எம்.எஸ்.சுவாமி நாதன்
- இருட்டில் கிடந்த இந்திய விவசாயத்தின் மீது வெளிச்சம் பாய்ச்சிய பகலவன், எம்.எஸ். சுவாமிநாதன்!
- தமிழகத்தின் கும்பகோணம் தான் சுவாமிநாதனின் சொந்த ஊர். அவரது அப்பா சாம்பசிவன் புகழ்பெற்ற மருத்துவர் மற்றும் காந்தியர். அவரிடமிருந்து தான், ‘முடியாதது என்று இங்கே எதுவுமில்லை’ என்ற பாடத்தை சுவாமிநாதன் கற்றார். பின்னர், அதே பாடத்தை விவசாய களத்திலும் செயல்படுத்தி சுவாமிநாதன் வெற்றி கண்டார்.
- 1960களின் இறுதிப்பகுதியில் இந்தியாவை பெரும் பஞ்சம் சூழ்ந்தது. வட இந்தியாவில் ஆயிரக்கணக்கில் பட்டினி சாவுகள் நிகழ்ந்தன. மக்களைக் காப்பதற்கு நேரு போன்ற ஒரு உன்னத தலைவனும் இல்லாத சூழ்நிலை. ஏதேனும் அதிசயம் நடந்தால் தான் உண்டு என்று மக்கள் பசித்த வயிறுகளுடன் வீதிகளில் அமர்ந்தனர். அப்போது தான், நெற்கதிர்களோடும் கோதுமை மணிகளோடும் காட்சிக்கு வந்தார் எம்.எஸ்.சுவாமிநாதன். ‘இங்கே அதிசயம் எதுவும் அதுவாக நிகழாது. நாம் தான் நிகழ்த்தவேண்டும்’ என்றார். அவர் நிகழ்த்திய அதிசயம், ‘பசுமைப்புரட்சி’!
- எம்.எஸ்.சுவாமிநாதனின் பசுமைப்புரட்சி இந்தியாவில் ஏற்படுத்திய மாற்றத்தை எழுத்துகளில் அவ்வளவு எளிதில் சொல்லமுடியாது. நான்கே அறுவடைக் காலங்களில், பயிர்விளைச்சலை இரண்டு மடங்கு அதிகரித்துக் காட்டினார் எம்.எஸ். இந்தியாவில் அதுவரை 12 மில்லியன் டன்களாக இருந்த கோதுமை விளைச்சல், எம்.எஸ் வருகைக்குப் பிறகு 23 மில்லியன் டன்களாக மாறியது.
- ‘விஞ்ஞானி என்றால் அறைகளுக்குள் அமர்ந்து ஆய்வுத்தாள்களை புரட்டிக் கொண்டி ருப்பார்கள்’ என்ற கற்பிதத்தையும் எம்.எஸ் உடைத்தார். பணிக்காலத்தின் பாதிக்காலத்தை அவர் விவசாயிகளுடன் வயல்களில் செலவழித்தார். ஒவ்வொரு விவசாயியின் கேள்விக்கும், சிரித்த முகத்துடன் பதில்களைச் சொன்னார். எம்.எஸ்.சுவாமிநாதனுடன் இன்று ஒரு விவசாயி கலந்துரையாடினால், நாளை அவரே இன்னொரு எம்.எஸ்.சுவாமிநாதனாக மாறிவிடுவார்!
- 2004 – 2014 வரை தேசிய விவசாயிகள் ஆணையத்தின் தலைவராக செயல்பட்டார், சுவாமிநாதன். அவரது அந்தக் காலம், விவசாய ஆராய்ச்சியில் ஆர்வம் கொண்ட பல இளைஞர்களுக்கு மிகப்பெரும் ஊக்கமாக அமைந்தது. ஏறக்குறைய 60 மாணவர்கள் சுவாமிநாதனின் கீழ் ‘முனைவர்’ பட்டம் பெற்றார்கள்.
- பசுமைப்புரட்சிக்கு அடுத்து, 2004 – 2006ம் ஆண்டுகளில் சுவாமிநாதன் தாக்கல் செய்த ஆய்வறிக்கைகள் மிகவும் முக்கியமானவை. அதில், விவசாயிகளின் தற்கொலைகள், உணவுப் பற்றாக்குறை, நில சமத்துவமின்மை உள்ளிட்ட பல தளங்களில் சுவாமிநாதன் ஆலோசனைகளை அள்ளித் தெளித்திருந்தார். அத்தனையும் தகுந்த ஆய்வு மற்றும் புள்ளி விவரங்களுடன் முன்வைக்கப்பட்டவை. அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங் முடிந்தவரை அதைப் பயன்படுத்தி மாற்றங்களை ஏற்படுத்தினார். உணவு பாதுகாப்பு மசோதா அவற்றில் முக்கியமானது!
- உலக அரங்கில் எம்.எஸ்.சுவாமிநாதன் நிறையமுறை கவுரவிக்கப்பட்டிருக்கிறார். 1971ம் ஆண்டு அவருக்கு ஆசியாவின் மரியாதைக்குரிய விருதான ‘மகசேசே’ விருது வழங்கப்பட்டது. 1987ம் ஆண்டு பெருமைமிகுந்த ’World Food Prize’ விருதும் அவரை சேர்ந்தது. அதை முதலில் வாங்கிய நபர் சுவாமிநாதன் தான். அடுத்து, ’20ம் நூற்றாண்டில் தாக்கம் செலுத்திய மிகமுக்கிய ஆசியர்’ என்று டைம் இதழ் சுவாமிநாதனை பாராட்டியது. 1989ம் ஆண்டு இந்திய அரசின் ‘பத்ம விபூஷண்’ விருதையும் பெற்றார், சுவாமிநாதன்.
- ‘Reach the unreached’… இது தான் பசுமைப்புரட்சியின் போது எம்.எஸ். சுவாமிநாதன் அடிக்கடி பயன்படுத்திய வார்த்தைகள்!