leader-profile-image

பெரியார்

 • சில தலைவர்கள் காற்றுக்கு தோதாக படகை செலுத்துவார்கள். சில தலைவர்கள் காற்றுக்கு எதிராக படகை செலுத்துவார்கள். இதில், பெரியார் இரண்டாம் வகையர்! மக்களுக்கு பிடித்ததைப் பேசி அவர்களை வசியப்படுத்த வேண்டும் என்று நினைக்காமல், மக்களுக்கு வேண்டியதைப் பேசி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முயன்றவர்!
 • பெரியாரைப் பொதுவாக தமிழினத்துக்கு மட்டுமானவராக சுருக்கும் போக்கு இருக்கிறது. ஆனால், அவர் பூமியில் எங்கெல்லாம் சமத்துவமற்று மக்கள் அவதிப்படுகிறார்களோ, அவர்கள் எல்லோருக்குமான தலைவர். அவரே சொன்னபடி, பெரிய நாடு சிறிய நாட்டை ஒடுக்குமென்றால், சிறிய நாட்டின் பக்கம் நிற்பவர். அந்த சிறிய நாட்டில் பெரும்பான்மை மதம் சிறுபான்மை மதத்தை ஒடுக்குமென்றால், அந்த சிறுபான்மை மதத்தின் பக்கம் நிற்பவர். அந்த சிறுபான்மை மதத்தில் உயர்ந்தசாதி தாழ்த்தப்பட்ட சாதியை ஒடுக்குமென்றால், அந்த தாழ்த்தப்பட்ட சாதியின் பக்கம் நிற்பவர். அந்த தாழ்த்தபட்ட சாதியில் ஆதிக்க தொழிலாளி எளிய தொழிலாளியை ஒடுக்குவானென்றால், அந்த எளிய தொழிலாளியின் பக்கம் நிற்பவர். அந்த எளிய தொழிலாளி வீட்டிற்குச் சென்று பெண்களை ஒடுக்குவானென்றால், அந்த பெண்களின பக்கம் நிற்பவர். ஆக, எவரெல்லாம் ஒடுக்கப்படுகிறார்களோ, அவர்களின் பக்கம் நிற்பவர் பெரியார்!
 • பெரியாரின் ஒட்டுமொத்த வாழ்க்கையும், ‘மனிதத்தன்மையுள்ள மனித சமுதாயத்தை உருவாக்குவது…’ என்ற வார்த்தையிலேயே, அடங்குகிறது. மதம், கடவுள், சாதி என அனைத்தையும் அவர் மனிதனுக்குள் மிருகத்தன்மையை புகுத்தும் பூதங்கள் என்பதற்காகவே, எதிர்த்தார். ஆகவே, மனித இனம் அத்தகைய பூதங்களை விரட்டிவிட்டு, மனிதத்தன்மை கொண்டதாக மாறவேண்டும் என்று அவர் எதிர்பார்த்தார்!
 • இந்திய அரசியலில் பெரியாரின் இடம் என்ன? அவர் ‘தேசம்’ எனும் கருதுகோளையே ஏற்காதவர். ‘அயோக்கர்களின் கடைசிப்புகலிடம் தேசியம்…’ என்று சொன்னவர். ஆனாலும், இந்தியாவெங்கும் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களுக்காக அவர் குரல் கொடுத்திருக்கிறார். உதாரணத்துக்கு, காஷ்மீர்! அதில் அவர் கருத்து சொன்னதாக எல்லோரும் நினைக்கிறார்கள். ஆனால், அவர் தீர்வு சொன்னார்! ‘காஷ்மீர் விஷயத்தை விசாரிப்பதற்கு நீங்கள் யார்? உங்களுக்கு அந்த அதிகாரத்தை எவர் அளித்தார்கள்? காஷ்மீரைப் பற்றி முடிவெடுக்கும் உரிமை இந்தியாவுக்கும் அல்ல, பாகிஸ்தானுக்கும் அல்ல, அது காஷ்மீர் மக்களுக்கு மட்டுமே உள்ளது’ என்று பேசினார், பெரியார்!
