leader-profile-image

ஜெ.ஜெயலலிதா

  • ஒரு பெண்ணாக, நடிகையாக நிறைய அவமதிக்கப்பட்டாலும், தமிழ்நாட்டின் உச்சப்பதவி வரை உயர்ந்த அதிசயம், செல்வி ஜெ. ஜெயலலிதா! அந்த கனத்த முகமும், கடிகார முள் திலகமும், இழுத்துப் போர்த்திய சேலையும், இருள்நிற புலியின் பார்வையும், என்றென்றைக்குமான தமிழ்ப்பெண்களின் உந்துசக்தி!
  • ஜெயலலிதா போல, ஆண்களால் அலைக்கழிக்கப்பட்ட இன்னொரு பெண் அரசியல் தலைவர் தமிழகத்தில் இல்லை. இன்றைய ஜோதிமணிகள், கனிமொழிகள் எல்லோருக்கும் முன்மாதிரி, அவர்! 1980களின் இறுதிக்கட்டத்தில் ஜெயலலிதா முதல்வர் ஆசையுடன் முன்வந்தபோது, ஏறக்குறைய எல்லா ஆண் தலைவர்களுமே அசூயையே வெளிப்படுத்தினார்கள். அவரது கட்சிக்குள்ளேயே நிறைய பேர் அதிருப்தி தெரிவித்தார்கள். ஜானகி பிடித்த அவர்களுக்கு ஜெயலலிதாவை பிடிக்கவில்லை. ‘கவர்ச்சியுடை அணிந்து நடனமாடிய பெண் நாடாள விழைகிறாள்…’ என்று, அவர் காதுபடவே பலர் அவதூறு பேசினார்கள். அந்தக் காலங்களில், ஜெயலலிதா தீவிரமாக அரசியல் பேசும் மேடைகளின் கீழே இருந்து, ‘ஆடாமல் ஆடுகிறேன் பாட்டுக்கு ஒரு நடனம் போடுங்கள் மேடம்…’ என்று, ஒருகுரல் எழாமல் இருக்காது. இத்தனையையும் கடந்தே அரசியலில் வென்றார், ஜெயலலிதா. அவர், தமிழகத்தின் முதல்வராக பதவியேற்ற போது அவருக்கு வயது 44! இந்த சாதனையை, இதுவரை தமிழகத்தின் எந்த ஆண் அரசியல் தலைவர்களாலுமே முறியடிக்க முடியவில்லை. இந்த தன்மையாலேயே, இன்றும் குடும்பங்களில், அலுவலகங்களில், ஆட்சி மன்றங்களில் ஆண்களால் அவமதிக்கப்படும் பெண்கள் எல்லோரும், ஜெயலலிதாவை அவர்களின் முன்மாதிரியாக நினைத்து கொண்டாடுகின்றனர்!
  • நிச்சயம், தமிழ்நாட்டுப்பெண்களால் விலைமதிப்பற்ற ஆளுமையாக இருந்தார், ஜெயலலிதா! இப்போதும், தமிழ்நாட்டு பெண்களின் வாக்கு வங்கி, ‘அம்மா…’ என்ற பெயரை சுற்றியே மையம் கொண்டிருப்பதை வைத்து, அதை நாம் உணரமுடியும். எல்லாவற்றுக்கும் மேலே, முந்தைய அரசுடன் போட்டிபோட்டுக் கொண்டு, பெண்களுக்கான நலத்திட்டங்களை முடிந்தவரை நிறைவேற்றி அசத்தினார், ஜெயலலிதா. பெண்சிசுக்கொலைகளை தடுத்த தொட்டில் குழந்தை, திருமணமாகும் எளிய பெண்களுக்கான தாலிக்குத் தங்கம், கருவுற்ற பெண்கள் சுகவீனம் அடையாமல் இருக்க, மகப்பேறு கால விடுப்பு அதிகரிப்பு, கிராமப்புற மற்றும் நகர்ப்புற பெண்களின் உடற்சிரமத்தை குறைப்பதற்காக, இலவச மிக்சி, கிரைண்டர் மற்றும் ஃபேன், பயணம் செய்யும் இளம்தாய்மார்களின் வசதிக்காக பேருந்து நிலையங்களில் தாய்ப்பால் அறை, இதுபோக, பெண்களுக்கு முழு உடல்நலப் பரிசோதனை, அரசுத்துறைகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு என, தமிழ்நாட்டுப் பெண்களை இரண்டாம் இதயமென நினைத்து பேணினார், ஜெயலலிதா!
