leader-profile-image

அம்பேத்கர்

  • ஞானத்தில், பரிவில், சிந்தனையில் புத்தனுக்குப் பிறகு இந்தியாவில் யார்? சந்தேகமே இல்லாமல், அது அண்ணல் அம்பேத்கர்! அம்பேத்கரைப் பற்றி எழுதுவதற்கே, மாதக்கணக்கில் அவர் எழுதிய புத்தகங்களின் மடியில் கிடக்கவேண்டும். அப்படி படித்தாலுமே, அவர் அறிவின் ஒரு துளியையே நம்மால் உணர்ந்துகொள்ள முடியும்!
  • இந்தியாவின் அரசியல் வரலாற்றை காந்திக்கு முன் காந்திக்கு பின் என்று பிரிப்பதைப் போல, இந்தியாவின் சமூக வரலாற்றை அம்பேத்கருக்கு முன் அம்பேத்கருக்கு பின் என்று பிரிக்கலாம். இரண்டாயிரம் ஆண்டுகளாக இம்மண்ணில் நிலவிய அத்தனை சமூக அநீதிகளின் மீதும் சாட்டையென, சவுக்கென விழுந்த உண்மையான சக்கரவர்த்தி திருமகனார், அண்ணல் அம்பேத்கர்! அது மதம் என்றால், ‘மதம் என்பது தத்துவங்களால் ஆனதாக மட்டுமே எப்போதும் இருக்கவேண்டும், விதிமுறைகளால் ஆனதாக இருக்கக்கூடாது’ என்று சொன்னார், அம்பேத்கர். அது சாதியென்றால், ‘நான் பிறந்தது உயர்ந்த சாதி, இன்னொருவன் பிறந்தது தாழ்ந்த சாதி என்று மனிதன் எண்ணமாட்டான், மனநோயாளியே எண்ணுவான்…’ என்றார், அம்பேத்கர். அது பெண்ணுரிமையென்றால், ‘பெண்கள் எவ்வளவு வளர்ந்திருக்கிறார்கள் என்பதை வைத்தே, சமூகம் எவ்வளவு வளர்ந்திருக்கிறது என்பதை நான் மதிப்பிடுவேன்…’ என்று வாதிட்டார், அம்பேத்கர்!
  • மத்தியப் பிரதேச மாநிலம் அம்பவாடாவில் ‘மகர்’ எனும் தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்தவர், அம்பேத்கர். அவரது சாதிக்கு அங்கே வளர்ப்புப்பிராணிகளுக்கு இருக்கும் சுதந்திரம் கூட இல்லை. அவர் கிணத்தடிக்கு போனால் தண்ணீர் தரமாட்டார்கள். அவர் வகுப்பறைக்கு போனால் தரையில் அமரவைப்பார்கள். தொட்டால் தீட்டு என்ற நிலையை கடந்து பார்த்தாலே தீட்டு என்ற நிலை கூட இருந்தது. ஆனால், ஆதிக்கசாதிகளின் அத்தனைச் சதிகளையும் முறியடித்து அவர்களின் சாதிகளில் எவருமே கனவிலும் நினைத்துப் பார்த்திடாத அளவு படித்து, வாழ்வில் வென்று காட்டினார், அம்பேத்கர்! அம்பேத்கரின் தொகுக்கப்பட்ட கல்வி விவரம் இது… மராட்டியத்தில் இருக்கும் எல்ஃபின்ஸ்டோன் கல்லூரியில் பி.ஏ பொருளியல் மற்றும் அரசியல் அறிவியல் பட்டம், லண்டன் ஸ்கூல் ஆஃப் எகானிமிக்ஸில் மாஸ்டர் பட்டம் கூடவே டாக்டரேட், கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மீண்டும் ஒரு பொருளாதார டாக்டரேட் பட்டம், லண்டன் கிரேஸ் இன் நீதி வளாகத்தில் சட்டப்படிப்பு மற்றும் நிறைய கெளரவப் பட்டங்கள்!
