leader-profile-image

வீரமா முனிவர்

  • காலத்தால் அழியாத, அழிக்க முடியாத செம்மொழியாம் தமிழ்மொழி. அதற்கு காரணங்கள் பல உண்டு. அதனால்தான், பல மொழிகள் கற்றுத் தேர்ந்த பாரதி, “யாமறிந்த மொழிகளிலே செம்மொழியாம் தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்றார். பாரதியின் வாக்கைக் காப்பாற்றுவது போல, ஓர் அயல்நாட்டுக்காரர், தமிழ்நாட்டுக்கு வந்து, தமிழைக் கற்று, அதில் புலமைப் பெற்று பல இலக்கியங்களை எழுதியதோடு தமிழ் மொழியையும் செம்மைப்படுத்தினார் என்றால் அதை வியக்காமல் இருக்க முடியாது அல்லவா. அந்த வியப்புக்குரிய மகத்தான மனிதர் வீரமா முனிவர். இயற்பெயர் கான்ச்டன்டைன் ஜோசப் பெஸ்கி  (Constantine Joseph Beschi). இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர்.
  • கிறிஸ்தவ மதத்தை தமிழகத்தில் பரப்பும் நோக்கத்தோடு  இந்தியா வந்தார். அவர் முதலில் வந்து இறங்கிய இடம் கோவா. அங்கிருந்து கொச்சின் துறைமுகம் வழியாக கேரளா வந்தடைந்தார். பிறகு, அங்கிருந்து கால்நடையாகவே மதுரை வந்தடைந்தார். தமிழகத்தில் இறைபணி ஆற்ற வேண்டுமென்றால், தமிழ் மொழி அறிந்திருக்க வேண்டும் என்பதை அறிந்தவர், சுப்ரதீப் கவிராயரிடம் முறைப்படி தமிழ் இலக்கணங்களை பயின்றார். அப்படியே காவி உடை, காதில் கடுக்கன், தலைப்பாகை, கையில் கைத்தடி என தமிழர் அடையாளங்களோடு மாறவும் செய்தார்.
  • முதலில் அவர் தனக்கு சூட்டிக்கொண்ட பெயர் தைரியநாதர். பின்னர், அது சமஸ்கிருதப் பெயர் என அறிந்து, வீரமா முனிவர் என பெயரை மாற்றிக்கொள்ளவும் செய்தார். பின்னாட்களில் அதுவே அவரது அடையாளப் பெயராகிப் போனது.
  • தமிழ் மொழியில் புலமைப் பெறத் தொடங்கியதும் வீரமா முனிவருக்கு தமிழ் இலக்கியங்கள் மீது அளப்பறிய காதல் ஏற்பட்டது. கால்நடையாக பல இடங்களுக்குச் சென்று, ஓலைச்சுவடிகளில் உள்ள இலக்கியங்களைத் தேடிப் படிக்கத் தொடங்கினார். காலப்போக்கில், மக்கள் இவரை `சுவடி சாமியார்’ என்றே அழைக்கத் தொடங்கிவிட்டனர்.
  • தமிழ்மொழி வரலாற்றில் வீரமா முனிவரின் பங்கு மகத்தானது. மொழியின் மீது ஏற்பட்ட தீவிர ஈடுபாட்டால், 93 தமிழ் சிற்றிலக்கியங்களை வகைப்படுத்தினார். `தேவாரம்’, `திருப்புகழ்’, `நன்னூல்’, `ஆத்திச்சூடி’ போன்றவற்றை ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்த்தார். திருக்குறளில் `அறத்துப்பால்’, `பொருட்பால்’ ஆகிய இரு அதிகாரத்தையும் லத்தீன் மொழியில் மொழிபெயர்த்தார். `ஐந்திலக்கணம்’, `செந்நூல் இலக்கணம்’ போன்ற இலக்கண நூல்களையும், பேச்சுத் தமிழுக்கான இலக்கண நூலையும் எழுதினார். 
