Thanks for contacting us! We will be in touch with you shortly
ஜெயகாந்தன்
தமிழ் இலக்கியத்தில் நிரந்தரமாக தனக்கென தனி சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் நட்சத்திர எழுத்தாளர் ஜெயகாந்தன்.
சிறுகதைகள், நாவல்கள், திரைப்படம் என அவர் கால்பதித்தவை எல்லாம் தமிழர்களை அசரடித்தன. சமூகத்தின் அழுக்குகளை தனது பேனாவால் சுரண்டியெடுத்த பெரும் படைப்பாளி. தமிழ் மொழியின் வீச்சை பல படிகள் முன்னால் நகர்த்தியவர். நட்சத்திர அடையாளத்துடன் கம்பீரமாக வாழ்ந்தவர். எழுதுவதற்கான நேரம் தவிர்த்து, பெரும்பாலும் நண்பர்கள் புடைசூழ இருந்த முடிசூடா மன்னன். அவரின் எழுத்தால் எழுச்சிப் பெற்றிருந்த வாசகர்கள், அவர் பேச்சைக் கேட்கவும் முண்டியடித்துக்கொண்டு திரண்டது வரலாறு.
தன்னை தேடி பண்ணைபுரத்திலிருந்து புறப்பட்டு வந்த ஓர் இளைஞனை, “நீ என்னை நம்பி அல்ல. உன்னை நம்பியல்லவா வந்திருக்க வேண்டும்” என சொல்லி, அவன் வாழ்க்கையை புரட்டிப்போட்ட பேனாக்காரர். அந்த இளைஞனே பின்னாளில் இசைஞானியாய் உருவெடுத்த இளையராஜா. நட்புக்கு இலக்கணமாய் ஜெயகாந்தன் வாழும்போதே அவர் குறித்த ஆவணப்படத்தை தயாரித்தார் இளையராஜா.
இடதுசாரி இயக்கங்களின் மீது மாறா பற்றுக்கொண்டிருந்த ஜெயகாந்தன், தோழர் ஜீவாவிடம் மிகுந்த அன்பு கொண்டிருந்தார். அவரிடம் கற்ற பாலபாடத்தால் விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கையைய ரத்தமும் சதையுமாக எழுத்தில் வார்த்தெடுத்தவர் ஜெயகாந்தன்.
வாழும் போதும் வாழ்க்கைப் பிறகும் தமிழ்ச் சமூகம் கொண்டாடிக்கொண்டிருக்கும் முன்னத்தி ஏர் ஜெ.கே.