  • இந்தயாவிற்கு ‘தேசிய நூல்’ என எதுவும் அதிகாரப்பூர்வமாக இல்லை. ஆனால், அதிகாரப்பூர்வமற்ற தேசிய நூலாக நமது அரசியலமைப்புச் சட்டம் வீற்றிருக்கிறது. அதை, வலியவனுக்கு அதிகநீதி, எளியவனுக்கு குறைவான நீதி என்ற பாகுபாடு இல்லாமல், எல்லோருக்கும் ஒரே நீதி என்ற வகையில் வடிவமைத்தவர், அண்ணல் அம்பேத்கர். மொத்தம் அறுநூறு நாட்களுக்கும் மேல் உறக்கம் தொலைத்து அவர் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கினார். அப்போது அவர் அனுபவித்த இன்னல்கள் நிறைய. முக்கியமாக, இந்தியாவின் பெரும்பான்மை மதமாக இருக்கும் இந்துமதத்தை சீர்திருத்துவதற்காக அவர் உருவாக்கிய ‘இந்து சட்டம்’ பல தடைகளை எதிர்கொண்டது. அது நிறைவேறாமல் போன துக்கத்தில்,  ‘நான் உருவாக்கிய அரசியலமைப்புச் சட்டம் சரியான திசையில் செலுத்தப்படாமல் ஆகுமானால், அதைத் தீயிட்டு கொளுத்தும் முதல் ஆளாக நான் இருப்பேன்…’ என்று அறிவித்து, சட்ட அமைச்சர் பதவியில் இருந்து விலகினார், அம்பேத்கர். பின்னர், இந்து சட்டத்தை நான்கு பாகங்களாக பிரித்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி, அம்பேத்கரின் கனவை நனவாக்கினார், நேரு!
  • சமூகப்புரட்சி, அரசியலமைப்புச் சட்டம் என எல்லாவற்றையும் கடந்து, அம்பேத்கரின் பொருளாதார அறிவை நாம் வியந்து போற்றியாக வேண்டும். அரசியல் வெளியில் இயங்கிய இருபதாம் நூற்றாண்டின் மிகச்சிறந்த பொருளாதார அறிஞர் என்று கூட அவரை நாம் சொல்லலாம். இந்திய ரிசர்வ் வங்கி அம்பேத்கரின் பொருளாதார பங்களிப்பில் மிகமுக்கியமான சாதனை. அவர் ஹில்டன் யங் ஆணையத்தில் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையிலேயே, ரிசர்வ் வங்கிக்கான கருத்துருவாக்கம் உருவானது! இன்று இந்திய தொழிலாளர்கள் ஒரு நாளுக்கு 8 மணி நேரம் மட்டும் வேலைநேரம் என்ற அளவில் பணிபுரியவும், அம்பேத்கரே காரணம்! பொருளாதாரத் துறையைப் போலவே, ஆய்வுத்துறையிலும் அம்பேத்கர் நின்று விளையாடியிருக்கிறார். அவரது ஆய்வுகள் எல்லாமே அசரவைக்கத்தக்க நிதானத்துடன் தரவுகளுடன் தர்க்கமும் சேர்த்து எழுதப்பட்டவையாக இருக்கும். Castes in India : Their Mechanism, Genesis and Developement, The annihalation of Caste, Who were the Shudras போன்ற புத்தகங்கள் இந்தியாவின் சாதி அமைப்பை மிகப்பெரிய புரிதலுடன் நமக்குக் காட்டுபவை. அதுவும், Castes in India : Their Mechanism, Genesis and Developement புத்தகத்தை எழுதியபோது, அம்பேத்கருக்கு வயது வெறும் 23 மட்டுமே! 
