leader-profile-image

மன்மோகன் சிங்

  • இந்தியாவின் Most Intellectual, Most Educated, Most Down to Earth பிரதமர் மன்மோகன் சிங். மொத்தம், 10 ஆண்டுகள் அவர் பதவியில் இருந்தார். அந்தப் பத்தாண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி இருமடங்கு முன்னால் சென்றது. 
  • மன்மோகன் சிங் அரசியல்வாதி அல்ல. அவரது வாழ்க்கை சாதாரண பேராசிரியராகவே தொடங்கியது. அப்புறம், அரசு அதிகாரி. பின்னர், ஒரு நல்ல நாளில் நரசிம்மராவின் பிரதான செயலாளர் வாசலில் வந்து நின்று, ‘சார்… உங்களை நிதியமைச்சரா பதவியேற்க கூப்பிடுறாங்க…’ என்று சொல்லும்வரை, அவருக்கும் அரசியலுக்கும் அமெரிக்கா – ஆஸ்திரேலியா தூரம்! பதவியேற்பு நாளிலும், ‘விடுங்க சார்… கிளம்பிடுறேன்…’ என்ற மனநிலையிலேயே இருக்கிறார், மன்மோகன். நரசிம்மராவ் அவருக்கே உரித்தான கடுமையான குரலில், ‘இப்ப பதவியேற்கிறாயா… இல்லை, புடிச்சு ஜெயிலில் போடவா…’ என்று மிரட்டிய பிறகு தான் பணிகிறார். அப்புறம், அரசியல் பதவி மன்மோகனுக்கு மிகப்பிடிக்கிறது. ‘வந்த வாய்ப்பை வைத்து மக்களுக்கு ஏதாவது செய்வோமே…’ என்று திடமாக களமிறங்குகிறார்!
  • நரசிம்மராவையும் மன்மோகன் சிங்கையும் ‘The hedgegog and The fox’ கதையில் வரும் நரியும் முள்ளம்பன்றியும் போன்றவர்கள் என்று ஜெய்ராம் ரமேஷ் சொல்வார். அதாவது, ‘நரிக்கு நிறைய விஷயம் தெரியும். ஆனால், முள்ளம்பன்றிக்கு ஒரு விஷயம் தெரியும், அதுவும் பெரிய விஷயமாக தெரியும்’ என்ற அர்த்தத்தில் அவர் சொன்னது அது. ஆம், உண்மை தான்! 1991 – 95 காலக்கட்டத்தில், நரசிம்மராவ் கட்சி நிர்வாகம், ஆட்சி நிர்வாகம் என மற்றவற்றை பார்த்துக்கொள்ள, மன்மோகன் பொருளாதார முன்னேற்றத்தில் மட்டும் முழுவதுமாக கவனம் செலுத்தினார். எனவே, உலகின் முதல் 10 இடங்களுக்குள் வரத்தகுதி கொண்ட மிகப்பெரிய பொருளாதார நிபுணனின் பங்களிப்பில், இந்தியா பேய்பாய்ச்சலை நிகழ்த்தியது. சும்மா சொல்லவில்லை. பதவியேற்ற 9 மாதங்களிலேயே, இந்தியாவின் நிதி போதாமையை 2 சதவிகிதம் அளவுக்கு குறைத்து அசத்தினார், மன்மோகன் சிங்!
  • 1947 ஆகஸ்ட் 15க்கு பிறகு, 1991 ஜூலை 24ம் தேதியை இந்திய வரலாற்றின் முக்கிய நாளாக சொல்லவேண்டும். ஏனென்றால், அந்த நாளில் தான் நிதியமைச்சராக முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார், நமது மன்மோகன் சிங். அப்போது இந்தியாவின் நிலைமை எப்படியிருந்தது? ஏறக்குறைய திவாலாகும் நிலை. எனவே, மன்மோகன் அவரது பட்ஜெட்டில் 99.99 சதவிகிதம் சீர்திருத்த அம்சங்களை மட்டுமே அறிவித்தார். முக்கியமாக தொழிற்கொள்கை! அதுவரை, அந்நிய நாட்டினருக்கு இந்தியாவின் சந்தையில் ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே உரிமை அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், மன்மோகன், ‘இனி எல்லோருக்கும் இந்தியா ஒரு சுதந்திரமான சந்தையாக இருக்கும்’ என்று அறிவித்தார். இது தான் பின்னாளில் மிகப்பெரிய அளவில் புகழ்பெற்ற ‘உலகமயமாக்கம்’ நடவடிக்கை!
