leader-profile-image

எம்.ஜி.ஆர்

 • சமூகநீதி, அடித்தட்டு மக்களுக்கும் அரசியல் உரிமை,  மூடநம்பிக்கையை ஒழித்து முற்போக்கு பரப்பல் ஆகிய உயரியக் கொள்கைகளை கொண்டு எழுந்த திராவிட இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றியவர், எம்.ஜி.ஆர்! திராவிட இயக்கத்தின் தலைவர்களை தேர்தல்களில் தற்காத்து சட்டமன்றத்துக்கு அழைத்துச் சென்றதிலும் முக்கியமான ஒருவர்!
 • மிகவும் அடித்தட்டு நிலையில் இருந்து எழுந்து வந்தவர், எம்.ஜி.ஆர். அவரது அன்னை சத்யாவுக்கு மொத்தம் 3 பிள்ளைகள். எம்ஜிஆர் இரண்டாமவர். அண்ணன் சக்கரபாணியும் அவரும் இளவயது முதலே நாடக சபாக்களில் குறைந்த ஊழியத்தில் பணிசெய்து சினிமா வாய்ப்பு தேடினர். எல்லீஸ் டங்கன் இயக்கிய சதிலீலாவதி படத்தில் முதலில் அறிமுகமானார் எம்.ஜி.ஆர். அப்போது, அவர் எம்.ஜி.ராமச்சந்தர் மட்டுமே. சில வருடங்கள் தான். துள்ளல் நடிப்பாலும், துடிப்பு மொழியாலும் தமிழ்த்திரை ரசிகர்களை கொள்ளை கொண்டார், எம்.ஜி.ஆர். இறுதியில், ‘உலகம் சுத்திப் பாரு…’ படத்தில் நடித்து முடிக்கும் வரை, தமிழர்களின் மனம் கவர்ந்த ‘எங்க வீட்டுப் பிள்ளை’யாகவே திகழ்ந்தார், எம்.ஜி.ஆர்!
 • எம்.ஜி.ஆர் ஆரம்பத்தில் காங்கிரஸ்காரர். 1953ம் ஆண்டு வாக்கில், பேரறிஞர் அண்ணாவின் பேச்சைக்கேட்டு திராவிட இயக்கத்தின் மேல் ஈர்ப்புகொண்டு, திராவிடர் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். ஒன்றைப் பார்க்கவேண்டும். அப்போது, திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாட்டை ஆட்சிசெய்யும் அளவுக்கு பெரும் கட்சியாக இருக்கவில்லை. இன்றைய ‘லெட்டர்பேட்’ கட்சிகளின் நிலையிலேயே அது இருந்தது. ஆனாலும், ‘என் பயணம் திமுகவுடன் தான். என் வழிகாட்டி அண்ணா தான்…’ என்று தில்லாக முடிவெடுத்தார், எம்.ஜி.ஆர்! அதே தில் தான், பின்னாளில் திமுகவில் இருந்து விலகி அதிமுகவை தொடங்கவும் எம்.ஜி.ஆரை வழிநடத்தியது. மொத்தம் 3 சட்டமன்றத் தேர்தல்களில் தோல்வியையே தழுவாத தன்னிகரற்றவராக தமிழ்நாட்டை ஆண்டார், எம்.ஜி.ஆர்!
 • வாழ்வு முழுவதும் அன்னை சத்யாவுக்கு நிகரான இடத்தில் அண்ணாவை வைத்து போற்றினார், எம்.ஜி.ஆர்! அதிமுக ஆட்சியையே அவர், ‘அண்ணாவின் ஆட்சி இது. இதற்கு மேல் வேறு என்ன விளக்கம் உங்களுக்கு வேண்டும்…’ என்ற வார்த்தையை வைத்தே வகைப்படுத்தினார்! அண்ணாவுக்கும் எம்.ஜி.ஆரை மிகப்பிடித்திருந்தது. ‘நீ முகம் காட்டு தம்பி போதும்… திமுகவுக்கு என்னால் முகவரி ஏற்படுத்திக்கொள்ளமுடியும்…’ என்று அண்ணா சொன்னது வேறு எவரையும் பார்த்து அல்ல, எம்.ஜி.ஆரை பார்த்து மட்டுமே!
 • எம்.ஜி.ஆர் வள்ளல் என்பது, திரைத்துறைக்கு வந்து கோடிகோடியாக சம்பாதித்த பிறகு ஏற்பட்ட பெயரில்லை. அவர் ஜூபிடர் பிக்சர்ஸில் அணா கணக்கில் சம்பளம் வாங்கிய காலத்தில் இருந்தே, அவர் வள்ளல் தான்!
