மகாவீரர்
- அன்பு, அஹிம்சை, தூய்மை ஆகிய மூன்று குணங்களை உலகெங்கும் பரப்ப, சமணம் அளித்த மகா உன்னதர், வர்த்தமான மகாவீரர்! வரலாற்று அடிப்படையில், புத்தரின் குரு!
- சமண மதத்தின் 24வது மற்றும் கடைசி தீர்த்தங்கரர், மகாவீரர்! அவருக்கு முன்னால் இருந்த 23வது தீர்த்தங்கரர் பர்ஷ்வனதாவின் வழித்தோன்றலாக எழுந்துவந்தார், மகாவீரர். ‘தீர்த்தங்கரர்’ என்றால் வழியமைப்பவர் என்று தமிழில் பொருள்.
- புத்தரை புத்தமதத்தோடு தொடர்புபடுத்துவதைப் போல, மகாவீரரை அதிகம் சமணமதத்தோடு தொடர்புபடுத்த முடிவதில்லை. ஏனென்றால், புத்தர் முதலாமவராக இருந்தார். ஆனால், மகாவீரர் ஒரு மரபின் தொடர்ச்சியாக உருவாகிவந்தார். இருந்தாலும், மகாவீரருக்குப் பிறகே சமணம் பேருருக் கொண்டு எழுந்து, இந்தியாவெங்கும் பரவியது. ஆகவே, சமணம் ஆற்றிய பங்களிப்பின் பெரும்பகுதியை மகாவீரருக்கு ஒதுக்குவதே முறை!
- மகாவீரர், சமணர்களுக்கு ஒரு கடவுள் ஸ்தானத்தில் இருப்பவர். ஆனால், எல்லா மதநெறியாளர்களுக்கும் வரலாற்றுப்பக்கம் என்று ஒன்று இருக்கும். அப்படி, மகாவீரருக்கும் உண்டு. கிமு 6ம் நூற்றாண்டுக்கும், 5ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், பீகாரின் கண்டல்பூர் என்ற இடத்தில் மகாவீரர் பிறந்தார். புத்தரைப் போலவே, மகாவீரரும் அரச குலத்தில் பிறந்தவரே. அவரது இக்ஷூவாகு குலம், ஒரு சிற்றரசு என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். சரியாக 30 வயது ஆகும்போது, மகாவீரருக்கு துறவுகொள்ளும் எண்ணம் உதிக்கிறது. பின், வீட்டைவிட்டு வெளியேறி 12 ஆண்டுகள் கடுந்தவம் புரிகிறார். 42வது வயதில் சமணமார்க்கத்தை பின்பற்றி, 30 வருடத்துக்கும் மேல் சமணநெறிகளை பரப்பி, 74வது வயதில் மறைகிறார், மகாவீரர்!
- மகாவீரர் செய்த புரட்சிகள் என்னென்ன? முதலில், அவர் வேதமதங்களை நிராகரிக்கும் ஒரு மார்க்கத்தை மக்கள்மயமாக மாற்றினார். மகாவீரருக்கு முன்னால்வரை, சமணம் ஒரு குறுங்குழுவாக மட்டுமே இயங்கிக்கொண்டிருந்தது. வன்முறை தவிர்ப்பு, கொல்லாமை, திருடாமை, பற்றற்று இருத்தல் போன்ற உயர்ந்த சமணநெறிகள், நிறைய மக்களுக்கு சென்று சேராமலே இருந்தன. ஆனால், மகாவீரர் வந்து அந்த நிலையை மாற்றினார். அவர், சமணத்தை அமைப்புரீதியாக வலுப்படுத்தினார். அவரது காலத்தில் சமணர்கள் இந்தியாவெங்கும் பயணம் செய்தார்கள். அவர்களின் வழியே, உயர்ந்த நெறிகள் கொண்ட ஒரு மார்க்கம், சாமானிய மக்களுக்கும் சாத்தியமானது. பின்னர், மகாவீரரின் வழிகளை சற்றே ’Customize’ செய்து, புத்தர் இன்னும் விரிவுபடுத்தினார்.
- மதங்கள் அடிப்படையில் முழுமையான அடிபணிதலை கோருவன. மக்களின் முன்னால் ஒரு கடவுளைக்காட்டி, ‘நீ எந்தக்கேள்விவும் கேட்கக்கூடாது. கடவுள் சொல்வார்… நீ பின்பற்ற வேண்டும்…’ என்று ஆணையிடுவன. அதாவது, அறிவை, சிந்திப்பதை எதிர்ப்பன. ஆனால், மகாவீரர் அறிவே ஆன்மீகத்துக்கு தலையாயது என்று உணர்த்தினார். அவரால் தான், சமணத்தில் அறிவுஜீவிகள் உருவாகும் ஒரு மரபு உண்டானது. திருக்குறள் கூட, அதன் தத்துவ தளத்தில் ஒரு சமணநூலே!
