leader-profile-image

லதா பாண்டியராஜன் (Mafoi)

  • தமிழ்நாட்டில் தொழில்முனைவை ஒரு இயக்கமாக முன்னெடுத்துக் கொண்டிருப்பவர்களில் முக்கியமானவர், திருமதி. லதா பாண்டியராஜன்! ஆணுக்கு பெண் சளைத்தவள் அல்ல. ஆண்களுக்கு நிகராக பெண்களும், தொழில்துறையில் எந்த உயரத்தையும் அடைந்து காட்டமுடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்துகொண்டிருப்பவர்!
  • 1992ம் ஆண்டு Mafoi நிறுவனத்தை இணையர் பாண்டியராஜனுடன் இணைந்து உருவாக்கினார், லதா பாண்டியராஜன். இப்போது அவரது நிறுவனத்தில் 10,500 பேர் பணிபுரிகிறார்கள். இதில், 10,000 பேர் தற்காலிக பணியாளர்கள். அவர்களை பணியாளர்கள் என்பதைவிட, Mafoi நிறுவனத்தின் உறுப்பினர்கள் என்பதே சரியாக இருக்கும். லதா பாண்டியராஜனுமே அப்படித்தான் அடையாளப்படுத்துவார். இத்தகைய அரவணைக்கும் பண்பே, லதாவின் Mafoi நிறுவனத்தை 27 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமான நிறுவனமாக தமிழ்நாட்டில் நிலைநிறுத்தியிருக்கிறது! 
  • மற்றவர்களின் வெற்றியில் மனம் மகிழும் குணம் ஒரு சிலருக்கே இருக்கும். லதா பாண்டியராஜன், அத்தகையவர்களில் ஒருவர்! அவரது நிறுவனத்தில் இருந்து விலகி புதிய நிறுவனங்களை உருவாக்கியவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். அவர்களைப் பார்த்து, ‘இதைவிட என் வாழ்க்கையில் பெரிய மகிழ்ச்சி எதுவும் இல்லை…’ என்று பாராட்டுவார், லதா பாண்டியராஜன்!
  • ‘Core Concept is very important’ என்று சொல்வார், லதா பாண்டியராஜன். அதாவது, ‘ஒரு நிறுவனம் எதை அடிப்படையாகக் கொண்டு ஆரம்பிக்கப் படுகிறதோ, அந்த அடிப்படையை விட்டு நகரக்கூடாது’ என்பதே அது. லதாவின் Mafoi ஒரு Consultant நிறுவனம். அதை விடுத்து, technology சார்ந்த ஒரு முன்னெடுப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க துவங்குகிறார், லதா. மொத்தம் 7 web portalகளை Mafoi சார்பாக உருவாக்கி, விளம்பரப்படுத்து கிறார் அவர். ஆனால், அது வெற்றிபெறவில்லை. ஏனென்றால், Mafoi நிறுவனத்தின் Core வேறாக இருந்தது. பின்னர் தான், அந்த ‘Core concept is very important’ என்ற வார்த்தைக்கான வலுவை அவர் உணர்கிறார். சில ஆண்டுகள் கழித்து, technology அடிப்படையில் களத்தில் இறங்கி பெரும் வெற்றி பெற்றது naukri.com. அதை எந்த வித போட்டி மனப்பான்மையோ தாழ்வுணர்ச்சியோ இல்லாமல், மேடைகளில் புகழ்ந்து பேசினார், லதா பாண்டியராஜன்!
  • லதா , மிகவும் எளிய பின்னணியில் இருந்து வந்தவர். அவருக்கு அவரது அம்மா தான் எல்லாமே. ‘என்னுடைய கனவுகளை பின்தொடர எந்த தடையும் அவர் போட்டதில்லை. எனக்கு என்ன பிடிக்கிறதோ அதைச் செய்ய அவர் மனப்பூர்வமாக அனுமதித்தார்’ என்று நெகிழ்வார், லதா. உண்மையில், லதாவின் Mafoi நிறுவனத்துக்கு ஆரம்பக்கட்டத்தில் பெரிய அளவில் நிதி உதவி கிடைக்கவில்லை. ‘மொத்தம் பத்துக்கும் அதிகமான வங்கிகள் ஏறி இறங்கினேன். கால் வலித்தது தான் மிச்சம், காசு வரவில்லை…’ என்று விளையாட்டாக சொல்வார், லதா பாண்டியராஜன். பின்னர், ‘Crowd funding, Crowd Sourcing’ என்ற வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாமலேயே, அதையெல்லாம் செய்து பணம் திரட்டி தொழிலில் வென்றார், லதா பாண்டியராஜன்!
  • இளம் தொழில்முனைவோர்களை காண்பதும், அவர்களுடன் உரையாடுவதும் லதா பாண்டியராஜனுக்கு மிகப்பிடித்த ஒன்று. அந்தத் தருணங்களில் தான், அவர் அளவில்லா மகிழ்ச்சியுடன் இருப்பார் எனலாம். ‘நேட்டிவ் லீட்’ அறக்கட்டளை சார்பாக, லதா பாண்டியராஜன் உருவாக்கிய ‘ஆயிரம் பூக்கள் மலரட்டும்…’ என்ற முன்னெடுப்பு, தமிழ்நாட்டில் நிறைய இளம் தொழில்முனைவோர்களை உற்சாகப்படுத்தியது! தொழில்முனைவோர்களை வெறும் தொழில்முனைவோர்களாக அல்லாமல், ‘இளைய இந்தியாவின் புதிய விடுதலை வீரர்கள்’ என்று வகைப்படுத்துவார், லதா பாண்டியராஜன்!
  • ‘வரலாற்றை அறியாதவர்களால் வரலாற்றை உருவாக்கமுடியாது’ என்றொரு சொல் உண்டு. லதா நன்றாகவே வரலாறு அறிந்தவர். முக்கியமாக, தமிழ்நாட்டின் வரலாறு! இந்தியாவில் தமிழ்நாடு மட்டும் எப்படி தனித்து ஒளிர்கிறது, காமராஜர் முதல் கலைஞர் வரை எத்தனைத் தமிழ் தலைவர்கள் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக அயராது உழைத்திருக்கிறார்கள் என்பதையெல்லாம், எல்லோருக்கும் புரியும்படி மிக அழகாக எடுத்துரைப்பார், லதா!
  • லதா பாண்டியராஜனுக்கு எல்லாவிதத்திலும் உறுதுணையாக இருப்பவர், அவர் இணையர் பாண்டியராஜன். ‘பெண்ணும் ஆணும் அவர்களுக்கென்று தனியாக ஒரு உலகத்தை உருவாக்கிக் கொண்டு முன்னேறமுடியாது. இருவரும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே எந்த வெற்றியும் சாத்தியம்’ என்பது, லதா பாண்டியராஜனின் கொள்கை!
  • எந்த தொழிலதிபரும் சமூகத்தில் இருந்து எதையும் பெற்றுக்கொள்ளாமல் முன்னேறுவதில்லை. ஆகவே, அவர்கள் முன்னேறியபிறகு சமூகத்திற்கு கணிசமான அளவு பங்களிக்கவேண்டியது அவசியமாகிறது. லதா அதை உணர்ந்தவர். அவரது Mafoi Foundation நிறைய சமூக கட்டுமானப் பணிகளை செய்து வருகிறது. கல்வி, மருத்துவம், விளையாட்டு, சூழல், பெண்கள் முன்னேற்றம் ஆகிய துறைகளில் லதா சேவைப்பணிகளை தொடர்ந்து வருகிறார்.