ஸ்ரீதர் வேம்பு (ZOHO)
- 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாத நிலவரப்படி ஆசியா, அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா என உலகமெங்கும் 180 நாடுகளில் முகவர்கள். 40-க்கும் மேற்பட்ட சேவைகள். 50 மில்லியன் வாடிக்கையாளர்கள் என வளர்ச்சிப்பாதையில் இருக்கிறது `ஸோகோ’. `ஸ்மால் ஆபிஸ்.. ஹோம் ஆபிஸ்’ சுருக்கமே `ஸோகோ(ZOHO)’. ‘இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. உலகுக்காக அர்ப்பணிக்கப்பட்டது’ சாப்ட்வேர் உலகத்தில் இப்படித்தான் கூறப்படுகிறது `ஸோகோ’. இந்த மென்பொருள் நிறுவனத்தை நிறுவியவர் ஸ்ரீதர் வேம்பு.
- ஸ்ரீதர் வேம்புவின் சொந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டம் அணைக்கரை அருகேயுள்ள சிதம்பரநாதபுரம் கிராமம். தமிழ் வழியில் பயின்றவர். பின்னர் ஐஐடி, அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலையில் முனைவர் பட்டம் என தன்னை மெருகேற்றிக்கொண்டவர். முனைவர் பட்டத்துக்கான ஆய்வுகளில் ஈடுபட்டிருக்கும்போது அவருள் எழுந்த இரு கேள்விகளே.. `ஸோகோ’ உருவாவதற்கான அடிப்படை விதை. “இந்தியா ஏழ்மையாக இருப்பது ஏன்?, இந்தியாவில் ஏன் தயாரிப்புகளே இல்லை?”. இந்தக் கேள்விகளே அவரை ஒரு தொழில்முனைவோராக திருப்பிய கணங்கள்.
- “உலகிலுள்ள பெரும்பாலான ஐ.டி.துறை நிறுவனங்கள் அதிக மதிப்பெண்களுடன் கூடிய முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களையே தேர்ந்தெடுக்கின்றன. 95 சதவிகித பட்டதாரிகள், 75 சதவிகித பொறியாளர்களை அவை கண்டுகொள்ளாமல், புறக்கணிக்கின்றன” என்கிறது `NASSCOM’ எனும் அமைப்பு. அதேபோல், பனிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்று, மேற்படிப்பு படிக்க முடியாத ஏழை மாணவர்கள் பலர் இங்கே உண்டு. அவர்களில் பலருக்கு பயிற்சி அளித்து, தன் நிறுவனத்தில் பணியமர்த்திக்கொள்வது ஸ்ரீதர் வேம்புவின் நடவடிக்கைகளில் ஒன்று. இதற்காக ஸோகோ ஸ்கூல் தொடங்கி, நடத்தி வருகிறார். இதில் மென்பொரு எழுத பயிற்சி அளிப்பதோடு மேலும் பல பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன.
- கிராமப்புறங்களுக்கு நகர்ப்புறங்களின் வசதிகளை வழங்க `PURA (Providing Urban Amenities to Rural Areas)’ எனும் திட்டத்தை கொண்டு வந்தவர் அப்துல் கலாம். அதாவது தொழில்நுட்பங்களை கிராமங்களுக்கு கொண்டு செல்வதன் வழியே, கிராமப் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும் என்பதே அந்தத் திட்டத்தின் உயரிய நோக்கம். அந்த வகையில், பெருநகரங்களுக்குள் தன் நிறுவனத்தை அமைக்காமல் சிறு நகரங்களில் அமைத்திருக்கிறார் ஸ்ரீதர் வேம்பு. “சிறிய நகரங்களில் வர்த்தகத்தை தொடங்குங்கள். உள்ளுர் பொருளாதாரத்தை வளர்த்தெடுங்கள்” என்பதே அவர் பலருக்கு தரும் ஆலோசனை.
- ஸோகோ நிறுவனத்தின் மதிப்பு பத்தாயிரம் கோடிகளுக்கும் மேல். இதன் வளர்ச்சியைக் கண்ட சேல்ஸ் போர்ஸ் நிறுவனம், ஸோகோவை விலை பேசியது. ஆனால், ஸ்ரீதர் வேம்பு அதற்கு சம்மதிக்கவில்லை. மாறாக, அந்த சேல்ஸ் போர்ஸின் பொருட்களை விட மிக குறைந்த விலைக்கு தன் பொருட்களை விற்பனை செய்தார். எடுத்துக்காட்டாக, சேல்ஸ் போர்ஸ் 65 டாலருக்கு விற்கும் ஒரு பொருளை நீங்கள் ஸோகோவில் 10 டாலருக்கு வாங்க முடியும். அதுமட்டுமல்ல, ஸோகோவில் முதலீடு செய்வதற்கு துணிச்சல்மிக்க முதலீட்டாளர்கள் பலர் முன் வந்தனர். ஆனால், அத்தனை முதலீடுகளையும் மறுத்துவிட்டார் ஸ்ரீதர் வேம்பு. “பணம் என்னுடைய இலக்கு இல்லை. என்னுடைய வேலையை முழு ஈடுபாட்டுடன் உணர்வுபூர்வமாக செய்கிறேன். அவ்வளவே..” என்கிறார்.
- ஸ்ரீதர் வேம்பு தன் கிராமத்தை தன் மனதுக்குள் அடைகாத்தவர். அவர் சிறுவனாக இருந்தபோது அவருடைய தந்தைக்கு பணி நிமித்தமாக தென்காசியை விட்டுவிட்டு சென்னைக்கு வரவேண்டியிருக்கிறது. “நீங்கள் வேண்டுமானால் சென்னைக்கு போகலாம். நான் இங்கேயேதான் இருப்பேன்” என்கிறான் சிறுவன். ஆனால், பெற்றோர் வலுக்கட்டாயமாகவே,சென்னைக்கு அந்தச் சிறுவனை அழைத்து செல்கின்றனர். போகும்போது, சிறுவன் செய்த காரியம் ஒன்று உண்டு. தன் ஊரின் ஞாபகமாக கூழாங்கல் ஒன்றை எடுத்து, தன் கால்சட்டையில் போட்டு மறைத்துக்கொள்கிறான். சென்னையில் பள்ளியில் படிக்கும்போது ஊரின் ஞாபகமாக அந்தக் கல்லை எடுத்து, அடிக்கடி பார்த்துக்கொள்கிறான். அந்த தென் காசி சிறுவன்தான் வளர்ந்து நின்றபின், கூழாங்கல்லையும் தொலைக்கவில்லை… சொந்த ஊரையும் மறக்கவில்லை.
- ஸ்ரீதர் வேம்புவை நீங்கள் லாஸ் ஏஞ்சல்ஸ்லியோ, கலிபோர்னியாவியோ பார்ப்பது கடினம். ஏன், சென்னையிலும் கூடத்தான். நீங்கள் அவரைத் தேடி தென்காசி அருகே உள்ள மத்தளம்பாறைக்குத்தான் செல்ல வேண்டும். அங்கேயும் ஒரு ஸோகோ அலுவலகம் உண்டு. அங்கே இருந்துதான் உலகம் முழுவதும் உள்ள அலுவலகங்களை நிர்வகிக்கிறார். தற்போது அங்கேயே வசிக்கவும் தொடங்கிவிட்டார்.
- ஸ்ரீதர் வேம்பு, தமிழர்களின் மகுடத்தில் மற்றுமோர் ரத்தினக் கல்!