  • ‘அம்மா உணவகம்’ ஜெயலலிதாவின் மகத்தான சாதனை. ஒரு ரூபாய்க்கு இட்லி கொடுத்ததில் இல்லை அவரது வெற்றி, அந்த ஒரு ருபாய் இட்லியை 10 ரூபாய் இட்லிக்கு இணையான தரத்துடன் கொடுத்ததே, அவரது வெற்றி! அதோடு, அம்மா உணவகத்தின் நிர்வாகத்தையும் முழுவதும் பெண்களே நடத்தும்படி வடிவமைத்தார், ஜெயலலிதா. இன்று, ஆயிரக்கணக்கான பெண்களுக்கு வளமும் நலமும் கொடுக்கும் மிகமுக்கிய முன்னெடுப்பாக ‘அம்மா உணவகம்’ நீடிக்கிறது. பொதுவாக, ஒரு மாநிலத்தின் திட்டத்தை இன்னொரு மாநிலங்கள் செயல்படுத்த விரும்புவது, அரிது. ஆனால், ஜெயலலிதாவின் ‘அம்மா உணவகம்’ திட்டத்தை, கர்நாடகத்தில் ‘இந்திரா உணவகம்’ என்று காங்கிரஸூம், ஆந்திரத்தில் ‘என்டிஆர் உணவகம்’ என்று தெலுங்கு தேசமும் அமல்படுத்தின. ஏன்?! அவரை எதிர்த்த கட்சியே கூட, ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தாலும் இந்தத் திட்டத்தை வேறு பெயரில் தொடர்வோம்…’ என்று உறுதியளித்தது!
  • ஆண்களால் இங்கே வெளிப்படையாக அந்தரங்கங்களைப் பேசமுடிவதைப் போல பெண்களால் பேசமுடியாது. கணவனிடம் உங்களால், ‘உங்களின் சிறுவயது காதலியைப் பற்றி சொல்லுங்கள்’ என்று கேட்கமுடியும். ஆனால், மனைவியிடம் ‘உங்கள் சிறுவயது காதலனைப் பற்றி சொல்லுங்கள்…’ என்று கேட்க முடியாது. ஏனென்றால், நம் நாட்டில் நிலவும் சமூக ஒழுக்கங்கள் பெண்களின் அந்தரங்க விருப்பங்களை விரும்புவதில்லை. ஆனால், ஜெயலலிதா அப்படிப்பட்ட சமூக ஒழுக்கங்களை உதவா மூங்கிலென முழங்காலில் முறித்து தூக்கியெறிந்தார். அவர் சிமி கெர்வாலுக்கு அளித்த புகழ்பெற்ற பேட்டியில், ‘ஆமாம், எனக்கு சிறுவயதில் சிலர் மீது ஈர்ப்பு இருந்திருக்கிறது. கிரிக்கெட்டர் நாரி காண்ட்ராக்டர் மற்றும் பாலிவுட் நடிகர் ஷமி கபூர் ஆகியோர் அவர்களில் முக்கியமானவர்கள்’ என்று வெளிப்படையாக சொன்னார். பின்னாளில், ஷோபன்பாபுவோடு அவர் ‘Going Steady…’ வாழ்க்கை வாழ்ந்தபோதும் கூட, அவர் அதை ரகசியமாக வைத்திருக்கவில்லை. ‘நீங்கள் நினைப்பதை நினையுங்கள்… நான் எனக்காக வாழ்கிறேன்…’ என்றே உறுதியாக நின்றார்!