  • அம்பேத்கர் ஒரு வழக்கறிஞர். பம்பாய் நீதிமன்றத்தில் தான் பெரும்பாலும் அவர் ‘Practice’ செய்தார். அப்போது, அவர் வாதிட்ட வழக்குகளை நாம் கட்டாயம் பார்க்கவேண்டும். இந்துக்கள், கிறித்துவர்கள், இஸ்லாமியர்கள் என எந்தப் பாகுபாடும் பார்க்காமல் அம்பேத்கர் எல்லோருக்கும் சேர்த்து வாதாடியிருக்கிறார். சில தருணங்களில், பாலியல் தொழிலாளர்களுக்காகவும் கூட அம்பேத்கரின் கறுப்பு அங்கி கத்தி சுழற்றியிருக்கிறது. அம்பேத்கர் வாதிட்ட வழக்குகளில் முக்கியமானவை என்று மூன்று வழக்குகளை குறிப்பிடலாம்… முதலில், ஜாவல்கர் வழக்கு! 1926ல் டிங்காராவ் ஜாவல்கர் எழுதிய ‘தேசத்தின் எதிரிகள் (Deshanche Dushman)’ என்ற புத்தகம் வெளியானது. அதில், ‘லோக்மான்யா திலகர், விஷ்ணுசாஸ்திரி சிப்லங்கர் போன்ற சில பிராமண தலைவர்கள் ஜோதிராவ் பூலேவை ஒரு கிறித்துவர் என்று தவறாக சித்தரிக்கிறார்கள். இவர்கள் தான் தேசத்தின் உண்மையான எதிரிகள்’ என்று ஜாவல்கர் எழுதினார். இதை எதிர்த்து, பம்பாய் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. ஆரம்பத்தில், ஜாவல்கருக்கு எதிராகவே நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். மறு ஆய்வின் போது, ஜாவல்கருக்கு ஆதரவாக அம்பேத்கர் தோன்றினார். ‘பூலேவை ஒரு கிறித்துவர் என நீங்களே முடிவெடுத்துவிட்டீர்களா…’ என்று அம்பேத்கர் நீதிபதிகளை நோக்கி கேள்விகேட்டார். வழக்கு ஜாவல்கருக்கு சாதகமாக முடிந்தது! ‘பிராமணர்கள் – பிராமணர்கள் அல்லாதவர்கள் வழக்கு’ என்றே, இன்றும் ஜாவல்கர் வழக்கு நினைவுகூரப்படுகிறது. 
  • இரண்டாவது, பிலிப் ஸ்பிராட் என்ற இங்கிலாந்து கம்யூனிஸ்ட்டுக்கு ஆதரவாக அம்பேத்கர் வாதிட்ட வழக்கு! அப்போது, ‘இந்தியா மற்றும் சீனா’ என்ற தலைப்பில் ஒரு துண்டுபிரசுரம் வெளியிட்டு கைதாகியிருந்தர், பிலிப். அவர் மீது தேசத்திற்கு எதிராக செயல்பட்டது போன்ற பல பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஆனால், அம்பேத்கர் ‘பிலிப் எந்தவிதத்திலும் இந்தியாவை அவமதிக்கவில்லை. பிரிட்டிஷ் அரசாங்கத்தின் காலனியாதிக்கத்தையே அவர் துண்டு பிரசுரத்தில் சாடுகிறார்…’ என்று வாதிட்டார். பிலிப், அந்த வழக்கில் வென்றார்! மூன்றாவது, 1933ம் ஆண்டு ‘சமாஜ்ஸ்வஸ்தியா (SamajSwastiya)’ என்ற பத்திரிகை ஆசிரியர் ரகுநாத் தான்டோ கார்வேவுக்கு ஆதரவாக அம்பேத்கர் தோன்றிய வழக்கு. கார்வே, சமாஜ்ஸ்வஸ்தியா பத்திரிகையின் மூலம் இந்திய சமூகத்தில் பாலியல் விழிப்புணர்வின் அவசியம் குறித்து எழுதிவந்தார். இது பழைமைவாதிகளுக்கு பிடிக்கவில்லை. அவர்கள் கார்வேவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர். ஆனால், ‘ஆபாசம் கருத்துகளில் இல்லை. பார்க்கும் பார்வையில் தான் இருக்கிறது’ என்று வாதிட்டு, அம்பேத்கர் கார்வேவை விடுவித்தார்!
