leader-profile-image

மணிமேகலை

  • மானுடகுலம் தழைக்க மடிக்கலம் ஏந்திவந்த மாமகள், மணிமேகலை! ‘அவள் காப்பியக்கன்னி அல்லவா…’ என்று தோன்றலாம். ஆனால், வெட்டவெளியில் காப்பியங்கள் உருவாவதில்லை. எனவே, மணிமேகலை நிஜம். அவள் ஏந்திய மடிக்கலமும் நிஜம்!
  • காப்பியத்தின் படி, கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்தவள் மணிமேகலை. கண்ணிகியையும் அவள் அன்னையென்றே கொள்கிறாள். ஆனால், கோவலனை வெறுக்கிறாள். ‘பூவைத் துய்த்து வீசிச்சென்ற கொலைப்பாதகன்’ என்றே அவனை மதிப்பிடுகிறாள். இந்தத் துணிச்சலே, சீதை, ராதை, கண்ணகி, மாதவி என எல்லோரையும் கடந்து, மணிமேகலையை இந்திய நிலத்தின் மாபெரும் காவியநாயகியாக நிலைநிறுத்துகிறது!
  • மாதவி ஆடற்குலத்தவள். எனவே, மணிமேகலையையும் ஆடற்கலைக்குள் இழுக்க அன்றைய பூம்புகார் நகரத்தார் முயல்கிறார்கள். ஆனால், மாதவி மகளைக் காத்து அறவண அடிகளை நோக்கி செலுத்துகிறாள். அங்கே, அறவண அடிகளிடம் புத்தத்தைப்பற்றி அறிகிறாள், மணிமேகலை. அடுத்து அவளது வாழ்வில் நடப்பவை எல்லாமே, பெரும்கதைகள். முக்கியமாக, கடல்தேவதையின் அருளைப் பெறுகிறாள், மணிமேகலை. எண்ணியிரா அளவு விரிவு கொண்டது, கடல். அதன் ஒரே பொருள், உயிர்களின் பசிதீர்ப்பது. ஆகவே, மணிமேகலையும் கடலன்னை வடிவெடுக்க தீர்மானிக்கிறாள். அந்தக் கணத்தில், அவளது மடியே ஒரு சிறுகடலென உருமாறுகிறது. பின்னர், ஊர்தோறும் பயணித்து மடிக்கலத்தில் பிச்சைச்சோறு ஏந்தி ஏழைகளின் பசிதீர்க்கிறாள், ‘மன்னுயிர் முதல்வி’ மணிமேகலை!
  • மணிமேகலை எதை உணர்த்துகிறாள்? எதுவும் இல்லை. ஆணினத்தின் முடிவிலா அடக்குமுறைக்கு எதிராக, பெண்ணினம் அன்புகொண்டு எழும் என்பதை உணர்த்துகிறாள். வயிற்றுக்குள் இருக்கும்போதே, அப்பனால் கைவிடப்படுகிறாள், மணிமேகலை. அடுத்து, சுயநலம் கொண்ட காதலனால் அலைக்கழிக்கப் படுகிறாள். ஆனால், யார் மீதும் மணிமேகலை பகை கொள்வதில்லை. ‘நீவீர் யாராக இருந்தாலும், நான் நானாகவே இருப்பேன்…’ என்று அறிவிக்கிறாள். ஆம்! கடைசிவரை, அவள் அவளாக மட்டுமே இருந்தாள். மணிப்பல்லவம், சாவக நாடு, மீண்டும் புகார், காவிரிபூம்பட்டினம் என சென்ற இடமெங்கும், எல்லோரின் மீதும் அவள் அன்பை மட்டுமே பொழிகிறாள். ஒரு காலச்சூழ்நிலையில், சிறைப்படுத்திய அரசிக்கும் கூட நன்னெறியையே போதிக்கிறாள்.
  • அந்தக் காலத்தில், புத்தமதத்தில் பேறுபெற்ற எல்லா ஆண்களையும் விட, அறிவுகொண்டவளாக விளங்கியிருக்கிறாள், மணிமேகலை. புத்தமதம் பற்றியிருக்கும் அனைத்தையும் துறக்கச்சொல்வது. ஆனால், மணிமேகலை அப்படி துறந்து புத்தபீடிகை நோக்கி செல்லும்போதும், பசிப்பிணி தீர்க்கும் கடமையை ஆற்றிவிட்டே செல்கிறாள். அவளால் பயன்பெற்ற மனிதர்களின் வகைகளை, மணிமேகலை காப்பியம் இப்படி விளக்குகிறது… ‘ காணார், கேளார், கால்முடமானோர், கைவிடப்பட்டோர், பேசார், பிணித்தோர், நோன்பிகள், நோயுற்றோர் என சகலருக்கும் உணவளித்தாள், மாதவி மகள் மணிமேகலை…’! முக்கியமாக, மணிமேகலை காப்பியத்தில் ஒரு இடத்தில் ‘மடிநல் கூர்ந்த மக்கள்…’ என்று ஒரு சொல் வருகிறது. இதற்கு, நிறைய ஆசிரியர்கள் வேறு பொருள் கூறினாலும், சமூகத்தில் ஒதுக்கிவைக்கப்பட்ட மக்கள் என்பதே நெருக்கமான, உண்மையான பொருள். எனவே, மடிநல் கூர்ந்த ஒதுக்கப்பட்ட மக்களையும் பேணியிருக்கிறாள், மணிமேகலை!
