leader-profile-image

பழனியப்ப நாடார் (காளிமார்க்)

  • பெப்சி, கோக் போன்ற வெளிநாட்டு பானங்களுக்கு பெரிய சவாலாக இருக்கும் தமிழகத்தின் பானமான பவுண்டோவின் டிரேடிங் நேம் காளிமார்க். 
  • 1916 ஆம் ஆண்டு பிவிஎஸ்கே பழனியப்ப நாடார் மற்றும் அவரது மனைவி உன்னாமலை அம்மாள் ஆகியோரால் உருவாக்கப்பட்டதுதான் காளிமார்க். தற்போதைய விருதுநகர் அப்போது விருதுப்பட்டியாக இருந்தது. அங்கேதான் காளிமார்க் தன் பயணத்தைத் தொடங்கியது. 
  • பழனியப்ப நாடாரின் குடும்பத்தின் தொழில் காபி கடைதான். ஆனால், அதில் நாட்டாமில்லாததால், வேறு ஏதேனும் புதிய தொழிலை தொடங்க வேண்டும் என்ற ஆர்வம் அவர் மனதில் தொற்றிக்கொண்டது. அப்போது அவர் கண்ணில் பட்டதுதான் வெளிநாட்டு பானமான மார்க்ஸ் அன்ட் ஸ்பென்சர் கலர் சோடா. பாட்டிலின் வடிவமைப்புமும், அந்தப் பானத்தின் ருசியும் அவருக்கு ரொம்பவே பிடித்துப்போக இதே போன்றதொரு சோடாவை நாமும் தயாரித்து, விற்பனை செய்தால் என்ன என்ற யோசைன அவருக்கு வந்தது.
  • நண்பர்களிடம் தன் ஐடியாவை பழனியப்ப நாடார் பகிர, அவர்களும் சம்மதம் தெரிவித்து, ஆதரவு அளிக்க உதயமானது காளிமார்க். 
  • வீட்டிலேயே சொந்தமாக சோடா தயாரிக்கும் பணியைத் தொடங்கியவர், தன்னுடைய காளிமார்க் சோடாவை பிரபலப்படுத்தும் பணியிலும் இறங்கினார். அதற்காக கடைகளுக்குச் சென்று பிற நிறுவனங்களின் சோடாக்களை கேட்டு வாங்கிக் குடித்துவிட்டு, “இது நல்லாயில்ல.. வேணா காளிமார்க் சோடா வாங்கி வையுங்க. தரமாக இருக்கும்” என்று சொல்வதை வழக்கமாக வைத்திருந்தாராம். 
  • காளிமார்க்கின் சோடா பாட்டில்கள் அனைத்தும் ஜெர்மனியிலிருந்து தயாராயின. படிப்படியாக காளிமார்க்கின் தரமும், சுவையும் வாடிக்கையாளர்களுக்குப் பிடித்துப்போக விற்பன சூடுபிடிக்கத் தொடங்கியது. விருதுநகர் மட்டுமின்றி, கும்பகோணம், மதுரை, காரைக்குடி, சென்னை என கிளைகளை பரப்பினார் பழனியப்ப நாடார். 
  • தமிழகத்தின் தலைசிறந்த சோடாவாக மாறிய காளிமார்க், தன் நிறுவனத்திலிருந்து 1958 ஆம் ஆண்டு உருவாக்கியதுதான் பவுண்டோ. அதன் வண்ணமும் சுவையும் பலரையும் கிறங்க வைத்தது. கிராமங்களிலும் சரி நகரங்களில் சரி வீட்டுக்கு விருந்தினர் வந்தால் அவர்களை பவுண்டோ கொடுத்து வரவேற்பது தமிழர்களின் கலாசாரமாகவே மாறியது. 
  • பழனியப்ப நாடாரின் குடும்பம் மிகப் பெரியது. எனவே, காளிமார்க்கை தொடர்ந்து நடத்துவதில் சிக்கல் ஏற்படவே, 1977 ஆம் ஆண்டில் குடும்பம் தனித் தனியாக பிரிந்தது. இந்த சமயத்தில்தான் இந்தியாவில் உலகமயமாக்கல் கொள்கை அமலுக்கு வந்தது. உலகத்தை கோலோச்சிக் கொண்டிருந்த கொக்க கோலா, பெப்சி தமிழகத்திற்குள்ளும் நுழைந்தன. அப்போது அதற்கு பெரும் சவாலாய் இருந்தது பவுண்டோ. 
  • பெரும் சினிமா நட்சத்திரங்கள், கிரிக்கெட் பிரபலங்களைக் கொண்டு பல கோடி ருபாயில் விளம்பரம் செய்தது கோக்கும் பெப்சியும். இந்தப் போட்டியில் பலத்த இழப்பைச் சந்தித்தது காளிமார்க். அதன் இடத்தை கொக்க கோலாவும் பெப்சியும் ஆக்கிரமித்துக்கொண்டன. காளிமார்க்கை நிரந்தரமாக முட அதன் பாட்டில்களை சேகரித்து, மேற்கண்ட இரு பான நிறுவனமும் அடித்து நொறுக்கியதாகவும் ஒரு பேச்சு உண்டு. 
  • எங்கெங்கும் கோக், பெப்சியாக இருந்த சூழலில் 1993  ஆம் ஆண்டும் பிரிந்த குடும்பத்தினர் ஒன்று சேர்ந்த பின் காளிமார்க்கின் ரீ என்ட்ரி ஆரம்பமானது. சேலத்திலிருந்து மீண்டும் தன் பயணத்தை தொடங்கியது பவுண்டோ. காலமாற்றத்தால் கோக், பெப்சியின் மீதான மோகம் குறைந்து உள்ளுர் தயாரிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கினர் வாடிக்கையாளர்கள். கூடவே, வணிகர் சங்கங்களும் கோக், பெப்சியை கடைகளில் விற்பதற்கு தடை விதித்தன. பிறகு பவுண்டோவின் காட்டில் இன்று வரை அடைமழைதான். 
  • காலத்திற்கேற்ப தன்னையும் மாற்றிக்கொண்டது காளிமார்க். விளம்பரங்கள், பாட்டில்களின் வடிவத்தை மாற்றியது, புதிய பிராண்ட்களை அறிமுகப்படுத்தியது என இப்போது தமிழகத்தின் மிக முக்கிய குளிர்பானமாக மாறியிருக்கிற பவுண்டோ. அதை உருவாக்கிய பழனியப்ப நாடார் இப்போது பவுண்டோ சுவையில் நிரந்தரமாக இருக்கிறார்.