Thanks for contacting us! We will be in touch with you shortly
சுஜாதா
நவீன தமிழ் இலக்கியத்தில் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், திரைப்பட வசனங்கள் என எழுதிக் குவித்த மல்டிமீடியா ஆளுமை சுஜாதா.
பேப்பரில் மாங்கு மாங்குவென எழுதிக்கொண்டிருந்த தமிழ் எழுத்தாளர்களை கணினிக்கு மடை மாற்றியவர். கணினி அறிவியலில் இருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட சொற்களுக்கு தமிழ் அகராதி தந்த பெருந்தகையாளர்.
ஆனந்த விகடனில் நவீன இலக்கியத்தையும் கணையாழியில் சங்க இலக்கியத்தையும் ஒரே நேரத்தில் பிரித்து மேய்ந்த படைப்பாளி.
ஆங்கிலத்தில் கோலோச்சிக் கொண்டிருந்த அறிவியல் தொழில்நுட்பத்தை எளிய தமிழில் எல்லோருக்கும் புரியும்படியாய் எழுதிய இளம் விஞ்ஞானி. வாக்கு இயந்திரம் கண்டுபிடித்த தொலைநோக்காளர்.
தன் சுவாரஸ்யமான எழுத்து நடையால் வாசகனை கட்டிப்போட்ட டெக்கி ப்ரோ. எதை எழுதினாலும் அதில் அவரது நச்சென்று ஒரு டச் இருக்கும். பெரும்பாலான வாசகர்களை ஈர்த்த இதுவே இன்றும் `சுஜாதா டச்’ என்று பெரும்பாலான வாசகர்களால் கொண்டாடப்படுகிறது.
தான் உருவாக்கிய கணேஷ் – வசந்த் என்ற இரு பாத்திரப் பெயர்களை தமிழ் வாசக மனங்களில் நீக்கமற நிறுத்திய எழுத்து வேட்கை சுஜாதா. கடைசி வரை புதியவர்களின் வருகையை கொண்டாடி, அடையாளப்படுத்திய அரும் படைப்பாளி.