leader-profile-image

வீணா குமரவேல் (நேச்சுரல்ஸ்)

  • தமிழகத்தின் ‘தொழிலழகி’ வீணா குமரவேல்! 2000ல், இணையர் சி.கே. குமரவேலின் ஆதரவுடன் அவர் ஆரம்பித்த நேச்சுரல்ஸ் தான், இப்போது இந்தியாவின் நெம்பர் 1 அழகு மையம்!
  • உண்மையில், வீணாவுக்கு அழகுமையத் துறையில் எந்த முன் அனுபவமும் இல்லை. எத்திராஜ் கல்லூரியில் வணிகப்படிப்பு தான் அவர் படித்தார். ஆனாலும், ‘அழகு மையம் ஆரம்பிக்கிறோம்… அதை இந்தியா முழுக்க கொண்டுபோறோம்’ என்ற ஒற்றை இலக்குடன் களமிறங்கிவிட்டார். அதற்கு, அவருக்கு உறுதுணையாக இருந்தார், இணையர் சி.கே.குமரவேல். முதலில், குமரவேலுக்கு ‘மழலையர் பள்ளி அல்லது ஆடை அலங்கார மையம்’ ஆரம்பிக்க வீணாவுக்கு உதவவேண்டும் என்பதே எண்ணம். அவரது பட்டியலில் ‘அழகு மையம்’ மூன்றாம் இடத்தில் தான் இருந்தது. ஆனால், வீணாவின் உறுதியால் அழகு மையத்துக்கு தலையாட்டினார், குமரவேல்!
  • முன் அனுபவமே இல்லாத அழகுமைய துறையில், பத்தே ஆண்டுகளில் நினைத்ததை சாதித்தார், வீணா. 2011ம் ஆண்டு ‘இந்தியாவின் சிறந்த அழகு மையம்’ என்ற விருதை வீணாவின் ‘நேச்சுரல்ஸூக்கு’ அளித்து கெளரவித்தது, என்.டி.டி.வி. அதே ஆண்டு, ’Best national salon chain of the year’ விருதும், Salon International அமைப்பால் நேச்சுரல்ஸூக்கு வழங்கப்பட்டது.
  • வீணா உழைப்புக்கு அஞ்சாதவர். 2000ல் நேச்சுரல்ஸை அவர் தொடங்கும்போது, ஏறக்குறைய எல்லா வேலைகளையும் அவர் ஒருவரே தான் கவனித்துக் கொண்டார். பெயருக்கு ஒரு தொழில்நுட்ப அதிகாரி இருந்தார். அவரும் 3 மாதங்களில் விலகினார். ஆனாலும், வீணா மனமுடையவில்லை. ‘நாம் நினைத்தால் எதையும் கற்கமுடியும்’ என்று நம்பிக்கையோடு ஓடினார். அப்புறம் அவருக்கு எந்த தொழில்நுட்ப அதிகாரியும் தேவைப்படவில்லை!
  • இங்கிலாந்து பெண் தொழில் முனைவர் Anita Roddick வீணாவின் மிகப்பெரிய ரோல் மாடல். அவரது ’The body shop’ மாடலை பின்பற்றித் தான் நேச்சுரல்ஸை வடிவமைத்தார், வீணா. Anita Roddick வழியை பின்பற்றி, இப்போது சமூக செயல்களிலும் ஈடுபாடு காட்ட ஆரம்பித்திருக்கிறார், வீணா.
  • ‘If you fail, get up again’… ‘இது தான் ஒரு வெற்றிகரமான தொழிலதிபராக மாற என்ன செய்ய வேண்டும்’ என்ற கேள்விக்கு, வீணா எப்போதும் அளிக்கும் பதில்!
  • ‘தமிழக பிராண்ட்கள், உலகம் முழுக்க செல்ல வேண்டும்’ என்பது வீணாவின் முக்கிய இலக்கு. இப்போது அவரது நேச்சுரல்ஸ் இலங்கை, துபாய், அமெரிக்கா என  இந்தியா கடந்தும் சிறகு விரிக்க ஆரம்பித்திருக்கிறது!
  • ‘பெண்கள் பொருளாதார சுதந்திரம் அடைந்து தனித்துவத்துடன் விளங்கவேண்டும்’ என்பதில் வீணாவுக்கு நிறைய ஆர்வம். அவரது நேச்சுரல்ஸ் நிறுவனத்தில், இதுவரை 189 கடைகள் பெண்களுக்கென்று உருவாக்கப்பட்டுள்ளது. அதன் மூலம், 5500 பெண்கள் பணி வாய்ப்புகளை பெற்றிருக்கிறார்கள்!
  • அதே போல, வட இந்தியர்களுக்கு உடல் உழைப்பு சார்ந்த தொழில்கள் மட்டுமே தமிழகத்தில் அதிகம் அளிக்கப்பட்டு வரும் சூழலில், அவர்களை கண்ணியமான அழகுமைய துறைநோக்கி வெற்றிகரமாக நகர்த்தினார், வீணா. அவர்களுக்கு அழகு நிபுணர்கள் என்ற அடையாளத்தைக் கொடுத்து, அவர்களுக்கு கற்பிக்க 4 பயிற்சி நிறுவனங்களையும் உருவாக்கி அசத்தினார், அவர். முக்கியமாக, பொருளாதாரத்தில் பின் தங்கிய வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த பெண்களுக்கு வீணா ஏற்படுத்திக் கொடுத்திருப்பது ஒரு அற்புத வாழ்நிலைச் சூழல்!