leader-profile-image

பி.வி. நரசிம்ம ராவ்

  • சிரிக்காத பிரதமர், ஆனாலும் 100 கோடி இந்திய மக்களின் வாழ்வில் சிரிப்பை ஏற்படுத்திய பிரதமர், நரசிம்மராவ். 1991ல் நரசிம்மராவ் மட்டும் வரவில்லையென்றால், இன்று நாம் காணும் 5 சதவிகித பொருளாதார வளர்ச்சி கூட, இந்தியாவுக்கு கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே! ஏனென்றால், 1991ம் வருடம் தொடங்கும்போது, இந்தியாவின் ஜிடிபி 1.06 சதவிகிதம் மட்டுமே. அதே, 1996 நரசிம்மராவின் ஆட்சி முடியும் போது, இந்தியாவின் ஜிடிபி 7.55 சதவிகிதம்!
  • அரசியல் கலையில் வல்லவர், நரசிம்மராவ்! 1991ல் அவர் பிரதமர் ஆவார் என்று எவருமே எதிர்பார்க்கவில்லை. ராஜீவ் காந்தி கொலையுண்டபிறகு, ஷங்கர் தயாள் சர்மா அல்லது அர்ஜூன் சிங்கே காங்கிரஸ் கட்சியின் சாய்ஸாக இருந்தனர். நரசிம்மராவ் என்ற பெயர், நிறையபேரின் நினைவிலேயே இல்லை. தேர்தலிலும் அவர் பரப்புரை மேற்கொண்ட தொகுதிகளென்று எதுவும் இருக்கவில்லை. ஒரு தகவலின் படி, நரசிம்மராவ் டெல்லியில் உள்ள லுத்யான் இல்லத்தை காலி செய்து ஆந்திராவுக்கு செல்ல திட்டமிட்டுக் கொண்டிருந்திருக்கிறார். ஆனால், அரசியல் எதிர்பாராத திருப்பங்களால் வேயப்பட்ட வீடு. எனவே, அது நரசிம்மராவுக்கு வேறொரு விதியை சமைத்து வைத்திருந்தது. முதலில், ஷங்கர் தயாள் சர்மா விலக, அடுத்து, பிரதமர் பதவியின் மீது தீரா அசைகொண்ட அர்ஜூன் சிங்கும் விலகினார். சோனியா ஏற்கனவே பிரதமர் பதவி வேண்டாமென மறுத்திருந்தார். பிரணாப் முகர்ஜி அப்போது இளையவர். ஆகவே, நரசிம்மராவ் இயல்பாக பிரதமர் பதவிக்கு தகுதி கொண்டவராக மாறினார். 1991, ஜூன் 21ம் தேதி நரசிம்மராவின் பதவியேற்பு விழா நடந்தது. அதற்குப்பிறகு நடந்தவற்றையெல்லாம் கே.ஜி.எஃப்-க்கு நிகரான கதைக்களத்துடன் எவரேனும் திரைப்படமாக எடுக்கலாம்!
  • அழகான முகம் அல்ல, திடமான குரல் அல்ல, உறுதியான உடல் அல்ல, செயல்களே ஒரு அரசியல்வாதியை கவர்ச்சிகரமானவராக மாற்றுகிறது. அந்த வகையில் பார்த்தால், நரசிம்மராவ் இந்தியாவின் மிகச்சிறந்த கவர்ச்சிகரமான தலைவர்களில் ஒருவராக இடம்பிடிக்க தக்கவர். கடந்தகாலத்தில், ஒரு முதலமைச்சராகவும் சரி, மத்திய அமைச்சராகவும் சரி, அவர் வெற்றிகரமாக செயல்பட்டிருக்கவில்லை. ஆனால், ஒரு பிரதமராக இந்திய மக்களின் வாழ்வில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்த அவரால் முடிந்தது. இதற்கு, எல்லோராலும் ஏற்றுக்கொண்ட பிரதமராகவும் நரசிம்மராவ் இல்லை. வரலாற்றைப் பார்த்தால், எதிர்க்கட்சியினரை விட, சொந்தக்கட்சியினர் அவருக்கு அதிக தடைகளை ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஒரு கட்டத்தில், ‘என் கட்சியினரால் நான் பலிகடா ஆக்கப்படுகிறேன்…’ என்று கூட, நரசிம்மராவ் வெளிப்படையாக புலம்பியிருக்கிறார். எனினும், ஏதோவொரு இனம் தெரியா மனவுறுதியால், ஐந்தாண்டு ஆட்சிக்காலத்தையும் நிறைவு செய்து, அடுத்த தேர்தலையும் எதிர்கொண்டு அசத்தினார், நரசிம்மராவ்!
