leader-profile-image

அண்ணா

  • சொல்லாலும், சிந்தனையாலும், செயலாலும் தமிழகத்துக்கு அழியாக் காவல் அமைத்த தலைமகன், அறிஞர் அண்ணாதுரை! அவரின் பெயரைச் சொல்லாமல் இன்னும் ஐநூறு வருடங்களுக்கு இங்கே யாரும் அரசியல் பேசவும் முடியாது, தேர்தல்களில் வென்று ஆட்சி செலுத்தவும் முடியாது!
  • அண்ணாவுக்கு நிறைய பெருமைகள் உண்டு. அதில் முதன்மையானது, உலகிலேயே முதல் பகுத்தறிவு அரசாங்கத்தை அவர் அமைத்தார் என்பது! ‘கம்யூனிஸ்ட்கள் அமைக்கவில்லையா’ என்று கேட்கலாம். இல்லை, கம்யூனிஸ்ட்கள் கடவுள் மறுப்பு, மூடநம்பிக்கை எதிர்ப்பு போன்றவற்றை ஒரு துணைக்கொள்கையாகவே கொண்டிருந்தார்கள். ஆனால், அண்ணாவின் அரசில் அது இரண்டு தான் பிரதானம். அதனால் தான், ‘சேர, சோழ, பாண்டியர்கள், நாயக்கர்கள் என எத்தனையோ பேர் ஆண்டிருக்கிறார்கள். ஆனால், கடவுள் வேண்டாம், மதம் வேண்டாம், சாதி வேண்டாம், சாத்திரம் வேண்டாம் என, ஒரு பகுத்தறிவு அரசாங்கத்தை அமைக்க எவனால் முடிந்தது? புத்தனே அதில் முயன்று தோற்றான். அண்ணா ஒருவனே சாதித்தான்’ என்று வாழ்த்தினார், பெரியார். ஆட்சிக்கு வந்தபிறகு அண்ணா பகுத்தறிவு கொள்கையில் சமரசம் செய்துகொண்டதாக ஒரு புகார் உண்டு. ஆனால், ஆட்சிக்கு வந்து நான்கு மாதங்கள் கழித்து, அண்ணாமலை பல்கலையில் நடந்த விழாவில், ‘அறிவியலோடு இணைந்து வாழ வழிவகுக்காத மூடநம்பிக்கைகளுக்கு எதிராக நீங்கள் கடுமையான போர் தொடுக்க வேண்டும் மாணவர்களே…’ என்று உறுதியாக பேசினார், அண்ணா!
  • அண்ணா பெரியாருடன் ஒரு கட்டத்தில் முரண்பட்டார் தான். ஆனால், பெரியாரை என்றுமே அவர் ‘ஆசான்’ எனும் இடத்தை விட்டு இறக்கியதில்லை. அவர் ஆரம்பித்த கழகத்தில், தலைவர் பதவியை ‘எம் பெரியார் வந்து நிரப்புவார்’ என்று அறிவித்தார், அண்ணா. திராவிடர் கழகத்தையும், திராவிட முன்னேற்றக் கழகத்தையும் ‘இரட்டைக்குழல் துப்பாக்கிகள்’ என்றே அவர் அழைத்தார். அண்ணா முதலமைச்சரானதும், சுயமரியாதை திருமணச் சட்டம், இருமொழிக்கொள்கை மற்றும் தமிழ்நாடு பெயர் சூட்டல் ஆகிய மூன்று முக்கிய காரியங்களை ஆற்றினார். இந்த மூன்றுமே முன்பு பெரியார் மிகத்தீவிரமாக தமிழ்மண்ணில் பிரச்சாரம் செய்தவை! 1957 நவம்பரில், அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை எரித்து போராட்டம் பண்ணுகிறார், பெரியார். உடனே, ‘இது தேசவிரோதம்’ என்று அவர் மீது மூன்றாண்டுகள் சிறைதண்டனை விதிக்கும் அளவுக்கு ஒரு சட்டத்தை தமிழக சட்டமன்றத்தில் இயற்றுகிறது, காங்கிரஸ் அரசாங்கம். அப்போது அண்ணா அவையில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறார். அவர் என்ன சொல்வார் என்று அங்கே எல்லோருக்கும் செம எதிர்பார்ப்பு. ஏனென்றால், அதற்கு சில மாதங்களுக்கு முன்னால் தான், அண்ணாவை ‘மண்ணைக் கவ்விய கண்ணீர்த்துளி…’ என்று விமர்சித்திருந்தார், பெரியார். ஆனால், ‘இதுவரை 10 முறை அரசியல் சட்டத்தை திருத்தியிருக்கிறீர்கள். அதாவது, நாகரிகமாக கொளுத்தியிருக்கிறீர்கள். நீங்கள் நாகரிகமாக கொளுத்தலாம், பெரியார் வெளிப்படையாக கொளுத்தக்கூடாதா…’ என்று பெரியாருக்கு காவலாக நிற்கிறார், அண்ணா!
