leader-profile-image

அன்னை தெரஸா

 • அன்பு, அறம், சகிப்புத்தன்மை ஆகியவற்றின் வடிவமாக திகழ்ந்த இருபதாம் நூற்றாண்டின் கருணை கடவுள் அன்னை தெரஸா.
 • அல்பேனியாவில் பிறந்தவர். இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ.  இளம் பருவத்திலேயே இறைப்பக்தியும் பொதுத் தொண்டில் ஆர்வமும் கொண்டிருந்தார். தன் 18 வது வயதில் லொரேட்டா கத்தோலிக்க கன்னிகா மடத்தில் சேர்ந்தார். அப்போது கொல்கத்தாவில் இந்திய மிஷனரிகள் செய்துவந்த சமூகத் தொண்டுகளின் மீது பெரிதும் ஈடுபாடு ஏற்பட்டது. அதனால், டுப்ளினில் இருந்து இந்தியாவுக்கு திரும்பினார். பின்னர் அயர்லாந்து சென்று ஆன்மிக கல்வி கற்றார். 1931 ஆம் ஆண்டு ஞானஸ்நானம் பெற்று, அன்னை தெரஸாவானார். 
 • 1931 ஆம் ஆண்டு முதல் 1948 ஆம் ஆண்டு வரை கொல்கத்தாவில் உள்ள புனிதமேரி உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியப் பணியை மேற்கொண்டார். பின்னர் அந்தப் பணியிலிருந்து விலகி, முழுநேரமும் தொண்டு பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். ஏழைகளுக்கும் நோய்வாய்ப்பட்டோருக்கும் தொண்டு செய்வதையே தனது உயரிய நோக்கமாகக் கொண்டு, அதில் முழு கவனத்தை செலுத்தத் தொடங்கினார். 
 • ஒருமுறை விருந்து ஒன்றில் பங்கேற்கிறார் அன்னை தெரஸா. அந்த விருந்தில் பரிமாறப்பட்ட இனிப்புகளில் சிலவற்றை தன்னுடைய பாக்கெட்டில் எடுத்துப் போட்டுக்கொள்கிறார். இத்தைகய அவரது செயல், எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைக்கிறது. அருகிலிருந்தவர்கள் “எதற்காக இந்த இனிப்புகளை உண்ணாமல் பாக்கெட்டில் எடுத்து போட்டுக்கொள்கிறீர்கள்?” என்று கேட்கிறார்கள். 
 • அதற்கு தெரஸா, “பெரும் சுவை கொண்ட இந்த இனிப்புகளை நான் சாப்பிடலாம். ஆனால், இந்த இனிப்புகளையே கண்டிராத, சுவைத்திராத எண்ணற்ற குழந்தைகள் பலர் என் கருணை இல்லத்தில் இருக்கின்றனர். அவர்களுக்காக இதை எடுத்துச் செல்கிறேன்” என்றார். அவரின் கருணை உள்ளத்தை கண்ட பெருஞ்செல்வந்தர்கள் அனைவரும் விருந்தில் பரிமாற வைத்திருந்த அத்தனை இனிப்புகளையும் அவருக்கே கொடுத்தனுப்பினர். தெரஸாவின் பேரன்புக்கு இது ஒரு சாம்பிள்தான்.
 • தீர்க்க முடியாத நோய்களால் அவதிப்பட்டவர்களின் கரம் பற்றி, அவர்களின் கண்ணீர் துடைத்த தேவதை அன்னை தெரஸா. கொல்கத்தா நகர வீதிகளில் உறவினர்களால் கைவிடப்பட்டு சாலைகளில் பசியால் அலைந்து, திரிந்த, தொழுநோயால் கைவிடப்பட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 42,000 பேரை வாரி அணைத்துக்கொண்டவர்.
 • “கிறிஸ்தவ மதத்தை பரப்ப வந்தவர்”, “நிதி வசூலித்து பிழைப்பு நடத்துபவர்” என்றெல்லாம் ஆரம்பத்தில் நிறைய விமர்சனங்களை அன்னை தெரஸா எதிர்கொள்ள நேர்ந்தது. ஒருமுறை கொல்கத்தாவில் வியாபாரி ஒருவரிடம் தன் கருணை இல்லத்தில் உள்ள தொழுநொயாளிகளுக்காக உதவி கேட்டு சென்றபோது பெரும் அவமானத்தை அவர் சந்தித்தார். தன்னிடம் உதவி கேட்ட அன்னையின் கையில் காரி உமிழ்ந்தார் அந்த வியாபாரி. 