  • ஒரு நிறுவனத்தின் மேலாளர் பதவியே நமக்குள் எத்தனை திமிரை கொண்டுவருகிறது?! ஆனால், அவ்வளவு பெரிய பிரதமர் பதவியில் அமர்ந்தும், பிள்ளை மனதுடன் இருந்தவர், மன்மோகன் சிங். ஒருமுறை, ‘நீங்கள் விபத்தாக பிரதமர் பதவிக்கு வந்தவர் அல்லவா… அதில் என்ன பெருமை இருக்கிறது’ என்று ஒரு இளம்நிருபர் அவரை நோக்கி கேள்விகேட்டார். ஆனால், மன்மோகன் அதிரவில்லை. ‘பிரதமர் பதவி மட்டுமல்ல, அதற்கு முன்னால் நிதியமைச்சர் பதவியும் கூட எனக்கு விபத்தாகவே வந்தது. ஆனால், அந்தப் பதவிகளால் நான் பெருமைப்படவில்லை. அந்தப்பதவியை வைத்து என்ன செய்தேன் என்பதிலேயே பெருமைப்படுகிறேன்’ என்று பதில்சொன்னார், மன்மோகன் சிங்!
  • ‘அமைதியானவனே உறுதியானவன். அவனை எந்த விமர்சனங்களுமே சலனப்படுத்தாது’ என்பதற்கு மன்மோகன் சிறந்த உதாரணம். அது 2013ம் ஆண்டு. நாடாளுமன்ற மக்களவையில், பிரதமர் இருக்கையில் மன்மோகன் அமர்ந்திருக்கிறார். அவரை நோக்கி, ‘துமே மஃபா யாதுநஹி… ஹமே ஜஃபா யாதுநஹி… ’ என்ற வார்த்தைகளை வீசுகிறார் சுஷ்மா சுவராஜ். அதாவது, ‘எங்களுக்கு மக்களிடம் அநீதியாக இருக்கத் தெரியாது… உங்களுக்கு மக்களிடம் விசுவாசமாக இருக்கத் தெரியாது…’ என்று தாக்குகிறார். அவர் பின்னால், மொத்த எதிர்க்கட்சி கூடாரமே அதற்கு நகைக்கிறது. ஆனால், மன்மோகன் சிறிய புன்னகையுடன் கண்சிமிட்டி திரும்புகிறார். ‘என் விசுவாசத்தையும் மக்கள் அறிவார்கள்… உங்கள் நீதி மனப்பான்மை பற்றியும் மக்கள் அறிவார்கள்…’ என்ற தீர்க்கம் அந்த திரும்பலில் இருந்தது!
  • பொருளாதாரம் குறித்த மன்மோகனின் கருத்துகள் எல்லாமே, எளிய மக்களின் மீதான கரிசனத்தில் இருந்தே எழுந்தன. அவர் சந்தைப்பொருளாதாரத்தை அறிமுகப்படுத்தியவர் தான். ஆனால், அதையே சர்வரோகநிவாரணியாக முன்னிறுத்தவில்லை. 2004ம் ஆண்டு கொடுத்த ஒரு பேட்டியில் அவர் சொன்னார், ‘சந்தையே எல்லாவற்றையும் பார்த்துக்கொள்ளும் என்று நீங்கள் நினைத்தால், இங்கே இரண்டு இந்தியாக்கள் உருவாகும். அதில், சிறிய தீவைப்போன்று இருக்கும் இந்தியா வேகமாக வளரும். அதே நேரம், பிரம்மாண்டமாக இருக்கும் இன்னொரு இந்தியா மிகவும் மெதுவாக வளரும். ஆகவே, சந்தையே எல்லாமும் அல்ல’! அந்த ‘சிறியதீவு’ என்ற வார்த்தை, ‘சில பணக்காரர்கள்’ என்ற அர்த்தத்தில் மன்மோகன் பயன்படுத்தியது. ஆம்! எல்லா சூழலிலும், அவர் பணக்காரர்களால் Influence செய்யப்படாத இரும்புமனிதராகவே இருந்தார், இருக்கிறார்!
  • பொதுவாக, ‘நாங்கள் வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம்…’ என்று அரசியல் கட்சிகள் பேசுவதை பார்த்திருப்பீர்கள். ஆனால், அரசோ, அரசியல் கட்சிகளோ வேலைகளை உருவாக்கிடமுடியாது. அதற்கு, தொழில்முனைவர்கள் மனது வைக்கவேண்டும். இதை நன்குபுரிந்த பிரதமராக மன்மோகன் இருந்தார். ‘Entrepreneurship, Venture Capital போன்றவையெல்லாம் அரசுக்கு வெளியே இருக்கும் முக்கிய கட்டமைப்புகள். அவை நன்றாக இயங்குவதற்கான சூழலை மட்டுமே அரசு உருவாக்கமுடியும். ஆனால், அவற்றை அரசே எடுத்து நடத்தமுடியாது…’ என்று அறிவித்தார், அவர்! மன்மோகனின் காலத்தில் தான் இந்தியாவில் மிகப்பெரிய தொழில்முனைவுப்புரட்சி உண்டானது என்பது, மறுக்கமுடியாத ஒரு உண்மை!