  • அண்ணாவின் பகுத்தறிவு பெரியாரிடம் இருந்து வந்தது. ஆனால், பெரியார் தீவிரமாக (Extreme) பேசியதை அண்ணா அழகாக சீர்திருத்தி (Customize) தமிழக மக்கள் மத்தியில் கொண்டுசென்றார். பெரியார், ‘யோகம், யாகம் என வேதக்காரன் நம்மை ஏமாத்துறான்…’ என்று தடாலடியாக சொன்னார். ஆனால், அண்ணா, ‘நாம் யாருக்கும் மேலில்லை, அதே போல, நமக்கு மேலும் யாரும் இல்லை. இங்கே சேரிகள் வேண்டாம். அக்ரஹாரங்கள் வேண்டாம். யோக, யாக புரட்டுகள், புரோகித பித்தலாட்டங்கள், மனுக்கொடுமை என எதுவுமே வேண்டாம்…’ என்று எழுதினார். பெரியார், ‘கடவுளை படைச்சவன் முட்டாள்…’ என்றார். ஆனால், அண்ணா, ‘நமக்கு நாற்பத்தெட்டு கண்கள் கொண்ட கடவுள்கள் வேண்டாம். ஒரே ஆண்டவன் போதும். உருவமற்ற தேவன். உணவு  வேண்டாத சாமி. ஊரார் காசை கரியாக்கும் உற்சவம் கேட்காத சாமி. இதுவே நமது தேவை’ என்று சொன்னார். அப்படிப்பட்ட சாமியும், மக்களிடமிருந்து எந்த உதவியும் வாங்காமல், தியானத்தை மட்டுமே பெற்றுக்கொண்டு அருள்பாலிக்க வேண்டும் என்று வாதிட்டார், அண்ணா!
  • ‘புராண நூல்களால் மக்களுக்கு என்ன பயன்’ என்று அறிவுப்பூர்வமாக கேட்டார், அண்ணா. அதாவது, ‘ராபர்ட் கிளைவ் துப்பாக்கியுடன் வந்து நாட்டைப்பிடித்தானே தவிர, தாமரை குளத்தருகே தனி இடம் அமைத்து தவம் செய்து அல்ல. சரஸ்வதி பூஜை உள்ள நாட்டிலே 100க்கு 90 பேர் தற்குறிகள்; லட்சுமி பூஜை உள்ள நாட்டிலே தரித்திரம் தலைவிரிக்கோலம்; சக்தி பூஜை செய்யும் நாட்டிலே சக்கைகள் என்று மனிதப் பிண்டங்கள் வாழ்வு; இவைகள் எதுவும் இல்லாத நாட்டிலே மக்கள் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். உங்களுக்கும் அப்படியொரு வாழ்வு வேண்டாமா…’ என்று வினவினார், அண்ணா. ஒருமுறை புராணமாயையை பற்றி ஒரு கட்டுரை எழுதுகிறார், அண்ணா. அதில், ‘நமது பூகோள அறிவு பதினான்கு உலகங்களை காட்டியது; நமது சரித்திர அறிவு பதினான்காயிரம் ஆண்டு ஒரு மன்னன் ஆண்டதாக கூறிவைத்தது; நமது பெண் உரிமையைப் பற்றிய அறிவு, காமக்கிழத்தி வீட்டுக்கு நாயகனை கூடையில் வைத்து தூக்கிச்சென்ற பத்தினியைப் பற்றி அறிவித்தது; நமது அறிவியல் அறிவு, நெருப்பிலே ஆறும் அதன்மீது ரோமத்தால் பாலமும் இருப்பதாக தெரிவித்தது’ என்று குறிப்பிடுகிறார். இதைப்படிக்கும் எப்படிப்பட்ட புராணபித்தனும் சற்றே உள்ளம் திறந்து சிந்திப்பான் அல்லவா!
