leader-profile-image

ராமானுஜர்

  • சனாதன மதம் என்பது எளிய உயிர்கள் மேல் ஏற்றிவைக்கப்பட்ட கரும்பாறை போன்றது. கருணை எனும் ஆற்றல்கொண்டு அடிக்கும் பெருங்காற்றால் மட்டுமே அதைக் கொஞ்சமேனும் அசைத்துப் பார்க்கமுடியும். அப்படி, சனாதனத்தை அசைத்த கருணைப் பெருங்காற்று, மகான் ராமானுஜர்!
  • பதினொன்றாம் நூற்றாண்டில் ஶ்ரீபெரும்புதூரில் பிறந்தார், ராமானுஜர். இளம் வயது முதலே வைணவத்தில் ஆர்வம் கொண்டிருந்தாலும், அவரது வைணவம் முன்னோர்கள் வகுத்தளித்த இறுகிப்போன வைணவமாக இருக்கவில்லை. எல்லாத் தரப்பையும் அரவணைக்கும் ஒரு நெகிழ்ச்சியான வைணவத்தை அவர் உருவாக்கினார். ராமானுஜரின் பங்களிப்பாலேயே, ஶ்ரீரங்கம் அனைத்து தரப்பினரும் வந்து வழிபடும் வழிபாட்டுத்தலமாக மாறியது!
  • ராமானுஜரை பதிமூன்றாம் ஆழ்வார் என்பார்கள், ஆன்மீகப் பெரியவர்கள். ஆம், அவரது விசிஷ்டாத்வைதம் பெரும்பாலும் ஆழ்வார் பாடல்களை அடியொற்றியே உருவானது. முக்கியமாக, நம்மாழ்வார் பாடல்கள்!
  • விசிஷ்டாத்வைதம், ராமானுஜர் ஆன்மீக மரபுக்கு அளித்த ஒரு கொடை. ‘எல்லாமே பிரம்மம்’ என்பதே, சங்கரர் உருவாக்கியளித்த அத்வைத கோட்பாடு. அதன்படி, பூமி, பூமியில் உலவும் புழு, புழு படிந்திருக்கும் புழுதி என எல்லாமே பிரம்மம் வகுத்தளித்தவை. ஆனால், ராமனுஜர் எல்லாமே பிரம்மத்தாலானவை என்ற கோட்பாட்டை அடித்துடைத்தார். ஒளியென நிற்கும் பிரம்மம் வேறு, உயிரென உருவாகிய ஆன்மா வேறு, உயிர், ஒளி என அனைத்தையும் சுமக்கும் பிரபஞ்சம் வேறு என எடுத்துரைத்தார். அதாவது, சங்கரர் உருவாக்கிய ஒற்றைப்படையான அத்வைதத்தை, பன்மைத்துவம் கொண்ட விசிஷ்டாத்வைதமாக ராமானுஜர் மாற்றினார். உண்மையில், விசிஷ்டாத்வைதம் உருவாகியபின்னரே, சாதாரண மக்களும் பக்தி இயக்கத்தின் அங்கமாக மாறினார்கள். 
  • எல்லா ஆன்மிகப்பெரியவர்களையும் போல, ராமானுஜருக்கும் குருமரபு உண்டு. யாதவ பிரகாசர் அவரது முதல் குரு. ராமானுஜருக்கு வேதங்கள், உபநிடதங்கள் என அனைத்தையும் அறிமுகப்படுத்தியவர் யாதவ பிரகாசரே. ஆனால், ராமனுஜர் குருவை மிஞ்சிய சிஷ்யனாக வளர்ந்தார். வேதங்கள் குறித்தும் உபநிடங்கள் குறித்தும், யாதவ பிரகாசருக்கே தெரியாத கோணங்களை திறந்தார். கடைசியில், வேதாந்தத்திற்கு எதிராகவே போர் தொடுக்கத் தொடங்கினார், ராமானுஜர். யாதவ பிரகாசர் அதிர்ந்து, ’நீ அனைத்து விதிகளையும் உடைக்கிறாய். இது ஏற்புடையதல்ல…’ என்று கொதித்தார். ஆனால், ரமானுஜர் புதுமலரென புன்னகைத்து, ’இது ஏற்பு, இது ஏற்பல்ல என்று முடிவெடுப்பவர் எவர் குருவே….?’ என்று எதிர்க்கேள்வி கேட்டார்.  யாதவ பிரகாசர் பதில் சொல்லமுடியாமல் அமைதியானார். அடுத்த நாள், தானே தனக்கு குருவாகும் முடிவை எடுத்தார், ராமானுஜர்! அதற்குப் பிறகு, அவரைக் கட்டுப்படுத்த எந்த விதிக்கயிறும் எழவில்லை!
  • ராமானுஜரை இங்கே எல்லா தரப்புகளுமே கொண்டாடுகின்றன. ‘கடவுள் உண்டு’ என்று சொல்பவர்களுக்கு அவர் மகான், அவதாரம் மற்றும் இன்னுமொரு கடவுள்! அதே, ‘கடவுள் இல்லை’ என்று சொல்பவர்களுக்கு அவர் புரட்சியாளர், சீர்திருத்தவாதி!
  • தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஆலயப்பிரவேச உரிமையை வாங்கிக்கொடுத்ததில், ராமானுஜருக்கு முக்கியப் பங்குண்டு. ‘திருக்குலத்தார்’ என்ற அடைமொழியிட்டு அவர் தாழ்த்தப்பட்டவர்களை ஆலயத்திற்குள் அழைத்துச் சென்றார். திருக்குலத்தார் என்ற சொல் இன்று ஏற்கப்படுவதில்லை. ஆனால், ஒரு நிகழ்வை நாம் அந்த நிகழ்வு நடந்த காலச்சூழலின் பின்னணியில் வைத்து ஆராய்வதே முறை. அப்படிப்பார்க்கும் போது, ராமானுஜர் முன்னிறுத்திய ‘திருக்குலத்தார்’ எனும் சொல், அவரது காலத்தில் மிகவும் முற்போக்கானது!