 • இந்தியாவின் இரண்டு பெரிய அரசு எதிர்ப்புவாதிகள் என்று அறியப்பட்டவர்கள் இருவரே. ஒருவர், காந்தி என்றால், இன்னொருவர், பெரியார்! இரண்டு பேருமே ‘குறைந்தபட்ச அரசு (Minimum Government)’ என்ற கோட்பாட்டை முன்னிறுத்தியவர்கள். அடிப்படையில், பெரியாருக்கும் காந்திக்கும் இடையே, விழிகள் சந்தித்துக்கொள்ளாத, ஆனாலும் மனங்கள் சந்தித்துக்கொள்ளும் அற்புதமான நட்பு இருந்தது. ’மகாத்மா…’ என்ற சொல்லில்லாமல் பெரியார் காந்தியை எப்போதும் அழைத்ததில்லை. காந்தி கொல்லப்பட்ட போது, ’இந்தியாவுக்கு ‘காந்தி தேசம்’ என்று பெயர் வையுங்கள்’ என்று அறிவித்தவர், அவர்!
 • இந்தியா புராணங்களால் ஆன பூமி. பாரதம் என்ற சொல் கூட, புராணங்களில் இருந்து எடுத்தாளப்பட்ட ஒரு சொல் தான். ஆனால், அந்தப் புராணங்கள் அனைத்தும் அழகியலோடு சேர்த்து, அழுக்கை அளிப்பவையாகவும் இருந்தன. ஒரு புராணத்தில் பெண்ணடிமைத்தனம் போற்றப்பட்டால், இன்னொரு புராணத்தில் சாதி மேட்டிமைத்தனம் போற்றப்படும். அதுவும் இல்லாமல், அத்தனைப் புராணங்களுமே அறிவியலுக்கு உகக்காத கருத்துக்களையும் முன்னிறுத்துவனவாக இருந்தன. இதை, மக்களோடு அனுசரித்துப்போக வேண்டும் என்று நினைப்பவன் எதிர்க்கத் துணியமாட்டான். ஆனால், பெரியார் துணிந்தார். ‘என் கழுத்துக்கு கத்தியே வந்தாலும் சரி, இந்த புராணமூட்டைகளில் இருந்து மக்களை விடுவிக்காமல் போகமாட்டேன்’ என்று அவர் உறுதியெடுத்தார். அதை முடிந்த அளவு செய்தும் காட்டினார்!
 • நம்பிக்கையின் இடத்தில் அறிவைக் கொண்டுவந்து வைத்தது தான், பெரியாரின் மிகப்பெரிய சாதனை. அவரது பேச்சுக்களில், எழுத்துக்களில் அதிகமாக இருக்கும் வார்த்தையும் கூட ‘அறிவு’ தான். ‘கடவுளை நம்பாததற்கு தான் நிறைய அறிவு வேண்டும். கடவுளை நம்புவதற்கு முட்டாளாக இருந்தால் போதும்…’, ‘உன் சாத்திரம், சம்பிரதாயம், வெங்காயம், வெளக்கமாறு எல்லாவற்றையும் விட உன் அறிவு பெரிது… அதை சிந்தி…’, ‘கடவுள் சொன்னது, மகான் சொன்னது, ரிஷி சொன்னது, அவதாரப் புருஷன் சொன்னது என்று பார்க்காதே, உன் அறிவு என்ன சொல்கிறது என்று பார்’ போன்றவை, அவரது அறிவாடல்களில் சில துளிகள்!
 • பெரியாரை ஒழுக்கவியலை வைத்து சிலர் விமர்சிப்பதுண்டு. ஆனால், ஒழுக்கம் என்பது என்ன? சிறுபான்மை மதப்பெண்ணின் வயிற்றைக் கிழித்து கருவை எடுத்துக் கொல்வது ஒழுக்கம் என்றால், அந்த ஒழுக்கத்தை பெரியார் விரும்பவில்லை. தாழ்த்தப்பட்ட சாதி மக்களின் குடிசைகளைக் கொளுத்தி உயிர்பலி வாங்குவது ஒழுக்கம் என்றால், அந்த ஒழுக்கத்தையும் பெரியார் ஏற்கவில்லை. அப்படியென்றால் எது ஒழுக்கம்? பெரியாரைப் பொறுத்தவரை, ‘நம்மிடம் மற்றவர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ, அதே போல நாமும் மற்றவர்களிடம் நடந்துகொள்ள வேண்டும்’ என்பது மட்டுமே ஒழுக்கம். அதன்படி பார்த்தால், பெரியார் கடைசிவரை ஒழுக்கசீலராகவே வாழ்ந்து மறைந்த, உத்தமர்!