- கல்வி இல்லாமல் அறிவு இல்லை. எனவே, கல்வி கற்றலை ஒரு முக்கியக்கடமையாக முன்னிறுத்தினார், மகாவீரர். இப்போது நாம் கல்விச்சாலைகளை பள்ளிக்கூடம் என்று அழைக்கின்றோம் அல்லவா, அது அவர் உருவாக்கிய ‘பள்ளி’ என்ற அமைப்பில் இருந்து எழுந்த சொல்லே. மகாவீரரைப் பின்தொடர்ந்து, இந்தியாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் கல்விச்சாலைகளை உருவாக்கி, சமணர்கள் கல்விச்சேவை புரிந்தார்கள். தமிழகத்திலும் சிதறால் மலை, கழுகுமலை போன்ற இடங்களில் சமணர்களின் ‘பள்ளி’களுக்கான தடயங்கள் கிடைக்கின்றன.
- கல்விக்கு அடுத்ததாக, மகாவீரர் முக்கியமென கருதியது அன்னத்தை! ஒரு அருந்தவமென அவர் அன்னமிடுதலை உருவாக்கி வளர்த்தார். அந்தக் காலங்களில், இந்தியாவில் அன்னசாலைகளென இருந்தவை பெரும்பாலும் சமணர்கள் உருவாக்கிய அன்னசாலைகளே. இப்போதும், உங்களால் கர்நாடகம், குஜராத் போன்ற சமணம் செழித்திருக்கும் பகுதிகளுக்கு பயணச்செலவுக்கு மட்டும் பணம் எடுத்துக்கொண்டு செல்லமுடியும். ஏனென்றால், அன்னத்தை அங்கே சமணர்கள் அளிப்பார்கள்!
- அறம் பேணுதலை தனிக்கடமையாக மட்டுமல்லாமல், சமூகக்கடமையாகவும் முன்னிறுத்தினார், மகாவீரர்! அவரது வார்த்தைகளை பின்பற்றியே, இப்போதும் சமண முறைமைகளில் ‘அறக்கொடையளித்தல்’ முக்கிய வழக்கமாக நீடிக்கிறது. சமணக்குடும்பங்களில் மகனும் மகளும் மட்டுமே சொத்தை மொத்தமாக எடுத்துக்கொள்ளமாட்டார்கள். அதாவது, அதில் பெற்றோர்களுக்கும் ஒரு கட்டாயப்பங்கு உண்டு. அதை, அந்தப் பெற்றோர் அறக்கொடைக்கு பயன்படுத்துவார்கள்.
- ‘சமணமதத்தில் பெண் தீர்த்தங்கரர்கள் இல்லை. எனவே, பெண்களுக்கு உரிமைகள் அளிக்காத மதம், சமண மதம்’ என்று ஒரு விமர்சனம் உண்டு. ஆனால், இந்தியாவில் பெண்களை மையப்படுத்தி எழுந்த காப்பியங்கள் பெரும்பாலும், சமண மதத்திலேயே எழுந்தன. தமிழில், சிலப்பதிகாரமும் நீலகேசியும் அதற்கு சிறந்த உதாரணங்கள். அதே போல, சமூகக்கட்டமைப்பில் பெண்களின் பங்கை உறுதியாகவே நிலைநிறுத்துகிறது, சமணம். பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர என்று உருவான இந்திய சமூகநிலையை, ஷ்ரமனா (சாது), ஷ்ரமனி (சாத்வி), ஷ்ரவகா (சாதாரண ஆண்), ஷ்ரவிகா (சாதாரண பெண்) என்று மாற்ற முற்படுகிறார், மகாவீரர். ‘ஷ்ரமனா – ஷ்ரமனி’ என்பது சமணநெறியை முற்றிலும் ஏற்றுக்கொண்டு வரும் ஆண் மற்றும் பெண்ணை குறிப்பது. ‘ஷ்ரவகா -ஷ்ரவிகா’ என்றால், சாதாரண வாழ்க்கையை விட மனமில்லாமல், ஆனாலும் சமணமதத்தை பின்பற்றும் ஆண் மற்றும் பெண்ணை குறிப்பது.
- தமிழகம், மகாவீரரின் சமணம் அதிகமாக தாக்கம் செலுத்திய பூமி. திருமலை, கழுகுமலை, திரக்கோயில், சித்தன்னவாசல், சமணார் மலை, குறத்தி மலை, பஞ்சபாண்டவர் மலை, சீயாமங்கலம், காஞ்சியூர், எண்ணாயிர மலை, சோழபாண்டியபுரம், நெகனூர்பட்டி போன்ற பல இடங்களில் இன்றும் சமண வழிபாட்டுத்தலங்கள் இருக்கின்றன.
- சமணம் இப்போது சில பாரம்பரிய குடும்பங்கள் மற்றும் மதகுருக்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அதில் இருந்து மீண்டு, மக்களின் வாழ்க்கையுடன் இயைந்துபோகும் சில சமரசங்களுடன் சமணம் வெளிவந்தால், கண்டிப்பாக அது மானுட குலத்துக்கு பயனளிக்கக்கூடியதாக இருக்கும்.