கிருபானந்த வாரியார்
- வடமொழி கடவுள்களின் வழிபாடு அதிகமாக இருந்த தமிழகத்தில் தமிழ்க் கடவுள் முருகனின் வழிபாட்டை பெருக்கியவர். அவரது பார்வையில் பிறப்பும் இறப்பும் இல்லாதவனே இறைவன். “கிருஷ்ணனுக்கு ஜெயந்தி உண்டு. ராமனுக்கு நவமி உண்டு. ஆனால் சிவனுக்கோ முருகனுக்கோ ஜெயந்தியும் நவமியும் இல்லை. இவர்களே உண்மைக் கடவுள்” என்று சொன்னவர். `யாதவ கிருஷ்ணன் அல்ல. குறிஞ்சி நில தலைவனான முருகனே முதலில் புல்லாங்குழல் வாசித்தவன்’ என்ற அவரது கருத்தும் மிக முக்கியமானது.
- மிகச் சிறந்த சமய சொற்பொழிவாளர். வாரியார் வார்த்தைகளை வாளென சுழற்ற ஆரம்பித்தால் முருகனே மயிலேறி வந்து முதல் வரிசையில் அமர்ந்து கொள்வான். ஆன்மிகத்துடன் அன்றாடச் செய்திகளை கலந்து, நகைச்சுவையோடு பேசுவதிலும் வல்லவர் வாரியார்.
- குழந்தைகளுக்கு மிகப் பிடித்தவர். அவரது சொற்பொழிவு மேடையின் முதல் வரிசை எப்போதும் குழந்தைகளுக்காக ஒதுக்கப்பட்டது. `தாத்தா சொன்ன குட்டி கதைகள்’ என்று குழந்தைகளுக்காக புத்தகமும் கூட வெளியிட்டிருக்கிறார்.
- நல்ல பண்பாளர். நாத்திக இயக்கங்கள் அவரை வரம்பு மீறி விமர்சித்த போதும் சிறுபுன்னகையோடு அதை எதிர்கொண்டவர்.
- சமஸ்கிருதத்தை போற்றியவர்தான். ஆனாலும் தமிழை விட்டுக்கொடுத்தவரில்லை. இலக்கண அறிவில் தமிழ் அறிஞர்களுக்கு சவால் கொடுப்பவர். திருமணம் மற்றும் விழாக்களுக்கு, `வெண்பா’ எழுதி வாழ்த்து சொல்வதை ஒரு வழக்கமாகவே கொண்டிருந்தவர்.
- ஆன்மிகத்தை எளிய மக்களுக்கும் கொண்டு சேர்த்தவர். “இரை தேடுவதோடு இறையையும் தேடு” என்ற அவரது வரி எளிய மக்களிடம் மிகவும் பிரபலம்.
- அனைத்து மதங்களையும் சமமாக மதித்தவர். திருப்பரங்குன்றத்தை `சிக்கந்தர் மலை’ என்று பெயர் மாற்ற சொல்லி சில இஸ்லாமியர்கள் கேட்டபோது அதை மறுத்துப் பேசாதவர். “சிக்கந்தர் மலை என்று இருந்தாலென்ன… சிவகந்தன் மலையாக இருந்தாலென்ன… இரண்டும் ஒன்றுதான்” என்று சொன்னவர். “பசியெடுத்த பின் கையை வாயிற்குள் வைப்பவனும் பசி அடங்குவதற்கு முன் கையை வாயை விட்டு எடுத்துக்கொள்பவனும் நோய்வாய்ப்பட மாட்டான்” என்று ஒரு இஸ்லாமியர் அன்பர் சொன்னதை கடைசிவரை கடைபிடித்தார். அவரது சொற்பொழிவுகளிலும் அதை தவறாமல் குறிப்பிட்டு, பேசினார்.