ஜூன் மல்ஹோத்ரா. தனி கம்பெனி கனவை ஷிவ் நாடார் முதன்முதலில் சொன்னதும் கூட அர்ஜூனிடமே. டிஎம்சி கம்பெனியில் ஷிவ் நாடாருக்கு ஜூனியர், அர்ஜூன். ஆனாலும், ஷிவ் நாடாரின் கனவை அவரால் கடலை கரையென புரிந்துகொள்ள முடிகிறது. ‘நான் உடனிருக்கிறேன். நம்பி களமிறங்குங்கள்’ என்று ஷிவ்நாடாருக்கு நம்பிக்கை அளிக்கிறார், அர்ஜூன். அப்புறம், ஷிவ் நாடார் யோசிக்கவே இல்லை! 1998ல் பிரிந்த பிறகும், ஷிவ்நாடாரும் அர்ஜூன் மல்ஹோத்ராவும் இன்றுவரை நல்ல நண்பர்களாகவே நீடிக்கிறார்கள்.
  • ஷிவ் நாடாருக்கு 1970களின் இந்திய அரசியல் சூழ்நிலையும் கைகொடுத்தது என்று சொல்லவேண்டும். 1977ம் ஆண்டு இந்திரா காந்தியின் அரசு வீழ்த்தப்பட்டு, ஜனதா கட்சியின் ஆட்சி அமைந்தது. மிகச்சிறந்த தொழிற்சங்கவாதியான ஜார்ஜ் ஃபெர்னான்டஸ் தொழில்துறை மந்திரியானார். கொஞ்ச காலம் இந்தியாவின் மொத்த தொழிற்துறையும் சோசியலிசத்தின் வசமிருந்தது. வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஏகப்பட்ட கெடுபிடிகள். சில நிறுவனங்களே தாக்குப்பிடித்து நின்றன. பல நிறுவனங்கள் இந்தியாவை விட்டு வெளியேறும் முடிவை எடுத்தன. அதில், ஐபிஎம்மும் ஒன்று. இதை ஷிவ் நாடார் அட்டகாசமாக பயன்படுத்திக் கொண்டார். அவரது ஹெச்.சி.எல் நிறுவனம் அதிகளவில் மைக்ரோ கம்ப்யூட்டர்களை உருவாக்கி இந்தியாவெங்கும் வெற்றிகரமாக சந்தைப்படுத்தியது.
  • 1984ம் ஆண்டு ராஜீவ்காந்தி வந்தார். அவரது அரசு அமல்படுத்திய கணினிக்கொள்கைகள் இந்தியாவின் ஐடி வளர்ச்சியை அடுத்தக்கட்டதுக்கு எடுத்துச் செல்ல ஆரம்பித்தன. இதையும் சாதகமாக்கிக் கொண்டார் ஷிவ் நாடார். அந்தக் காலகட்டத்தில், நிறைய UNIX வகை கம்ப்யூட்டர்களை உருவாக்கி இந்திய வங்கிகளுக்கு விற்க ஆரம்பித்தது லாபம் பார்த்தது ஹெச்.சி.எல். 
  • ஷிவ் நாடார் எப்போதுமே தவறுகளிடம் இருந்து பாடம் கற்பவர். 1989ம் ஆண்டு அமெரிக்காவில் கால் பதிக்க முயன்று, ஹெச்.சி.எல் தோற்றது. அதாவது, அமெரிக்க சட்டதிட்டங்களில் சரியான தெளிவு ஷிவ் நாடாருக்கு அப்போது இருக்கவில்லை. அதுவும் இல்லாமல், அமெரிக்காவின் Hardware Market அதிகம் அமெரிக்க நிறுவனங்களையே சார்ந்திருந்தது. இது எதையும் அறியாமல் அமெரிக்கக் கனவு கண்டு தோற்றார், ஷிவ் நாடார். ஆனாலும், ஹெச்பி கம்பெனியுடன் கூட்டு அமைத்து அமெரிக்காவின் ஹார்ட்வேர் மார்க்கெட்டில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தினார், ஷிவ் நாடார்.
  • அடுத்து, ஷிவ் நாடாரின் மனதில் உதயமான யோசனை தான் அவரை உலகின் அசைக்கமுடியாத தொழிலதிபராக மாற்றியது. அதாவது, கணினி உலகை ஆளவேண்டுமானால் hardware, software என எல்லாவற்றிலும் கொடிகட்டிப் பறக்கவேண்டும் எனத் தீர்மானித்தார், அவர். ஏற்கனவே, Infosys, Wipro போன்ற இந்திய கம்பெனிகள் software marketல் கலக்கிக் கொண்டிருந்தன. அதன் வரிசையில், ஹெச்.சி.எல்லையும் கொண்டுவந்து நிறுத்த முடிவு செய்தார், நாடார். HCL technologies பிறந்தது! இன்று உலகின் சரிபாதி நாடுகளில் அதற்கு வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள்.
  • ‘அரசு மட்டுமே மக்களுக்கான எல்லாவற்றையும் செய்துவிடமுடியாது’ என்பதில் நம்பிக்கை கொண்டவர், ஷிவ் நாடார். ‘சமூகத்தின் மீது அக்கறை கொண்ட பெரிய மனிதர்கள் களத்தில் இறங்கி மக்களுக்காக உழைக்கவேண்டும். அதன் வழியாகவே தேசம் வளரமுடியும்’ என்று பேசக்கூடியவர், அவர். 2011ம் ஆண்டு ‘ஷிவ் நாடார் அறக்கட்டளை’யை தொடங்கினார், ஷிவ் நாடார். இந்தியாவில் கல்விக்காக அதிகப் பங்களிப்பை அளிக்கும் முக்கிய தன்னார்வ அமைப்பாக அது இன்று திகழ்ந்து கொண்டிருக்கிறது.
  • ஒட்டுமொத்தமாக பார்த்தால், அதிகாரத்தை ஒரே இடத்தில் குவிக்காமல் கம்பெனியின் எல்லா மட்டங்களுக்கும் கொண்டு சென்றது தான் ஹெச் சி எல்லின் வெற்றிச் சூத்திரமாக தெரிகிறது. ஷிவ் நாடார் இதை அறிந்தே வடிவமைத்தார். பதட்டப்படாமல் மென்மையாகப் பேசும் அவரது குணம், எல்லோரையும் அரவணைத்துச் செல்ல பெருமளவு உதவியது.
  • நிறையவே கூச்ச சுபாவம் கொண்டவர் ஷிவ் நாடார். இத்தனை ஆண்டுகளில் ஒரு சில தருணங்களில் மட்டுமே அவர் பொதுவெளிக்கு வந்திருக்கிறார். ஆனாலும், 20ம் நூற்றாண்டில் அதிகம் கவனிக்கப்பட்ட பெருமைமிகு தமிழனாக ஷிவ் நாடார் வலம் வந்து கொண்டிருக்கிறார்!