  • அம்பேத்கரும் காந்தியும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்பார்கள். ஆனால், இருவரும் ஒரு மாமலையின் இரண்டு சிகரங்கள். அம்பேத்கர் அதிகமான சமூகப்பார்வைகள் கொண்ட காந்தி என்றால், காந்தி அதிகமான அரசியல்பார்வைகள் கொண்ட அம்பேத்கர்! இரண்டு பேருமே வெவ்வேறு தருணங்களில் ஒருவரை ஒருவர் Influence செய்திருக்கிறார்கள். முக்கியமாக, காந்தி அம்பேத்கரால் நிறையவே ஊக்கம்பெற்றார். 1932ம் ஆண்டு எரவாடா சிறையில் வைத்து, காந்தி அம்பேத்கரை முதன்முதலாக சந்தித்தார். அப்போது, அம்பேத்கர் ஒடுக்கப்பட்டவர்கள் குறித்து உருக்கமாக அதே நேரம் தீர்க்கமாக முன்வைத்த நியாயங்களே, பின்னாளில் ‘கலப்பு மணங்களுக்கு மட்டுமே நான் ஆசி தருவேன். முக்கியமாக, மணமக்களில் ஒருவர் ஒடுக்கப்பட்டவராக இருக்கவேண்டும்…’ என்று அறிவிக்கும் அளவுக்கு காந்தியை நகர்த்தியது! அதே போல, காங்கிரஸை மிகவெறுப்பவராக இருந்தும், காந்தியின் மனசாட்சிக்கு மதிப்பளிக்கவேண்டும் என்ற எண்ணத்திலேயே, அம்பேத்கர் இந்தியாவின் சட்ட அமைச்சர் பதவியை ஏற்றார்!
  • அம்பேத்கர் சிந்தித்தவர் மட்டுமில்லை, போராடியவர். ‘கற்பி… ஒன்றுசேர்… புரட்சிசெய்…’ என்ற வார்த்தைகளை அவர் ஏதோ வானத்தில் இருந்து பிறருக்கு போதிக்கவில்லை. ஒரு தோழனென நமக்கு அருகே மண்ணில் நின்று அவர் அவ்வரிகளைச் சொன்னார். அம்பேத்கரின் மிகமுக்கியமான போராட்டம் 1927ம் ஆண்டு அவர் நடத்திய ‘மகத் சத்தியாகிரகம்’ போராட்டம். மராட்டிய மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய ஊர் தான் மகத். அங்கே இருக்கும் குளத்தில் தாழ்த்தப் பட்டவர்கள் தண்ணீர் எடுக்கக்கூடாது என்று உயர்சாதி ஆணவக்காரர்கள் தடை விதித்தார்கள். அதை எதிர்த்து மிகப்பெரிய சத்தியாகிரக போராட்டத்தை அறிவித்தார், அம்பேத்கர். ‘இயற்கை அளிக்கும் நீரை மறுக்க உங்களுக்கு என்ன உரிமை’ என்று மகத் கிராமத்தின் தெருக்களில் மேடைபோட்டு முழங்கினார், அம்பேத்கர். அதே நிகழ்வின் போது தான், ‘உயர்சாதி பெண்களைப் போலவே இனி தாழ்த்தப்பட்ட பெண்களும் சேலையை தோளின் மீது நன்றாக உயர்த்திக் கட்டவேண்டும்…’ என்று அம்பேத்கர் ஆணையிட்டார். அதை ஏற்று ஏராளமான தாழ்த்தப்பட்ட பெண்கள் உயர்சாதிப் பெண்களைப் போலவே சேலையை தோளில் நன்றாக சுற்றி உயர்த்திக் கட்டினர். பின்னர், மகத் குளத்தை தனியார் சொத்தாக உருமாற்றி, நீதிமன்றத்திற்கு வழக்கை கொண்டு சென்றனர் உயர்சாதிக் காரர்கள். அம்பேத்கரும் ‘வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும்போது நாம் போராடுவது முறையாகாது’ என்று அறிவித்து, போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்தார். மொத்தம் 10 ஆண்டுகள் வழக்கு நடந்து, 1937ம் ஆண்டு ‘தாழ்த்தப்பட்டவர்களுக்கும் மகத் குளத்தில் நீர் எடுக்க உரிமையுண்டு’ என்று தீர்ப்பெழுதப்பட்டது!