 • அப்போது எந்த எதிர்வினையும் காட்டாத தெரஸா, “இது எனக்கு நீங்கள் தந்த பரிசு. இதை ஏற்றுக்கொள்கிறேன். என்னிடம் அடைக்கலமாயிருக்கும் அந்த தொழுநோயாளிகளுக்கு ஏதாவது தாருங்கள்” என்று பணிவோடு கேட்டார். அந்த வியாபாரி அவரின் பேருள்ளம் கண்டு, கலங்கி, அவரது பாதத்தில் விழுந்து, மன்னிப்புக்கோரியதோடு அவருக்குத் தேவையான அனைத்து பொருள்களையும் கொடுத்தனுப்பினார். ஆகவேதான் தெரஸா, “உதவும் கரங்கள், பிரார்த்திக்கும் உதடுகளை விட சிறந்தது” என்றார்.
 • இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த போப் ஆண்டவர், அன்னை தெரஸாவின் நற்பணிகளை வரவேற்கும் விதமாக, தான் பயன்படுத்திய சொகுசு காரை அவருக்குப் பரிசாக அளித்தார். அத்தகைய காரை அவர் பயன்படுத்தாத போதும், அதை மறுக்கவில்லை. போப்பின் அன்பிற்காக அதை ஏற்றுக்கொண்டு, அதை ஏலத்தில்விட்டு, கிடைத்த தொகையை தன் அறக்கட்டளையின் நிதியில் சேர்க்க சொல்லிவிட்டார். அதனால்தான் அவர் `அன்புக்கு அன்னை தெரஸா’!
 • அன்னை தெரஸாவால் தொடங்கப்பட்ட’மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டீ’ (Missionaries of Charity), இப்போதும் அவரது சீடர்களால் தொடர்ந்த நடத்தப்பட்டு வருகிறது. 5 ரூபாய் உடனும் 12 கன்னியாஸ்திரிகளுடன் தொடங்கப்பட்ட இந்த இயக்கம் தற்போது 132 நாடுகளில் கிளை பரப்பியுள்ளது. இந்தியாவில் 500-க்கும் மேற்பட்ட நிலையங்களை கொண்டுள்ளது. எத்தோப்பியாவின் வறுமை, செர்னோபிலின் அணுக்கதிர் அழிவு, ஆர்மீனியாவின் பூகம்ப தாக்கம் என பெரும் பாதிப்புகளின் துயர் துடைத்துள்ளது மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டி இயக்கம். அவரின் பெரும் தொண்டுக்கு மகுடம் சூட்டும் வகையில், 1979 ஆம் ஆண்டில் நோபல் பரிசும், 1980 ஆம் ஆண்டில் பாரத ரத்னா விருதும் அளிக்கப்பட்டன. 1997 ஆம் ஆண்டில் அவர் மறைந்தபோது அவரிடம் மிஞ்சியிருந்தது 3 வெள்ளை சேலைகள், ஒரு ஜெபமாலை, ஒரு சிலுவை மட்டுமே. அவர் மறைந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு அவருக்கு ‘புனிதர்’ பட்டம் வழங்கி, கெளரவித்தது வாடிகன் தேவாலயம். 
 • தன் வாழ்க்கையின் பெரும்பகுதியை (சுமார் 45 வருடங்கள்) மக்களுக்காகவே செலவிட்ட மகத்தான தொண்டு உள்ளம் கொண்ட அன்னை தெரஸா பெயரில் கொடைக்கானலில் பெண்களுக்கான பல்கலைக்கழகத்தை நிறுவினார் மறைந்த மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். “மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்…” என்றொரு கவிஞர் கண்ணதாசன் எழுதிய புகழ்பெற்ற பாடல் தமிழில் உண்டு. அந்தப் பாடலுக்கேற்ப மனித வடிவின் தெய்வம் அன்னை தெரஸா என்றால் அது மிகையில்லை!