 • தர்க்கத்தில் பெரியாரை அடிக்கமுடியாது. ‘கடவுள் எனக்கு நல்லது செய்கிறார். அதனால், நான் அவருக்கு நன்றி சொல்கிறேன்… உங்களுக்கு என்ன பிரச்சனை?’ என்று எவனாவது கேட்டால், அடுத்த நொடியே, ‘அப்படியென்றால், கடவுள் எனக்கு தீமை செய்கிறார். ஆகவே, நான் அவரை திட்டுகிறேன். அதில், உனக்கு என்ன பிரச்சனை?’ என்று திருப்பியடிப்பார், பெரியார். இதே வகை தான், ‘கடவுளோடு எனக்கு என்ன வாய்க்கால்வரப்பு தகராறா? நான் அவரை பார்த்தது கூட இல்லை’ என்ற வசனமும்! அண்ணாவுக்கும், கலைஞருக்கும் வசனமெழுதும் திறன் எங்கிருந்து வந்தது என்று திரை ஆர்வலர்கள் வியப்பதுண்டு. இனி வியக்காதீர். அது, பெரியாரிடம் இருந்து வந்தது!
 • பெரியார் எவருக்கு தலைவரோ இல்லையோ, அடிமைப்படும் பெண்களுக்கான தலைவர். அவர் அளவுக்கு பெண்ணியத்தை மிகநுணுக்கமாக, அதே நேரம் மிக தீர்க்கமாக பேசியவர்கள் மிகக்குறைவு. கணவன், மனைவி என்ற சொல்லைக்கூட அவர் ஏற்கவில்லை. ‘இங்கே யாரும் யாருக்கும் அடிமையில்லை. எனவே, இனிமேல் திருமணத்தில் இணைபவர்களை வாழ்க்கைப் பங்காளர்கள் அல்லது இணையர்கள் என்று அழையுங்கள்’ என்றார். அவரது, ‘பெண் ஏன் அடிமையானாள்’ புத்தகத்தைப் பற்றி என்ன சொல்வது? அவரது எதிரிகளுக்கே பிடித்த புத்தகம், அது!
 • பெரியாரை தமிழகத்தோடு மட்டும் தொடர்புபடுத்த முடியாது தான். ஆனாலும், இன்றைய தமிழகத்தின் வளர்ச்சியின் ஆணிவேர் அவரது பங்களிப்பிலேயே உள்ளது. அவர் முன்வைத்த ‘வகுப்புவாரி பிரதிநிதித்துவம்’ என்ற கோட்பாட்டாலேயே, தமிழகம் இன்று அனைவருக்குமான வளர்ச்சியை எட்டியிருக்கிறது. ஆகவே, ‘பெரியாராலே படிச்சேன்… பெரியாராலே வளர்ந்தேன்…’ என்ற சொற்கள் பொய் அல்ல. அவை நிஜம்!
 • ‘ஒவ்வொரு மனிதனும் செத்துப்போவது உண்மை தான். என்றாலும், அவனோடு அவனுடைய முயற்சிகளும், அவன் துவக்கிய காரியங்களும் செத்துப்போய் விடுவதில்லை…’ என்றார், பெரியார். ஆம்! பெரியார் மறைந்துவிட்டார். அதைத்தான் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 24ம் தேதி நாம் நினைவுகூருகிறோம். ஆனால், பெரியாரியம் மறையவில்லை. உலகத்தின் கடைசிக்காலத்தில் உயிரோடிருக்கும் மூன்று பேரில், மூன்றாமவன் பெரியாரியனாக இருப்பான். அவன், முதலாமவனால் அழுத்தப்படும் இரண்டாமவனைக் காக்க போராடுவான்!