  • ‘இந்தியாவின் தலையெழுத்தை மாற்றியவர்’ என்று மன்மோகன் சிங்கை இப்போது எல்லோரும் பாராட்டுகிறோம். ஆனால், அந்த மன்மோகன் சிங்கின் தலையெழுத்தை மாற்றியவர், நரசிம்மராவ். 1991ல் மன்மோகன் சிங்கை நிதியமைச்சராக மாற்ற, காங்கிரஸூக்குள் கடும் எதிர்ப்பு. முக்கியமாக, பிரணாப் முகர்ஜியும் ஐஜி படேலும் நிதியமைச்சர் பதவிக்கு மோதினார்கள். பின்னர் படேல் விலகிக்கொண்டாலும், பிரணாப் முகர்ஜி அடம்பிடித்தார். ஆனால், நரசிம்மராவ் ‘நாடு இப்போது இருக்கும் நிலைமைக்கு மன்மோகனால் மட்டுமே எதையேனும் செய்யமுடியும்’ என்று கறாராகச் சொல்லி, மன்மோகனை நிதியமைச்சராக்கினார். அப்புறம், இந்திய பொருளாதாரத்தில் நடந்த மாற்றத்தை நாடு அறியும்!
  • மொத்தம் நான்கு பொருளாதார சீர்திருத்தங்களை நரசிம்மராவும் மன்மோகன் சிங்கும் இணைந்து செய்தார்கள்.  1. பணப்புழக்கம் அதிகரிப்பு, 2. வணிகக்கொள்கை சீர்திருத்தம், 3. தொழிற்கொள்கை சீர்திருத்தம், 4. பொதுத்துறை நிறுவனங்கள் சீர்திருத்தம். முதலில், பணப்புழக்கம் அதிகரிப்பு. இதில், பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும், CAD (Current Account Deficeit) -யின் மதிப்பை அதிகரிக்கவும், பட்ஜெட்டில் அதிகநிதி ஒதுக்கப்பட்டது. இரண்டாவது, வணிகக்கொள்கை சீர்திருத்தம். இங்கே, இந்தியாவின் ஏற்றுமதியை அதிகரிப்பதற்காக, ரூபாயின் மதிப்பு 20 சதவிகிதம் அளவுக்கு குறைக்கப்பட்டது. மூன்றாவது, தொழிற்கொள்கை சீர்திருத்தம். லைசன்ஸ் ராஜ் ஒழிக்கப்பட்டு, 18 துறைகளில் தொழில் தொடங்குவது எளிதாக்கப்பட்டது. நான்காவது, பொதுத்துறை நிறுவனங்கள் சீர்திருத்தம். இந்தியாவின் அத்தனை பொதுத்துறை நிறுவனங்களுக்கும் சுதந்திரமாக இயங்குவதற்கான வழிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டன. 
  • நான்கு சீர்திருத்தங்களில், தொழிற்கொள்கை சீர்திருத்தத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட உலகமயமாக்கமே, பின்னாளில் பெரும்புகழ் பெற்றது. ஆனால், அதை நிறைவேற்றுவது நரசிம்மராவுக்கு அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. காங்கிரஸ் சோசியலிஸ்டுகள், இடதுசாரிகள், வலதுசாரிகள் என ஒரு பெருங்குழுவே, நரசிம்மராவை பயங்கரமாக எதிர்த்தது. ஒருகட்டத்தில், அவரது அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானமும் கூட அவர்கள் கொண்டுவந்தார்கள். 500க்கும் அதிகமான உறுப்பினர்களை கொண்ட அந்த அவையில், அன்று நரசிம்மராவை ஆதரித்தவர்கள், ராஜஸ்தானைச் சேர்ந்த நாதுராம் மிர்தாவும், மணிசங்கர் ஐயரும் மட்டுமே! ஆனாலும், நரசிம்மராவ் எல்லா எதிர்ப்புகளையும் வென்றார். ஜெய்ராம் ரமேஷ் ஒருமுறை நரசிம்மராவை, ‘மீனின் கவர்ச்சி கொண்டவர்’ என்று சொன்னார். ஆம்! ராவ் மீன் தான். ஆனால், சுறாமீன். அந்த சுறாமீனுக்கு எந்த வலையில் எப்படி நுழைந்து வெளியேவர வேண்டும் என்பதெல்லாம் நன்றாகவே தெரிந்திருந்தது!