  • ‘தவம்’… இந்த சொல்லில் தான் அடங்குகிறது, மணிமேகலை வாழ்க்கையின் மொத்த சாரமும். அவளை எதிரில் காணும் எவரும், அது அரசனாக இருந்தாலும் சரி ஆண்டியாக இருந்தாலும் சரி, ‘மிக்க தவமுடையாய்…’ என்றே அழைக்கிறார்கள். ஆனால், அவள் கொண்ட தவம் எது? ஒன்றே ஒன்று தான்… ‘அறம் பரப்பல்’! ஒரு நிகழ்வு. பயணத்தில் இருக்கும் மணிமேகலையை அப்போதைய சோழ மன்னன் ஒருவன் சந்திக்கிறான். ‘தவச்செல்வியே… நீ வேண்டுவதென்ன…’ என்று கேட்கிறான். அதற்கு மணிமேகலை, ‘வேறெதுவும் வேண்டேன்… இங்கிருக்கும் சிறைச்சாலைகளை அறச்சாலைகளாக மாற்றிடுக…’ என்கிறாள். சோழமன்னன் அப்படியே செய்கிறான். மனிதர்களை அடைத்து தண்டனை தரும் சாலைகளாக இருந்த சிறைச்சாலைகள் அனைத்தும், மணிமேகலை வரவுக்கு பின்னர் அறம் கற்பிக்கும் அறச்சாலைகளாக மாறுகின்றன!
  • மணிமேகலையின் வாழ்க்கையில் முக்கியமாக நாம் உணரவேண்டியது, அவள் ’அவ்வை வாதி முதல் பூதவாதி வரை’ எல்லா சமயநெறிகளையும் உதறிவிட்டு, புத்தநெறியை தழுவினாள் என்பது. அதாவது, சமத்துவமற்ற எந்த நெறிகளும் உலகுக்கு உதவாது என்று அறிவித்துவிட்டே, அவள் அந்த இடத்தில் புத்தத்தை கொண்டுவந்து வைக்கிறாள். புத்தம் எல்லோருக்கும் நீதி அளிப்பது. ஆகவே, மணிமேகலையின் துறவு அரசியல்ரீதியாகவும் முக்கியத்துவம் அளித்து போற்றவேண்டிய ஒன்று!
  • மணிமேகலை சமூகச்சங்கிலிகளை உடைத்தவள். அவள் மேல் ஆசைகொண்ட உதயகுமாரன், ‘வருணக் காப்பிலள்…’ என்றே மணிமேகலையை பழிக்கிறான். அதாவது, ‘ஆடற்குலத்தவள்… வருணப்பாதுகாப்பு அற்றவள்…’ என்று சொல்கிறான். ஆனால், மணிமேகலை ‘சிறப்பு பிறப்பால் வருவது அல்ல, செயலால் வருவது மூடா…’ என்று அவனை விலக்கிவிட்டு, வாழ்க்கையில் உயரச்செல்கிறாள். நிச்சயமாக, அவள் மரவுரி அணிந்த மானுடத் தலைவி!
  • ‘சேவை’யே மானுடகுலத்தின் மாபெரும் சொல். அதை முதன்முதலில் உலகுக்கு உணர்த்தியவள், நம் மணிமேகலை. தெய்வங்களால் அளிக்கப்பட்ட அத்தனை ஆற்றலையும், அவள் அந்த தெய்வத்தை குளிர்விக்க பயன்படுத்துவதில்லை. மாறாக, மானுடகுலத்துக்கு சேவை செய்வதன் வழியே, அவள் அதற்கு நிகர்மதிப்பு ஏற்படுத்துகிறாள். இந்தியக் காப்பியங்களில், கடவுளை நோக்கி வணங்காத ஒரே துறவி, கண்டிப்பாக, மணிமேகலை!
  • இது வெறுப்பு பெருகும் 21ம் நூற்றாண்டு. எங்கும் வெறிக்குரல்கள், வேண்டாச்செயல்கள். இதை அழிக்க ஒரு மணிமேகலை பற்றாது. எழுக ஆயிரம், லட்சம், கோடி மணிமேகலைகள் இங்கு!