leader-profile-image

சி.கே.ரங்கநாதன் (கெவின்கேர்)

  • ‘இயற்கையின் மகத்துவம், தொழில்நுட்பத்தின் வேகம் இவை இரண்டையும் இணைத்து புதுமையான தயாரிப்புகளை மக்களுக்கு அளிக்க வேண்டும். அது அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும்’ என்று புதுமையாக சிந்தித்து, வெற்றி கண்ட `கெவின்கேர்’ நிறுவனத்தை நிறுவிய `வணிக சக்கரவர்த்தி’ சி.கே. ரங்கநாதன். கடலூரில் பிறந்து, இந்திய மற்றும் சர்வதேச சந்தையில் புலிப்பாய்ச்சல் நிகழ்த்தி வரும் நாயகன்.
  • 1983 ஆம் ஆண்டு 15,000 ருபாயில் தொடங்கப்பட்ட சிக் இந்தியா நிறுவனம்தான் தற்போது பல கோடி மதிப்பிலான கெவின்கேர் நிறுவனமாக உயர்ந்து நிற்கிறது. முதலில் சி.கே. தயாரித்து, விற்பனை செய்தது `சிக் ஷாம்பு’. பின்னர் படிப்படியாக அழகுசாதனப் பொருள்கள், உணவுபொருள்கள், தின்பண்டகள், பானங்கள், பால்பொருட்கள், நொறுக்குத்தீனிகள் என வாடிக்கையாளர்களுக்கு தேவையானதை தயாரித்ததோடு, அவர்களின் நம்பிக்கையையும் சம்பாதித்தார்.
  • தன் தொழிலில் பல புதுமைகளை புகுத்தியவர். நவீன மாற்றங்களுக்க ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டதால் தொடர்ந்து மக்களிடையே நற்பெயரையும் விற்பனையில் வெற்றியையும் ஈட்டி வருகிறது கெவின்கேர்.
  • நவீன சூழலுக்கேற்ப தன்னை மாற்றிக்கொள்வதில் சி.கே.ரங்கநாதன் வல்லவர். அந்த வகையில் சலூன் துறைக்குள் இறங்கினார். இந்தியாவில் முதன்முறையாக ஃபேமிலி சலூன் முறையை அறிமுகப்படுத்தினார். இதற்காக சிறப்பு பயிற்சி பெற்றவர்களை பணியில் அமர்த்தினார். ஆண்கள், பெண்கள், குழந்தைகளின் அழகை பராமரிக்கவும், அவர்களுக்கு பிரத்யேகமான ஸ்டைலை உருவாக்கிக் கொள்ள துணை புரிந்தார். தற்போது `கிரீன் ட்ரெண்ட்ஸ்’, `லைம்லைட்’ ஆகிய இரு சலூன்களும் தமிழரின் வாழ்வை குதுகலமாக்கிவருகின்றன.
  • “ஒரு வியாபாரத்தைத் தொடங்கி, அதை சரிவர நடத்த முடியாமல் தோற்றவர்களே தன்னுடைய நிறுவனத்தின் வேலைக்குச் சேர முதல் தகுதியுடையவர்கள்” என்கிறார் சி.கே. தோல்வியுற்றவர்களின் அனுபவம் தன்னுடைய தொழிலில் வெற்றியை ஈட்ட உதவும் என்பதுதான் அதிலுள்ள சீக்ரெட்.
  • மாற்றுத்திறனாளிகளுக்கு மறுவாழ்வு மையம் அமைத்திருக்கிறார். அத்தோடு தங்கள் குறைகளை மறந்து வெவ்வேறு துறைகளில் சாதனை படைக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு விருது, வழங்கி கெளரவிக்கிறார்.
  • சிறு வயதில் தனக்கு கிடைக்கும் பாக்கெட் மணியை சேகரித்து வைத்து புறாக்களை வாங்கி வளர்ப்பது சி.கே.வுக்கு மிகவும் பிடிக்கும். சுமார் 200-க்கும் மேற்பட்ட புறாக்கள் அவருடன் வசித்தன. ஒன்று இந்த வீட்டில் நீ இருக்க வேண்டும்.. இல்லையென்றால் புறாக்கள் இருக்க வேண்டும் என அவரது அம்மா கண்டிசன் போடவே, வேறு வழியில்லாமல் எல்லா புறாக்களையும் அவர் விற்றுவிட்டார். ஆனால், அந்த புறாக்களின் பிரிவு அவரது மனதில் ஒரு வடுவாக தங்கிவிட்டது.
  • கெவின்கேர், க்ரீன் டெரெண்ட்ஸ், லைம் லைட்ஸ் என வெவ்வேறு நிறுவனங்களில் கோடிகளில் புழங்கினாலும் அந்த வடு அவரை உறுத்திக்கொண்டே வந்தது. தற்போது அதற்கு மருந்திட்டு குணமாக்கிக்கொண்டிருக்கிறார். ஆம், தற்போது புறா உள்பட வீட்டின் செல்லப் பிராணிகளின் அனைத்துக்குமான `சாஞ்சூ’ என்ற பெயரில் நவீன பல்நோக்கு மருத்துவமனையை தொடங்கியிருக்கிறார். ஆம். புதுமையாக சிந்திக்கும் ஒவ்வொருவரும் மகத்தானவர்களே!