  • ஜெயலலிதாவை ஆணவம் மிக்கவர் என்பார்கள். அது உண்மையே! ஆனால், அந்த ஆணவமே தமிழகத்தின் மானத்தை டெல்லியில் அடகுவைக்காமல், பார்த்துக்கொண்டது.  2012ம் ஆண்டு டெல்லியில் நடந்த தேசிய வளர்ச்சி மாநாட்டுக்கு தமிழகத்தின் சார்பாக ஜெயலலிதா சென்றார். அங்கே அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே, ‘உங்கள் நேரம் நிறைவடைந்தது…’ என்று மணியடித்து அவரை அமரச்சொன்னார்கள், அதிகாரிகள். ஆனால், ஜெயலலிதா ‘நான் ஒரு மாநிலத்தின் முதலமைச்சர். உங்களின் அடிமையல்ல…’ என்று முறைத்துவிட்டு, வெளியே வந்தார். பின், மன்மோகன் சிங்கே ‘தவறு நடந்து விட்டது’ என்று சமாதானப்படுத்தியும் அவர் பணியவில்லை. அவ்வளவு ஏன்? ஜெயலலிதா இருக்கும்வரை, தமிழக மாணவர்களின் மருத்துவக்கனவை பறிக்கும் நீட் தேர்வு, ஒரு நிறைவேறாத காகிதச்சட்டமாகவே இருந்தது. அவர் நீள்துயில் கொண்டார். நீட், தமிழகத்துக்கும் நீண்டது!
  • அதிமுக எம்.ஜி.ஆர் காலத்திலேயே வலுவான கட்சி தான். ஆனால், ஜெயலலிதா காலத்தில் அது இன்னும் வலுவானதாக மாறியது. அமைப்புரீதியாக அதிமுகவை தமிழ்நாட்டின் சிறிய கிராமங்களுக்கும் கொண்டுசென்று சேர்த்தார், ஜெயலலிதா. இதன் பின்பே, ‘தமிழகக்கட்சிகளிலேயே ஒரு கோடி தொண்டர்கள் என்ற எண்ணிக்கையை அடைந்த முதல் கட்சி’ என்ற அந்தஸ்தை, அதிமுக பெற்றது. விமர்சனங்களை கடந்து பார்த்தால், இன்றும் எம்.ஜி.ஆருக்கு நிகரான இடத்தையே, அதிமுக தொண்டர்கள் ஜெயலலிதாவுக்கு அளித்திருக்கிறார்கள். தமிழகத்தின் மக்கள் பிரதிநிதிகள் வேண்டுமானால் ‘அம்மா’ என்று சும்மா சொல்லலாம். ஆனால், இன்றும் தமிழகத்தின் உட்புற கிராமங்களில் வசிக்கும் அதிமுக தொண்டன், உணர்வுப்பூர்வமாகவே ‘புரட்சித்தலைவி அம்மா…’ என்ற வரியை உச்சரிக்கிறான்!
  • ஜெயலலிதாவின் சனாதனப்பார்வையை புரிந்துகொள்வது சற்றே கடினம். அவர் கரசேவைக்கும் கல் அனுப்பியிருக்கிறார், சங்கராச்சாரியாரையும் கைது செய்திருக்கிறார். எதுவாக இருந்தாலும், சமூகநீதியில் கடைசிவரை சமரசம் செய்யாத மனிதநேய மங்கையாகவே கடைசிவரை இருந்தார், ஜெயலலிதா. அவரது 1991 – 1996 ஆட்சிக்காலத்தில் தான், 69 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு சட்டப்பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டது (ஜெயலலிதாவுக்கு முன்னால், எம்.ஜி.ஆரின் ஆட்சிக்காலத்தில், 68 சதவிகிதம் வரைக்கும் இட ஒதுக்கீடு தமிழகத்தில் அதிகரிக்கப்பட்டது. பின்னர், 1989ம் ஆண்டு கலைஞர் ஆட்சிக்கு வந்து பழங்குடியினருக்கு தனியாக 1 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளித்து, 68 சதவிகித இட ஒதுக்கீட்டை, 69 சதவிகிதமாக உயர்த்தினார்). இதனால், ‘சமூகநீதி காத்த வீராங்கனை’ என்ற பட்டத்தை ஜெயலலிதாவுக்கு வழங்கினார, திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் கி. வீரமணி! 