  • ஒடுக்கப்பட்டோர் உரிமைக்கான போராட்டங்களை முன்னெடுக்கும் அத்தனைப் பேரும் அம்பேத்கரிடம் கற்க வேண்டிய பாடம் ஒன்று உண்டு… அது ‘ஜனநாயகம்’! உண்மையில், இந்தியாவில் ஆயுதம் ஏந்தி போராடுவதற்கான 100 சதவிகித நியாயங்கள் காந்தி, நேரு, நேதாஜி என எல்லோரையும் விட அம்பேத்கருக்கு மட்டுமே இருந்தது. அவரது மக்கள் உயிரற்ற பண்டங்களைப் போல உயர்சாதியினரால் நடத்தப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அதைக் கண்டு 24 மணிநேரமும் மனம் கொதித்தார், அம்பேத்கர். ஆனாலும், எந்த இடத்திலும் தாழ்த்தப்பட்ட மக்களை வன்முறையை நோக்கி செலுத்த முனைய வில்லை, அம்பேத்கர். ‘குரல் எழுப்புங்கள். ஆனால், காயப்படுத்தும் வகையில் பேசாதீர்கள். கரம் உயர்த்துங்கள். ஆனால், வன்முறை ஆயுதங்களை தொடாதீர்கள். முன் செல்லுங்கள். ஆனால், எவரையும் முட்டி கீழே தள்ளாதீர்கள்’ என்றே அவர் சொன்னார்! ஒருவகையில் பார்த்தால், ‘மகாத்மா’ என்ற பதம் காந்திக்கு அடுத்து அம்பேத்கருக்கும் கூட சரியாகவே பொருந்தும்!
  • 1956ம் ஆண்டு புத்தமதத்தை தழுவி, இந்தியாவை பண்பாட்டு அடிப்படையில் பலபடிகள் முன்னால் நகர்த்தினார், அம்பேத்கர்! வாழ்வு முழுவதுமே, சதுர் வர்ண கோட்பாடு அடிப்படையில் எழுந்த சனாதன மதத்துக்கு எதிராக யுத்தம் செய்தார், அம்பேத்கர். ஆனால், அவரது யுத்தங்கள் எல்லாமே தத்துவபலம் கொண்ட சனாதன மதத்தை சீண்டியதே ஒழிய, தாண்ட முடியவில்லை. எனவே, வேதங்களும் உபநிடதங்களும் புராணங்களும் இல்லாமலே சனாதன மதத்தின் வேரை அசைக்கும் புத்தத்தை ஏற்று, சனாதனத்துக்கு அழியா பயத்தை உண்டுபண்ணினார், அம்பேத்கர். அவர் எழுதிய புத்தகங்களிலேயே தலைச்சிறந்த புத்தகம் என்று போற்றப்படும் ’புத்தமும் அவரது தம்மமும்’ புத்தகம், சனாதனத்தை எக்காலத்துக்கும் கட்டுப்படுத்தி அலறவைத்துக் கொண்டே இருக்கும் வல்லமை பெற்றது!
  • இந்தியாவில், இரண்டாயிரம் ஆண்டுகளாக தாழ்த்தப்பட்டவர்கள் ஒடுக்கப்பட்டார்கள். மெளரிய சாம்ராஜ்ஜியம் இருந்தது. பின்னர் முகலாயர்கள் வந்தார்கள். அதற்கும் பின்னர், ஆங்கிலேயரும் வந்தார்கள். ஆனால், அப்போது எல்லாம் கிடைக்காத ஒடுக்கப்பட்டோருக்கான உரிமை அம்பேத்கர் என்ற மகாநாயகன் வந்த இருபது ஆண்டுகளில் கிடைத்தது. இன்று இந்தியாவில் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் சிறிய அளவுக்கேனும் மரியாதையான வாழ்வை பெற்றிருக்கிறார்கள் என்றால், அது அம்பேத்கரின் மூலமே. இதனாலேயே, இந்தியாவின் ஆதிக்கச் சாதியாளர்களால் அதிகமாக வெறுக்கப்படும் ஒரு தலைவராக நீடிக்கிறார், அம்பேத்கர். இம்மண்ணில் இன்னும் கூட அம்பேத்கர் சிலைகளே அதிகம் உடைக்கப்படுகின்றன. ஆனாலும், எத்தனை முறை தகர்த்தாலும், எவ்வளவு வீரியமாக எதிர்த்தாலும், அழிக்கமுடியாத பெரொளியாக வளர்ந்துகொண்டே இருப்பார், பாபாசாகேப் அம்பேத்கர்!

ஜெய்பீம்!