  • இயேசு கிறிஸ்துவின் வளர்ப்புத் தந்தையான புனித ஜோசப்பினை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு, `தேம்பாவணி’ என்ற உயரிய இலக்கியத்தை படைத்தார். இதில் வரும் மூல கதாபாத்திரங்களை தமிழ்ப்படுத்தி `ஜோசப்’ என்பதற்கு `வளன்’ என தமிழில் பெயர் சூட்டினார். இன்றளவும், அவருடைய தமிழ்ப் பற்றுக்கு சான்றாக பல தமிழ் சான்றோர்களால் போற்றப்பட்டு வருகிறது. 
  • `திருக்காவலூர் கலம்பகம்’, `கித்தேரி கேத்ரின் அம்மாள் அம்மானை‘ போன்றவை முக்கிய படைப்புகள். `பரமார்த்த குருவும் சீடர்களும்’ தமிழில் எழுதப்பட்ட முதல் நகைச்சுவை உரைநடை நூல் என்பது தமிழுக்கு கிடைத்த பெரும்பேறு ஆகும். 
  • `லத்தீன் தமிழ்மொழி அகராதி’, `தமிழ் போர்த்துகீசிய மொழி அகராதி’ உருவாக்கிய வீரமா முனிவர், தமிழ்மொழியின் மாபெரும் சீர்திருத்தவாதிகளில் ஒருவர் என்றால் அது மிகையில்லை. மெய்யெழுத்துக்களில் புள்ளி வைப்பதை (உதாரணம்: க்) அறிமுகப்படுத்தியது வீரமா முனிவர்தான். அதற்கு முன் கோடு போடும் முறையே வழக்கத்தில் இருந்தது. குறில், நெடில் எழுத்துக்களுக்கு அ, ஏ முறையை அறிமுகப்படுத்தி, தமிழ் மொழியை செம்மைப்படுத்தினார்.
  • வீரமா முனிவரைப் போல அயல்நாட்டைச் சேர்ந்த வெறொருவர் சிற்றிலக்கியம், அகராதி, உரைநடை என பல வகைகளில் இலக்கிய நூல்கள் படைத்தது இல்லை என்பது இங்கே கவனித்தக்க அம்சம். தமிழ் சான்றோர்கள் “தாமே தமிழானார். தமிழே தாமானார்” என்று வீரமா முனிவரை போற்றிப் புகழ்வது அதனால்தான்!
  • இந்தியாவுக்கு தான் வந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் இறைப்பணியை தொடர்ந்தார். அப்போது தமிழகத்தின் பெரும்பகுதி ஆற்காடு நவாபின் கட்டுப்பாட்டில் இருந்தது. அவரின் படைத்தளபதியான சந்தா சாகிப்போடு நட்பில் இருந்த வீரமா முனிவர், கிறிஸ்தவர்களின் வாழ்வு செழிக்க பாடுபட்டார். 1736 ஆம் ஆண்டு திருச்சி அருகே நான்கு கிராமங்களை தானமாகப் பெற்றார். அங்கே கிறிஸ்துவ ஆலயங்கள நிறுவி, இறைபணி செய்தார்.அதுமட்டுமின்றி, திண்டுக்கல், ஆவூர், காந்தலூர், நாஞ்சூர் ஆகிய இடங்களுக்கு அவர் சென்றார். அவர் செல்லுமிடம் எல்லாம் கிறிஸ்தவர்கள் புதியதொரு ஆன்மிக எழுச்சி பெற்றனர். 
  • பெயராலும், பண்பாட்டாலும் தமிழராகவே வாழ்ந்த வீரமா முனிவர், 1747 ஆம் ஆண்டில் இறைவனிடம் அடைக்கலம் அடைந்தார். தமிழுக்காக தொண்டாற்றிய ஜி.யு.போப், கால்டுவெல் வரிசையில் வீரமா முனிவரும் தமிழரால் எப்போதும் கொண்டாடப்பட்டு, நினைவுகூறப்படுவார். கனவு தமிழ்நாடும் அவரது தமிழ்த்தொண்டை நினைவில் ஏந்தி நிற்கும்.