  • மன்மோகனை எல்லோரும் பொருளாதாரத்தோடு மட்டுமே தொடர்புபடுத்துகிறார்கள். ஆனால், அவருக்கு ‘சமூகப்பார்வை’ என்ற இன்னொரு பக்கமும் இருக்கிறது. ஒரு நிகழ்வில், ‘இட ஒதுக்கீடு எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. அதை ஏன் குறைக்கக்கூடாது அல்லது நீக்கக்கூடாது…’ என்ற கேள்வி அவரை நோக்கி கேட்கப்பட்டது. ஆனால், மன்மோகன் நிதானமாக, ‘முதலில் நீங்கள் தாழ்த்தப்பட்ட மக்கள், பழங்குடி மக்கள் மற்றும் சிறுபான்மை மக்களை புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் பல நூற்றாண்டுகளாக சமூகத்தில் அங்கீகரிக்கப்படாமலேயே இருந்திருக்கிறார்கள். அந்த அங்கீகரிக்கும் வேலையைத்தான் நாம் இப்போது செய்துகொண்டிருக்கிறோம். இது தொடரும்…’ என்று அறிவித்தார். அந்த உரையில், அவர் பயன்படுத்திய ‘Persistent Discrimination, Historic Inequality’ போன்ற வார்த்தைகள், இந்தியாவின் நிறைய பிரதமர்கள் சொல்லத் துணியாத வார்த்தைகள்!
  • மன்மோகன் சிங் முடிந்தவரை மனசாட்சிக்கு நேர்மையாக இருக்கவேண்டும் என்று நினைப்பவர். 1991ல் அவர் மேலவை உறுப்பினர் பதவியை வைத்தே நிதியமைச்சராக இருந்தார். அப்புறம், மனசாட்சி உறுத்த, 1999ம் ஆண்டு மக்களை சந்திக்கும் முடிவை எடுத்தார். அதில் அவர் தோற்றார். ஆனாலும், ‘மக்கள் எனக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதை அறிந்துகொண்டேன்’ என்று வெளிப்படையாக தெரிவித்தார், மன்மோகன் சிங். அதே நேரத்தில் தான், ‘நீங்கள் இதற்கு முன்னால் அரசியலுக்கு அப்பாற்பட்டவராக இருந்தீர்கள். ஆனால், இப்போது அரசியல்வாதியாகி அவமானப்பட்டு விட்டீர்கள்…’ என்று அவரை விமர்சித்தார்கள், பலர். எனினும், மன்மோகன் தெளிவாக இருந்தார். ‘ஆமாம். நான் அரசியல்வாதி தான். அறிவாளி, பொருளாதார நிபுணன் என்பதற்காக நான் எந்த சிறப்புச்சலுகைகளையும் எதிர்பார்க்கவில்லை…’ என்று சொன்னார், அவர்!
  • மக்களை முட்டாளாக்க கூடாது என்பதிலும் நம்பிக்கை கொண்டவர், மன்மோகன் சிங். அவருக்கு பிடித்த மேற்கோளே, ‘நீங்கள் சிலபேரை எல்லாநேரமும் ஏமாற்றலாம். எல்லோரையும் சில நேரம் ஏமாற்றலாம். ஆனால், எல்லோரையும் எல்லா நேரமும் ஏமாற்றமுடியாது…’ என்ற லிங்கனின் மேற்கோள் தான். எனவே, ‘எந்த அரசியல்வாதியும் அவன் மக்களுக்கு சொன்னவற்றில், சிலவற்றையேனும் நிறைவேற்றியே தீரவேண்டும’ என்பார், மன்மோகன் சிங். இந்திய சுதந்திர வரலாற்றில் முக்கியமான பத்துசட்டங்களை பட்டியலிட்டால், அதில் அடங்கக்கூடியவை, தகவல் அறியும் உரிமைச்சட்டம், அனைவருக்கும் கல்வி உரிமைச்சட்டம் மற்றும் நிர்பயா சட்டம் ஆகியவை. இவை அனைத்தும் மன்மோகன் கொண்ட தீர்க்கத்தாலேயே சட்டாமாகின.
  • கடைசியாக, மன்மோகனின் முக்கியப்பகுதியை திறந்தாக வேண்டும். ஆம்! காந்தியத்துக்கு மிக மதிப்பளிப்பவர், மன்மோகன் சிங். பிரதமராக இருந்த போதும் சரி, இல்லாத போதும் சரி, அவரிடம் ‘இன்றைய இளைஞர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்’ என்று கேட்டால், ‘Follow the Gandhian Values…’ என்றே பதில் சொல்வார், மன்மோகன்! அவரது புகழ்பெற்ற, ‘ஊடகங்கள் என்னை விமர்சனத்துக்குரியவனாக சித்தரிக்கலாம். ஆனால், வரலாறு என்மேல் கருணை காட்டும்…’ என்ற வரிகள், ஒரு காந்தியவாதியின் சமநிலையுடன் வெளிப்பட்டவையே!