leader-profile-image

எஸ்.எஸ்.வாசன் (ஆனந்த விகடன்)

  • தமிழகத்தின் அரசியல், பண்பாடு, இலக்கியம், சினிமா என பல துறைகளில்  பெரும் பங்காற்றி வரும் `ஆனந்த விகடன்’ இதழின் நாயகன் எஸ்.எஸ்.வாசன். ஒரு பத்திரிகை அலுவலகம் எப்படியிருக்க வேண்டும்.. அந்தப் பத்திரிகையை எப்படி நடத்த வேண்டும் என்பதற்கு ரோல்மாடலாகத் திகழ்ந்தவர்.
  • நான்கு வயதிலேயே தந்தையை இழந்த வாசன், தன் உயர்நிலைப் பள்ளி கல்வி முடிந்ததும் திருத்துறைப்பூண்டியிலிருந்து கிளம்பி தாயாருடன் சென்னை வந்தார். பச்சையப்பன் கல்லூரியில் இன்டர்மீடியட் முடித்தார். அதற்கு மேல் படிக்க வசதியில்லாததால், பத்திரிகைகளுக்கு விளம்பரம் வாங்கித் தரும் வேலையை செய்து வந்தார். 
  • எழுதுவதிலும் ஆர்வமாக இருந்த வாசனுக்கு, ஓர் ஆங்கில கட்டுரையை மொழிப் பெயர்க்கும் வாய்ப்பு அமைந்தது. அதற்கு அவர் கிடைத்த சன்மானம் 15 நாள்களில் அவர் சம்பாதிப்பதற்கு இணையானது. எழுத்துத் துறையில் தனக்கு பிரகாசமான எதிர்காலம் இருப்பதை உணர்ந்து கொண்டார். 
  • 1927 ஆம் ஆண்டில் அவர் எழுதிய முதல் நூல் `இல்வாழ்க்கையின் ரகசியங்கள்’. அது ஆங்கிலத்திலும் வெளியானது. அந்த நூலை விளம்பரப்படுத்தும் பணிகளிலும் இறங்கினார் எஸ்.எஸ்.வாசன்.
  • இந்தச் சமயத்தில் அவர் ஒரு பத்திரிகைக்கு விளம்பரம் கொடுத்திருந்தார். குறிப்பிட்ட நாளில் பத்திரிகை வெளியாகவில்லை. இதனால் விளம்பரமும் கிடைக்காததால் கோபமுற்ற, வாசன் நேராக அந்தப் பத்திரிகையின் அலுவலகத்துக்குப் போனார். ஆனால், அங்கே சென்றவுடன் அவரது கோபம் தணிந்துவிட்டது. 
  • பத்திரிகையை தொடர்ந்து நடத்த முடியாததால் மூடும் நிலைக்கு வந்திருந்தது அந்தப் பத்திரிக்கை. ஆசிரியர் தன் துயரத்தை வெளிப்படுத்த, அலுவலகத்திலிருந்து வெளியே வந்தவர் சற்று யோசித்தார். ஏன், அந்தப் பத்திரிகையை தான் ஏற்று, நடத்தக்கூடாது. சிந்தனை செயல் வடிவம் பெற்றது. பத்திரிகை பெயரின் ஒவ்வொரு எழுத்துக்கும் 25 ரூபாய் வீதம் 200 ரூபாய்க்கு 1928 ஆம் ஆண்டில் வாங்கினார். அந்தப் பத்திரிகைதான் `ஆனந்த விகடன்’.
  • மாதம் இருமுறையாக வெளிவந்து கொண்டிருந்தது `ஆனந்த விகடன்’. அதை ஒவ்வொரு வாரமும் வரும்படி மாற்றினார் வாசன். அத்துடன் பத்திரிகையின் பொறுப்பாசிரியராக கல்கியை நியமித்தார். எழுதுவதில் வல்லவரான கல்கியின் வரவு, ஆனந்த விகடனுக்கு ஏறுமுகமானது. 
  • `சதிலீலாவதி’ என்கிற ஒரு தொடரை எழுதவும் செய்தார் வாசன். அதுமட்டுமின்றி குறுக்கெழுத்துப் போட்டிகள் நடத்தி, வாசகர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார். `சதிலீலாவதி’ தொடர் திரைப்படமாக வெளிவந்து, வாசனுக்கு பெரும்புகழை சேர்த்தது. 
  • லேசாக கொம்பு முளைத்த விகடன் தாத்தா லோகோவுடன் ஒவ்வொரு அட்டைப் படத்திலும் பிரமாதமான நகைச்சுவை இடம்பெற்றிருக்கும். அது விகடனின் பிராண்டாக மாறியது.  தன் கருத்துக்களை மக்களிடத்தில் உரக்க பேச ஆரம்பித்தது. முதலில் பிராமணர்களுக்கு அதிக முக்கியத்துவம் தந்தாலும், நாளடைவில் அதில் அனைத்து தரப்பு மக்களுக்குமான பத்திரிகையாக தன் முகத்தை மாற்றிக் கொண்டது. அதற்குப்  பெரும் பங்காற்றியவர் அவரது மகன் எஸ். பாலசுப்பிரமணியன்
  • விகடனில் கல்கி எழுதிய கதை `தியாக பூமி’. வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. கல்கி எழுதிய  தியாகபூமி கதையை படமாக எடுக்க கே.சுப்ரமணியம் என்பவர் முன்வந்தார். ஓர் ஒப்பந்தத்துடன் அந்தப் படத்தின் ஸ்டில்களுடன் தொடர்கதையாகயாக விகடனிலும் தியேட்டரில் திரைப்படமாகவும் வெளியானது தியாகபூமி. இந்திய அளவில் எந்தப் பத்திரிகையும் செய்யாத ஒரு புதிய முயற்சி. இப்படியாக உருவம், உள்ளடக்கம், உத்தி என எல்லாவற்றிலும் கவனம் செலுத்திய வாசன், ஆனந்த விகடனை நம்பர் ஒன் இடத்துக்கு கொண்டு வந்து சேர்த்தார்.  
  • பத்திரிகையில் வெற்றிக்கொடி நாட்டியதைப் போலவே, சினிமாவிலும் தன் முத்திரையைப் பதித்தார். அவர் இயக்கத்தில் வெளியான ‘சந்திரலேகா’ தமிழின் முதல் மெகா பட்ஜெட் படம்.
  • கல்கி மட்டுமின்றி ஜெயகாந்தன், சுஜாதா தொடங்கி பிரபஞ்சன், தமிழ்மகன், ராஜூமுருகன் வரை பலரின் வாழ்க்கையை மாற்றி அமைத்தது விகடன்தான். தற்போது விகடனுக்கு வயது 93. ஒரு பத்திரிகை இத்தனை வருடங்களுக்கு மக்கள் மத்தியில் தாக்குப் பிடித்து நிற்பது என்பது இமாலய சாதனை. அதற்கு அடித்தளமிட்டவர் வாசன். அவரின் சாதனை என்றென்றும் தமிழரின் புகழ்பாடும்!