  • நரசிம்மராவின் மிகமுக்கிய சாதனை, வெளிநாட்டு வங்கிகளில் அடகுவைக்கப்பட்டிருந்த 47 டன் தங்கத்தை மீட்டு, இந்தியாவின் மானத்தை காத்தது! 1991 ஜனவரி வாக்கில், இந்தியாவால் எண்ணெய், உரம் என எதையுமே வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய முடியவில்லை. ஏனென்றால், சந்திரசேகரின் நிலையில்லா அரசால், கருவூலம் முழுவதும் திவாலாகியிருந்தது. இந்தியாவின் பெரிய வங்கியான SBI -யாலேயே அப்போது பணத்தை புரட்டமுடியவில்லை. ஆகவே, அப்போதைய ரிசர்வ் வங்கி ஆளுநர் வெங்கடராமன், நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, பிரதமர் சந்திரசேகர் மூவரும் இணைந்து, இந்தியாவின் கையிருப்பில் இருந்த 47 டன் தங்கத்தை சர்வதேச வங்கிகளில் அடகுவைக்க முடிவெடுத்தனர். இந்த நிகழ்வுகள் எல்லாமே, 1991 பிப்ரவரி – ஜூன் மாதங்களில் நடந்தது. 1991 ஜூன் மாதம் நரசிம்மராவ் அரசாங்கம் பதவியேற்ற ஒரு மாதம் கழித்து, இந்தியாவின் 47 டன் தங்கம் Bank of England மற்றும் Bank of Japan வங்கிகளுக்கு, அனுப்பிவைக்கப்பட்டது. அதை பிணைப்பொருளாக வைத்துக்கொண்டு, இரண்டு வங்கிகளும் இந்தியாவுக்கு 400 மில்லியன் டாலர்களை அளித்தன. இதைக்கொண்டே, அடுத்த பல மாதங்களுக்கு எண்ணெயையும் உரத்தையும் இந்தியா இறக்குமதி செய்தது. அப்புறம், அதே ஆண்டு டிசம்பர் மாதத்தில் அத்தனை தங்கத்தையும் மீட்டு ரிசர்வ் வங்கியில் சேர்த்தார், நரசிம்மராவ்!
  • நரசிம்மராவ் காலத்தில், இந்தியாவின் வெளியுறவுக்கொள்கை அசைக்கமுடியாததாக இருந்தது. ஒருவகையில், இந்தியாவுடனான அமெரிக்கா, ரஷ்யா, அரபு மற்றும் கிழக்காசிய நாடுகளின் நல்லுறவை அவரே ஆரம்பித்து வைத்தார் எனலாம். சீனாவுடனும் எல்லைப்பிரச்சனைகளை தீர்க்க அவர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதனால் தான், ‘வெளியுறவுக்கொள்கைக்கென்றே ஒரு பாரத ரத்னாவை நாம் நரசிம்மராவுக்கு கொடுக்கவேண்டும்’ என்று பின்னாளில், சசிதரூர் சொன்னார். வெளியுறவில் மட்டுமல்ல, உள்ளுறவிலும், அதாவது, எதிர்க்கட்சிகளின் மதிப்பைக் காப்பதிலும் நரசிம்மராவ் நன்றாகவே செயல்பட்டார். 1994ம் ஆண்டு ஜெனிவா மாநாட்டுக்கு நரசிம்மராவ் தேர்ந்தெடுத்து அனுப்பியது, வேறு எவரையும் அல்ல, எதிர்முகாமில் இருந்த வாஜ்பாயை!
  • இப்படிப்பட்ட நரசிம்மராவ், இன்று அதிகம் கொண்டாடப்படும் ஒரு தலைவராக இல்லை. காங்கிரஸ் கட்சி கூட அவரை அரிதாகவே நினைவுகூருகிறது. ஹைதராபாத்தில் இருக்கும் அவரது நினைவிடத்துக்கு, ஆண்டுதோறும் ஆந்திரா, தெலுங்கானா முதல்வர்கள் மட்டும் சென்று, ஒரு சம்பிரதாயமாக அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். ஆனால், இலக்கு தெரியா கன்னித்தீவில் இருந்து லைலாவை காத்து அழைத்துவந்த சிந்துபாத்துக்கான இடத்தை, இந்தியாவின் வருங்கால தலைமுறை நரசிம்மராவுக்கு அளிக்கும்! அது உறுதி!