 • எம்.ஜி.ஆர் நடித்தவை எல்லாமே மாஸ் படங்கள் தான். ஆனால், அந்த மாஸ் படங்களில் எந்தவித தரக்குறைவான காட்சிகளையோ,வசனங்களையோ வைக்காமல் மக்களிடம் கொண்டுசென்றார், அவர். பெரும்பாலும் அவரது படங்கள் எல்லாமே, ‘நல்ல பண்பு, நல்ல ஒழுக்கம்’ ஆகியவற்றை தமிழ்ச் சமூகத்துக்கு போதித்தன. முக்கியமாக, குழந்தைகளுக்கு அவரது படங்கள் ‘நல்ல பெயரை வாங்கவேண்டும்’ என்று வழிநடத்தின. வில்லன்களும் கூட எம்.ஜி.ஆரால் அடிக்கப்படுவார்களோ ஒழிய கொல்லப்பட மாட்டார்கள். இறுதியில் அவர்கள் திருந்துவதைப் போலவோ அல்லது சட்டத்தின் பிடியில் அகப்பட்டுக்கொள்வது போலவோ தான் காட்சிகள் இருக்கும்!
 • பகுத்தறிவுக்கு புறம்பான மந்திரக் காட்சிகளிலும் எம்.ஜி.ஆர் நடிக்கத் தயங்கினார். அதைப் பற்றி கேள்விகேட்ட போது, ’படித்தவர்கள், படிக்காதவர்கள் என எல்லோரும் சினிமா பார்க்கிறார்கள். அவர்கள் நான் படத்தில் சொல்வதை அப்படியே நம்புகிறார்கள். அவர்களிடம் மந்திரத்தில் மாங்காய் விழும் என்பது போல நான் நடித்தால் தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் அல்லவா? நடிகன் என்ற முறையில் எனக்கு ஒரு சமூக பொறுப்பு இருக்கிறது. அதைக் காக்க நினைக்கிறேன்…’ என்று சொன்னார், எம்.ஜி.ஆர்! யோசித்துப் பார்த்தால், ‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’ படம் சில மந்திரக் காட்சிகள் கொண்டதாக தோன்றும். அதாவது, எம்.ஜி.ஆர் ‘அண்டாகா கசம்… அபுகா குஹூம்… திறந்திடு சீசேம்…’ என்று சொன்னதும், திருடர்களின் குகைக்கதவு திறக்கும். ஆனால், நன்றாகப் பார்த்தால், மந்திரம் சொல்லப்பட்டதும் கதவை மனிதர்கள் தான் ஒரு கருவியின் மூலம் திறந்து மூடுவார்கள். ஆக, நம்ப முடியாத, தர்க்கரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாத காட்சிகளை பெருமளவில் திரைப்படங்களில் தவிர்த்தார், எம்.ஜி.ஆர்!
 • எம்.ஜி.ஆர் கடவுள் நம்பிக்கை கொண்டவரே. மருதமலை முருகன் ஆலயத்திலும், மூகாம்பிகை ஆலயத்திலும் அவர் பாதம் பட்டிருக்கிறது. ஆனாலும், அவர் பக்திப்படங்களில் நடித்ததில்லை. இதைக் கேட்டபோது, ‘எங்கு பார்த்தாலும் கோயில்கள். இத்தனைக் கோயில்களை வைத்து வளர்க்கமுடியாத பக்தியை, சினிமா படங்களா வளர்த்துவிடப்போகிறது? என்னைப் பொறுத்தவரை தாயிடம் அன்பு, ஆசானிடம் பயபக்தி, நண்பனிடம் பாசம், ஏழையிடம் இரக்கம். இந்தப் பண்புகளே மனதை தூய்மையாக்கும். மனத்தூய்மையே பக்தி…’ என்று சொன்னார், எம்.ஜி.ஆர். அதே நேரத்தில், ஜெனோவோ, பரமபிதா படங்களில் நடித்ததையும் எம்.ஜி.ஆர் மறைக்கவில்லை!