  • இந்தியாவுக்கான கூட்டாட்சிக் கோட்பாட்டை உருவாக்கியதில், மிகப்பெரிய முன்னோடி அண்ணா. ‘உடைமையை எடுப்பது மட்டுமல்ல, உரிமையை எடுப்பதும் திருட்டு தான். ஆகவே, மாநில அரசும் ஒன்றிய அரசும் ஒன்றுபட்டு செயலாற்ற வேண்டும். நன்றாக கவனியுங்கள். ஒன்று பட்டுத்தான் செயலாற்ற வேண்டுமே ஒழிய, ஒன்றாக்கப்பட்டு அல்ல’ என்றார், அவர்! அவரது புகழ்பெற்ற ‘I belong to dravidian stock…’ நாடாளுமன்ற உரையில், ‘நான் ஒரு தேசியக் கொள்கைக்காக வாதாடுகிறேன். குறுகிய மனப்பான்மைக்காக அல்ல. கட்சிக்கொள்கைக்காக அல்ல. என்னுடைய பெருமைக்குரிய நாட்டிற்கு சுயநிர்ணய உரிமை கேட்கிறேன். அதன்மூலம், அந்நாடு உலகத்துக்கு தன் பங்களிப்பை செலுத்த விரும்புகிறது. அரசியல் சட்டத்தில் தரப்பட்டுள்ள அதிகார வரம்பும் வகையும் மாற்றியமைக்கப்பட்டால் மட்டுமே அது சாத்தியம்…’ என்று கேட்டார், அண்ணா! ‘இந்தியா மாநிலங்களால் ஆளப்படுகிறதே தவிர, மத்திய அரசால் அல்ல. மக்களின் சுகதுக்கங்களோடு மாநில அரசே பின்னிப்பிணைந்திருக்கிறது…’ என்ற, அண்ணாவின் வாதத்தை இதுவரை எந்த தேசியவாதிகளாலுமே முறியடிக்க முடியவில்லை!
  • அண்ணா கத்திமேல் நடந்தவர். அவரது திராவிட முன்னேற்றக்கழகம் ஒருவகையான இன அடிப்படைவாதத்தை முன்கொண்டு எழுந்தது. ஆனால், அது ஹிட்லரின் நாஜிக்கட்சியாக உருவாகாமல் தடுத்தது, அண்ணாவின் ஜனநாயகப் பண்பு. திராவிட முன்னேற்றக் கழகத்தின் எல்லா தளத்திலும், ‘கடமை, கண்ணியம், கட்டுப்பாடு’ என்ற கொள்கையை ஒழுக்கக் கோட்பாடாக முன்னிறுத்தினார் அண்ணா. ‘நாம் எதிர்த்தரப்பின் கொள்கைகளை தான் ஒழிக்க முற்படுகிறோமே தவிர, எதிர்த்தரப்பின் மனிதர்களை அல்ல’ என்று சொன்னார், அண்ணா. அவரைப் பொறுத்தவரை, ஜனநாயகம் என்பது வேறு எதுவுமல்ல, கருணை மட்டுமே! காங்கிரஸ் மீது கூட அண்ணா அன்பாகவே விமர்சனங்களை வைத்தார். ஒரு உதாரணம்… 1967ல் சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார், அண்ணா. ‘காங்கிரஸ் அரசு விட்டுச்சென்ற மிகச்சொற்ப பணத்தில் இருந்து இதை தயாரிக்க வேண்டியிருந்ததை எண்ணியே, நான் அதிகம் வருந்துகிறேன்…’ என்று பேசுகிறார். அதற்கு காங்கிரஸ் தரப்பில் ஒரு உறுப்பினர் எழுந்து, ‘நாங்கம் மாநிலத்தில் ஆட்சியை இழந்திருக்கலாம். ஆனால், மத்தியில் நாங்கள் தான் ஆள்கிறோம் என்பதை மறக்க வேண்டாம்’ என்கிறார். உடனே, அண்ணா, ’இதென்ன, ‘நான் வேண்டுமானால் பில் கலெக்டராக இருக்கலாம், ஆனால் என் அண்ணன் சப் கலெக்டராக இருக்கிறார்’ என்பதைப் போல, விசித்திரமாக பேசுகிறார் எதிர்க்கட்சி உறுப்பினர்…’ என்கிறார்! அன்று, மொத்த காங்கிரஸ் குழாமே பகைமறந்து உரக்க சிரித்ததாக கூறுகிறது, அவைக்குறிப்பு!