  • நிலையற்ற மனம் கொண்ட ஆண்களின் உலகத்தில், கல்வியே பெண்களுக்கான நிரந்தர வாழ்க்கைத் துணை. இதை நன்றாக புரிந்த ஆட்சியாளர் ஜெயலலிதா! பெண்களின் கல்வி உரிமையில் அவர் காட்டிய முடிவிலா அக்கறையை, இந்தியாவின் வேறு எந்த முதலமைச்சர்களோடும் ஒப்பிட்டு பார்க்கவே முடியாது. இந்தியாவிலேயே முதன்முறையாக பள்ளி செல்லும் மாணவிகளுக்கு இலவச சைக்கிள் திட்டத்தை, ஜெயலலிதாவே கொண்டுவந்தார். அது பின்னர் நிறைய மாநில முதலமைச்சர்களால் எடுத்தாளப்பட்டு, இந்தியாவெங்கும் சென்றது. அடுத்தும், சீருடை, கல்விச்சாதன பொருட்கள் அடங்கிய புத்தகப்பை என, மாணவிகளுக்கான இலவசத் திட்டங்களை தொடர்ந்து அறிவித்துக்கொண்டே இருந்தார், ஜெயலலிதா!
  • ஜெயலலிதாவின் இலவச மடிக் கணினி திட்டம், தமிழ்நாட்டின் ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு ஒரு டிஜிட்டல் வரமென்றே சொல்லலாம். கலைஞர் இலவசத் தொலைக்காட்சி மூலமாக தகவல் புரட்சியை ஏற்படுத்தினார் என்றால், ஜெயலலிதா இலவச மடிக்கணினி வாயிலாக அறிவுப்புரட்சியை உண்டாக்கினார். இன்று, ஜெயலலிதாவின் இலவச மடிக்கணினியைப் பயன்படுத்தி, மருத்துவம் முதல் ஆட்சிப்பணி வரை ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள், தமிழக மாணவர்கள்! இதன் இன்னொரு வடிவமாகவே, பஞ்சாபில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ’இலவச ஸ்மார்ட்ஃபோன்’ வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார், முதலமைச்சர் அமரீந்தர் சிங்!
  • ‘பிடிக்கிறதோ, பிடிக்கவில்லையோ, எது ஒன்றையும் சிறப்பாக செய்யவேண்டும்’ என்பது ஜெயலலிதாவின் கொள்கை! பரதநாட்டியம் அவருக்கு பிடிக்காது. ஆனால், பரதநாட்டியப் பள்ளியில் அவர் தான் முதல் மாணவி. சினிமா அவருக்கு பிடிக்கவில்லை. ஆனால், 1960 – 70களில் ஜெயலலிதா தான் தென்னிந்தியாவின் நெம்பர் 1 நடிகை. அவரைப் பார்த்தே, பின்னாளில் ஶ்ரீதேவி, சிம்ரன், நயன்தாரா போன்ற தனித்துவம் மிக்க, ஆளுமை கொண்ட திரைநடிகைகள் எழுந்துவந்தார்கள். அரசியலும் ஒரு கட்டத்துக்கு மேல் அவருக்கு பிடிக்கவில்லை. சிமி கெர்வாலின் பேட்டியிலேயே அதை உறுதியாக சொல்லவும் செய்வார். ஆனால், கடைசிவரை வெற்றிகரமான முதலிட அரசியல்வாதியாகவே அவர் இருந்தார். அண்ணா, எம்ஜிஆருக்கு பிறகு, பதவியில் இருக்கும்போதே இறந்த தமிழக முதலமைச்சர், ஜெயலலிதாவே! அவர் இறந்தபோது, அதிமுக மாநிலத்தில் 134 இடங்களும், மத்தியில் 37 இடங்களும் பெற்று அசுரபலத்தோடு அரசியலில் நிலைகொண்டிருந்தது!
  • ஜெயலலிதாவின் முக்கியத்துவம், எந்தப் பெரிய தலைவருக்கும் நேரடி வாரிசாக இல்லாமல், நெருப்புச்சுழியில் இருந்து எழுந்த பீனிக்ஸ் பறவையைப் போல,  தமிழகத்தின் முதலமைச்சர் பதவிக்கு வந்தார் என்பதில் இருக்கிறது! இனி அத்தகைய தன்மை கொண்ட ஒரு பெண் முதலமைச்சர் தமிழகத்துக்கு எப்போது சாத்தியம் என்று யோசித்துப் பாருங்கள். அப்போது புரியும் அவரது அருமை!