 • எம்.ஜி.ஆர் சினிமாவில் மட்டும் தான் வேடம் போட்டார். வாழ்க்கையில் அவர் வேடம் போட்டதில்லை. ‘அந்த ராஜஸ்தான் தொப்பி என்ன வகையில் சேரும்…’ என்ற கேள்வி எழலாம். அது எம்.ஜி.ஆர் ‘Image’-காக போட்டது என்று எல்லோரும் நினைக்கிறார்கள். ஆனால், வெய்யிலில் இருந்து தற்காத்துக்கொள்ளவே எம்.ஜி.ஆர் தலையில் தொப்பி அணியத் தொடங்கினார். பின்னர், தேர்தல் பிரச்சாரங்களுக்கும் அதைப் பயன்படுத்தி அப்படியே உடன்வைத்துக் கொண்டார். ஆக, ‘கூட்டத்தில் தொப்பியை தட்டிவிட்டவர்களை எம்.ஜி.ஆர் தாக்கினார்’ போன்ற செய்திகள் உண்மையில்லாதவை. வரலாற்றைப் பாருங்கள்… இப்போதும் தமிழ்நாட்டின் அடித்தட்டு மக்களின் நாயகன் எம்.ஜி.ஆர் தான். இந்தப் புகழ் வேடம்போட்டால் கிடைத்திடாது!
 • காமராஜர் ஆரம்பக்கல்வியின் நாயகன் என்றால், எம்.ஜி.ஆர் உயர்கல்வியின் நாயகன். அவரது காலத்தில், தமிழ்நாட்டில் கல்லூரிகளே இல்லாத தாலுகாக்கள் இல்லை என்ற நிலை ஏற்பட்டது. மொத்தம், இருநூறுக்கும் அதிகமான கல்லூரிகள் எம்.ஜி.ஆரின் காலத்தில் கட்டப்பட்டன. முக்கியமாக, ’Towards Equal Rights’ என்ற எண்ணத்துடன் கொடைக்கானலில் அவர் தொடங்கிய அன்னை தெரஸா பல்கலைக்கழகம் மிகமுக்கியமான பங்களிப்பு. தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகமும் கூட, எம்.ஜி.ஆரின் ஆட்சிக்காலத்திலேயே தொடங்கப்பட்டது! இன்று தமிழ்நாட்டின் உயர்கல்வி விகிதம் கிட்டத் தட்ட 51 சதவிகிதம். இது அமெரிக்காவை விட அதிகமாகும். இதற்கான பெருமளவு உரிமையை எம்.ஜி.ஆருக்கு நாம் அளிப்பதே முறை!
 • எம்.ஜி.ஆர் அரசின் நட்சத்திர திட்டம் பள்ளி செல்லும் ஏழை குழந்தைகளுக்கான சத்துணவுத் திட்டம்! 1982ம் ஆண்டு ஜூலை மாதம் 1ம் தேதி சத்துணவுத் திட்டத்தை தொடங்கினார், எம்.ஜி.ஆர். ஆரம்பத்தில் 2 முதல் 9 வயது வரை மட்டும் உள்ள குழந்தைகளுக்கு மட்டுமே சத்துணவு திட்டம் அமல்படுத்தப் பட்டது. அப்புறம் அதன் முக்கியத்துவம் கருதி இரண்டே வருடங்களில், 10 முதல் 15 வயது வரை கொண்ட குழந்தைகளுக்கும் அதை நடைமுறைப் படுத்தினார், எம்.ஜி.ஆர். இடையில் நகர்ப்புற பள்ளிகளுக்கும் சத்துணவு திட்டத்தை விரிவுபடுத்தும் ஆணையை பிறப்பித்தார், எம்.ஜி.ஆர். இப்போது, ஆண்டுதோறும் 50 லட்சத்துக்கும் அதிகமான பள்ளிக்குழந்தைகள் மற்றும் தாய்மார்கள் சத்துணவு திட்டத்தால் பயன்பெற்று வருகிறார்கள். ஒரு ஆண்டில் குறைந்தபட்சம் 210 நாட்களுக்கான உணவு வழங்கலை சத்துணவு திட்டம் உறுதி செய்திருக்கிறது! 
 • எம்.ஜி,ஆரின் மொத்த வாழ்க்கையையே நாடோடி மன்னன் என்ற வார்த்தையில் அடக்கிவிடலாம். ஜூபிடர் பிக்சர்ஸூக்கு வந்து தரையில் படுத்துறங்கி திரையில் கதநாயகனாகும் வரை அவர் நாடோடி. அப்புறம், திரைவானில் கொடிகட்டிப் பறந்து, அரசியலில் நுழைந்து சாதித்து கண்மூடியபோது, அவர் மன்னன்!