  • அண்ணாவின் அறிவுச்செறிவு, நிறையமுறை அவருடைய தியாகத்தை பின்னுக்கு தள்ளிவிடும். ஆனால், தமிழகத்தின் மாபெரும் தியாக உள்ளம் படைத்தவர், அண்ணா. அவர் சொத்து சேர்க்கவில்லை. சுகவாழ்வு வாழவில்லை. நிறைய நாட்களில் நடுநிசியில் வீட்டுக்கு வந்து புகாரி ஹோட்டலின் காய்ந்துபோன பரோட்டாவை உண்டுவிட்டுத்தான் அண்ணா உறங்கியிருக்கிறார். சீவாத தலை, சீவல் போட்ட வாய் என, எப்போதும் தமிழகத்தின் சாதாரண குடியான மனிதனைத் தான் அவர் பிரதிபலித்தார். தி.மு. கழகத்தையும் அவர் தியாகம் கொண்ட ஒரு இயக்கமாகவே கட்டமைத்தார். ‘பணத்தால் இயங்கவேண்டிய நிலையில் உள்ள இயக்கம், பணக்காரர்களின் இயக்கமாகி விடும். அங்கே, தியாகமும் தொண்டுணர்வும் பின்னுக்குத் தள்ளப்படும். எனவே, பணத்தைப் பின்னிறுத்தி தியாகத்தை முன்னிறுத்துக…’ என்று கழகத்துக்காரர்களை நோக்கி, அண்ணா சொன்னார்!
  • தமிழகத்தின் திசையை, தன்மையை மாற்றிய நிகழ்வு ‘இந்தி எதிர்ப்பு போராட்டம்’! அதை அண்ணா இருபது ஆண்டுகளாக கருத்துவெளியில் விரித்தெடுத்து, செயல்வெளிக்கு கொண்டுவந்தார்.  ஆரம்பத்தில் அவர் இந்தித்திணிப்பை தமிழர்களின் தன்மானப் பிரச்சனையாக காட்டினார்… ‘அறிவு எங்கிருந்து வந்தாலும் தமிழன் ஏற்றுக்கொள்வான். ஆனால், இடம் உயர்ந்தது என்பதாலேயே அதை அறிவுடையது என்று தமிழன் என்றும் கருதமாட்டான்’! அடுத்து, இந்தித்திணிப்பு நடவடிக்கையின் ஆபத்தை தர்க்கப்பூர்வமாக மத்திய அரசுக்கு எடுத்துரைத்தார்… ‘இந்தியின் மூலம் ஒற்றுமையைக் குலைத்த இந்தியாவைத்தான் பெறமுடியும். இந்தியா ஒற்றுமையாக இருக்க வேண்டுமானால், ஒரு வட்டாரம் இன்னொரு வட்டாரத்தை அடக்குகிறது என்ற நிலை ஏற்படாமல் இருக்கவேண்டும்’. பிறகு, வரலாற்றுப்பூர்வமாக அரசு கடந்த நடுநிலையாளர்களுக்கு இந்தித்திணிப்பு குறித்து பாடம் எடுத்தார்… ‘இந்தியா ஒரு தேசமல்ல. இது பல்வேறு இனக்குழுக்களின் கூட்டு. இங்கே, ஒவ்வொரு இனக்குழுவுக்கும் தனித்த மொழிகள் இருக்கின்றன. அதனால் தான், இதை துணைக்கண்டம் என்கிறார்கள். நீங்கள் சொல்லும் ஒரு அதிகாரப்பூர்வ மொழி என்ற கருத்தாக்கம், ஒரு நாட்டுக்கு வேண்டுமானால் சரிப்பட்டு வரும். ஆனால், துணைக் கண்டத்துக்கு சரிப்பட்டு வராது’. கடைசியாக, இந்தித்திணிப்பால் மாநிலங்களுக்கு ஏற்படும் பொருளாதாரப் பின்னடைவை ஆயுதமாக்கி மொத்தமாக தாக்கினார்… ‘இந்தி பேசும் மக்களுக்கு தான் எத்தனை நன்மைகள்? அவர்களுக்கு அது தாய்மொழி, அவர்கள் மாநிலத்திலும் அது அலுவல் மொழி, அப்புறம் இப்போது ஒன்றியமொழியாகவும் வடிவமெடுக்கிறது. இத்தனை நன்மைகள் அவர்களுக்கு எனும்போது, எங்களுக்கு இதில் என்ன நன்மை?’! இத்தனையையும் கேட்டபிறகு, எப்படி ஒருவன் போராடாமல் இருப்பான்! எனவே, அவன் களத்துக்கு வந்தான். அண்ணாவோடு துணைநின்றான்!
  • அண்ணாவிடம் இருந்து இரண்டு முக்கியமான படிப்பினைகளை இன்றைய இளம் அரசியல்வாதிகள் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒன்று… ‘அடித்தட்டு மக்களுக்கு அரசியல் அதிகாரத்தைப் பகிர்வதே, உண்மையான மக்கள் இயக்கம்’ என்று அவர் காட்டினார். 1950 – 60களில், காங்கிரஸில் இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் நிலவுடைமையாளர்கள் மற்றும் பண்ணையார்களே. கட்சிக்கூட்டம் முடிந்து வீட்டிற்குச் சென்றதும், ‘யாரங்கே…’ என்று தான், அவர்களுக்கு முதல்சொல்லே எழும்! ஆனால், துண்டெடுத்து இடுப்பில் கட்டி, ‘கும்பிடுறேன் சாமி’ மட்டுமே சொல்லிப்பழகிய குப்பனையும் சுப்பனையும், ஆட்சிமன்றத்துக்கு அழைத்துச் சென்றார், அண்ணா! அதைக் குறிப்பிட்டு நகைக்குரல்கள் எழுந்தபோது, ‘காந்தி அணிதிரட்டிய அழுக்குவேட்டிகளும் கசங்கிய சேலைகளும் வாங்கிக்கொடுத்ததே இந்த சுதந்திரம். அதில் நான் அவர்களுக்கான பங்கை உருவாக்கிக் கொடுக்கிறேன்…’ என்று திடமாக அறிவித்தார், அண்ணா! இரண்டு… ‘சமூகநீதி என்பது சமமாக நடத்துவது அல்ல, சமமான வாய்ப்புகளை உருவாக்கித்தருவது’ என்று உணர்த்தினார், அண்ணா. 1957ல் ஒரு சட்டமன்ற உரையில், ‘ஹரிஜன மக்கள் காங்கிரஸூக்கு நன்றியுடன் இருக்கவேண்டும்…’ என்று நிதியமைச்சர் சி.சுப்பிரமணியன் பேசியபோது, ‘திருத்திக்கொள்ளுங்கள்… ஒடுக்கப்பட்டவர்களுக்கு நாம் செய்வது உபகாரம் அல்ல, பரிகாரம்’ என்று சொன்னார், அண்ணா!
  • அண்ணா, திராவிட நாடு கோரிக்கையை 1962ம் ஆண்டு கைவிட்டார். அதே ஆண்டில், அவர் நடத்தி வந்த ‘திராவிட நாடு’ பத்திரிகையும் கூட நிறுத்தப்பட்டது. ஆனால், ‘திராவிட நாடு கோரிக்கைக்கான நியாயங்கள் அப்படியே இருக்கின்றன’ என்று அறிவித்தார், அண்ணா. இதை ஒருவித சமாளிப்பு என்று இன்று மட்டம் தட்டுகிறார்கள். ஆனால், அண்ணா பிரிவினை நோக்கத்திலோ, தனிநாடு அடைந்து பிரதமராகும் ஆசையிலோ ‘திராவிட நாடு’ கோரிக்கையை எழுப்பவில்லை.  அப்படி அண்ணா குறுகி யோசிப்பார் என்று சொன்னால், காமராஜரே அதை நம்பமாட்டார். ஆக, அண்ணாவின் திராவிட நாடு இந்திய அரசியலமைப்பின் அதிகார வரம்புக்குள் உருவகிக்கப்பட்ட ஒரு ஒன்றியக் கூட்டமைப்பாகவே இருந்தது. அந்த கூட்டமைப்பில், எல்லா சமூகங்களும் சம அதிகாரம் பெற்று, நிறைந்த வளத்துடன், எவரையும் ஒடுக்காமல் எவராலும் ஒடுக்கப்படாமல் மகிழ்ச்சியாக வாழ்வதையே, அவர் கனவு கண்டார்!